22 வைத்தியின் உபசாரம்

சாயந்திரம் வேலை முடிந்ததும், உற்சாகமாக வீடு திரும்பினான் வைத்தி.

மீண்டும் குடும்ப வாழ்க்கை!

வித விதமாகச் சமைத்துப்போட மனைவி வந்துவிட்டாள்!

ரஞ்சி கோபித்துக்கொண்ண்டு, தாய் வீட்டுக்குப் போனதிலும் ஒரு நன்மை விளைந்திருந்தது. பொழுது போகாமலிருந்ததில், வித விதமாகச் சமைக்கக் கற்றுக்கொண்டு வந்திருந்தாள்.

தனது மகிழ்ச்சியில் பாதியாவது அவளிடமும் இருக்காதா! இன்று ஏதாவது நல்ல டிபனாகப் பண்ணி வைத்திருப்பாள்.

உள்ளே நுழைந்தவன், சற்று திகைத்துத்தான் போனான். அவனுடைய இன்பக் கனவுகளுக்கும், நிதரிசனத்துக்கும் சம்பந்தமே இருக்கவில்லை.

சோபாவின் கைப்பிடியில் ஈரத் துண்டு, அதன்மேல் தோய்த்த துணிமணிகள். `மலேசிய நண்பன்’ தினசரி இதழ், இதழாகப் பிரிந்து, ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் உபயத்தால் தரை பூராவும் பரவிக் கிடந்தது.

`இப்படி வீண் செலவு செய்தால், யார் விளக்குக் காசு கட்டறது!’ பழக்க தோஷத்தால், முதலில் கோபம் எழுந்தது.

`அடக்கு! அடக்கு!’ என்று உடனே ஒரு எதிர்ப்புக்குரல் கேட்டது.

இவளோ தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறாள். மீண்டும் கோபித்துக்கொண்டு, எங்கேயாவது போய்த் தொலைந்துவிட்டால், யார் சமாதானப்படுத்தி அழைத்து வருவது!

மனதை அடக்கும் உத்தியாக, மூச்சை இழுத்து விட்டபடி, துணிமணிகளை மடிக்கத் தொடங்கினான்.

பழைய தமிழ்ப் படங்களில், ஹீரோ ஒண்டியாக ரௌடிகளைத் துவம்சம் செய்தபின் வரும் போலீசைப்போல, வைத்தி எல்லாவற்றையும் மடித்து முடித்தபின், ரஞ்சிதம் எழுந்து வந்தாள், வாயைப் பிளந்து கொட்டாவி விட்டபடி.

“வந்துட்டீங்களா?” அவள் குரலில் தூக்கக் கலக்கம்.

`இது என்ன முட்டாள்தனமான கேள்வி? வராமலா இங்க என்னைப் பாக்கறே?’ என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டான். இப்படி அடக்கி, அடக்கி, தனக்கு மன அழுத்தம்தான் வரும் என்று தோன்றியது. கஷ்டப்பட்டு முகத்தில் கனிவை வரவழைத்துக்கொண்டான்.

“நீ எதுக்கு எழுந்தே? போய் படுத்துக்கம்மா. நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன்? ஒனக்கு இப்போ என்ன வேணும், சொல்லு!”

“டீ போட்டுட்டீங்களா?” என்று விசாரித்தாள் தர்ம்பத்தினி.

“டீயாவது, கோப்பியாவது! என்னை என்ன..?” வைத்தி உரக்க ஆரம்பிக்க, ரஞ்சிதம் பெருமூச்சு விட்டபடி எழுந்தாள். `மோகம் மூன்று நாள்’ என்று ஏதோ சொல்லி வைத்திருக்கிறார்களே! நாம் வந்து நான்கு நாட்கள் ஆகவில்லை?

“சரி. சரி. கத்த ஆரம்பிக்காதீங்க!” என்றபடி எழுந்தாள்.

“நீ டீ குடிச்சா, தெரியும் சேதி!” தொனியை மாற்றினான் வைத்தி. “இனிமே மைலோ, ஹார்லிக்ஸ் இதெல்லாம்தான் குடிக்கணும். விளையாட்டு வீரர்களெல்லாம் அப்படித்தானே செய்யறாங்களாம்! டி. வியில காட்டறாங்களே!” வேளை கெட்ட வேளையில் தூங்கியதில் ரஞ்சியின் தலை கனத்தது. இவர் வேறு ஏதேதோ பேசி குழப்புகிறாரே!

“நான் எப்பவும் இந்த வேளையில..,” என்றவளை இடைமறித்தான் வைத்தி. “நான்தான் இப்படி சோனியாப் போயிட்டேன். என் மகனாவது..!” குரல் தழதழத்தது.

“இப்ப எனக்கு டீ வேணும்,” என்றாள் பிடிவாதமாக. “எப்பவும் தூக்கம் தூக்கமா வருது!”

ஓட்டமும் நடையுமாகச் சமையலறைக்கு விரைந்தான் வைத்தி. கண்ணில் ஒரு மின்னல்.

சிறிது பொறுத்து, ஒரு கோப்பையை மனைவியின்முன் வைக்க, அவள் சந்தேகத்துடன் முகத்தைச் சுளித்தபடி, “என்னது இது?” என்றாள்.

“ஸ்ட்ராங் டீ! நீ ஆசைப்பட்டுட்டே! அதனால, சிரமப்பட்டுப் போட்டேன். இன்னும் நெறைய ஃபிளாஸ்கில வெச்சிருக்கேன்”. அவன் குரலில் தேன் வழிந்தது. “ராத்திரி தூக்கம் வராட்டி,” என்று விஷமச் சிரிப்புடன் அவளைப் பார்க்க, அவள் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தாள்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *