34 வைத்தியமும் பைத்தியமும்

கறிகாய் நறுக்கியபடி இருந்த பாக்கியம் நடுநடுவே கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

“வெங்காயம் ரொம்பக் காரமா, பாக்கியம்?” என்று கேட்டபடி அருகில் வந்த மணி, “அட, கீரையா! அதுக்குக்கூடவா கண்ணில தண்ணி வருது?” என்று அதிசயப்பட்டார்.

பின், “ஆமா? நேத்தும் கீரை, முந்தா நாளும் கீரை! உருளைக்கிழங்கு, வாழைக்காய் எல்லாம் வாங்கிட்டு வந்தேனே! வாய்க்கு ருசியா..,” என்று ஏதோ சொல்வதற்குள், “அதெல்லாம் அப்படியே விஷம்! நான் ஒருநாள் தண்டுக்கீரை, அப்புறம், தவசிமுருங்கை, பசலைக்கீரை — இப்படி மாத்தி மாத்தித்தானே சமைக்கிறேன்! அது எப்படி, எல்லாக் கீரையும் ஒண்ணாகிடும்?” என்று வாதம் செய்தாள்.

`தினமும் கீரையே சாப்பிட்டா, போகிற போக்கில மாடாவே..,’ என்று முணுமுணுத்தார் மணி. அவள் வாதம் நியாயமாகப் பட்டதால், உரக்கச் சொல்ல தைரியம் வரவில்லை.

“ம்! டாக்டர் எவ்வளவோ சொல்லியும் கேக்காததாலதானே சொர்ணம் அண்ணி..,” என்றவள் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். “இத்தனைக்கும், என்னைவிட ஒரு வயசு சின்னவங்க. இப்படி அநியாயமா..!”

“அவ ஆயுசு அவ்வளவுதான்! விடுவியா! அதையே நினைச்சுக்கிட்டு,” என்று எரிச்சலுடன் கூறியவர், “டாக்டர் சொல்றதை எல்லாம் கேட்டா மட்டும், யாராவது யமனுக்கு டிமிக்கி குடுக்கமுடியுமா, என்ன!”

பாக்கியத்தின் அழுகை பலத்தது.

சமாதானமாகப் போகலாம் என்றெண்ணிய மணி, “அப்படி என்னதான் சொன்னாராம் அந்த டாக்டர்?” என்று கேட்டுவைத்தார்.

“வீட்டை விட்டு வெளியேவே போகக்கூடாதுன்னு..!”

“பைத்தியம் பிடிக்க வழி சொல்லி இருக்காரு அவரு!”

“ஒங்ககிட்ட போய் சொல்றேனே!”

“சரி. சரி. எனக்கு மட்டும் துக்கமில்லையா? சொர்ணத்தோட காரியமெல்லாம் முடிஞ்சு வந்ததிலேருந்த் மனசு ஒரு மாதிரியா இருக்கு!” என்று சொல்லிப்பார்த்தார்.

“ஒங்களுக்கு மனசு மட்டும்தான் சரியா இல்ல. எனக்கு ஒடம்பும்..!” அவளது நீண்ட பெருமூச்சு மீதியைச் சொல்லிற்று. ஏதாவது மருத்துவப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால்கூட, அதிலிருக்கும் அத்தனை வியாதிகளும் தனக்கும் வந்துவிட்டதாகப் பிரமை பிடித்துவிடும் பாக்கியத்திற்கு.

ஆயாசத்துடன், “இப்ப என்ன?” என்றார் மணி.

“அதை ஏன் கேக்கறீங்க!” என்று அவள் தோளைப் பிடித்துவிட்டுக்கொள்ள, “கத்தியை இப்படிக் குடு,” என்று கையை நீட்டினார்.

“ஒண்ணும் வேணாம். அப்புறம், `இந்த வீட்டில பொம்பளை வேலையெல்லாம் நான் செய்ய வேண்டியிருக்கு!’ அப்படின்னு முணுமுணுப்பீங்க!” என்று பிகு செய்துகொண்டாள்.

“அது..,” மணிக்கே சிரிப்பு வந்தது தனது `ஆண்பிள்ளை பந்தா’வை எண்ணி. “நீ ஏதாவது செய்யச் சொன்னாதான் அப்படி. இப்ப நானேதானே கேக்கறேன் பரவாயில்ல, குடு!”

இரும்பு சாமான் எதையாவது ஒருவர் கையில் கொடுத்தால், அவருடன் சண்டை மூளுமாமே! ஏற்கெனவே, வீட்டில் நிம்மதி இல்லை. இன்னும் புதிய சண்டைகள் வேறு வேண்டுமா!

கத்தியைப் பலகைமேல் வைத்துவிட்டு, “வெளியே போனா, கேரட்டு வாங்கிட்டு வாங்க!” என்று பணித்தாள். “வயசாகிட்டு வருதா! கண்ணு கொஞ்சம் மங்கலா இருக்கிற மாதிரி.. நாம்பளே இயற்கை வைத்தியம் பண்ணிக்கிட்டா நல்லதுதானே! இப்பல்லாம், காலையில சூரிய நமஸ்காரம்கூடச் செய்யறேன்!” என்று பெருமையாகத் தெரிவித்தாள்.

“என்னென்ன வெணுமோ, எல்லாத்துக்கும் ஒரு பட்டியல் போட்டுக் குடு!” சிரிக்காது சொன்னார் மணி.

“ஒரு பெரிய புட்டி தேன்!”

“தேனா? போன வாரம்தானே வாங்கிட்டு வந்தேன்!”

“அது போ..ன வாரம்!”

“அது எதுக்கு? கண்ணுக்கா, மூக்குக்கா?”

அவர் கேலிதான் செய்கிறார் என்பது சந்தேகமறப் புரிய, பாக்கியத்தின் உதடுகன் இறுகின. மெளனம் சாதித்தாள்.

இப்போதுதான் கொஞ்சம் சுமுகமாகப் பேசத் தொடங்கி இருக்கிறாள், எங்கே பழையபடி, திரும்பவும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு படாத பாடு படுத்தப்போகிறாளோ என்று பயந்த மணி, முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக்கொண்டார்.

“நான் நெஜமாத்தான் கேக்கறேன், பாக்கியம். ஒன்னைமாதிரி.. இந்த கைவைத்தியமெல்லாம் எனக்கு என்ன தெரியும், சொல்லு!”

முனகலாக, “அங்க வேளை கெட்ட வேளையில தலைக்குக் குளிச்சது, வந்தவங்ககூட சேர்ந்து ஓயாம அழுதது, எல்லாமாச் சேர்ந்து, ஒரே சளி பிடிச்சிருக்கு!” என்றாள்.

“அப்படிச் சொல்லிட்டுப் போயேன்! இதுக்குப் போய்..!” என்றார் அலட்சியமாக.

“ஒங்களை மாதிரிதான் எங்க மாமா பொண்ணு சரசா..,” அவள் முடிப்பதற்குள், ஆர்வத்துடன் குறுக்கிட்டார் மணி: “யாரு, நம்ப கல்யாணத்தன்னைக்கு நீலத் தாவணி போட்டுக்கிட்டு, துடிய்..யா ஒரு பொண்ணு..!”

பாக்கியம் அவரையே உற்றுப் பார்த்தாள். “வயசானதில எது கொறைஞ்சிருந்தாலும், ஒங்க ஞாபகசக்தி மட்டும்.. ஆகா!”

அசட்டுச்சிரிப்புடன் மணி நெளிந்தார்.

“என்னைவிட ரெண்டு வயசுதான் சின்னவ அவ!” என்று ஏதோ சொல்லப்போன பாக்கியத்தை தன்னையுமறியாமல் இடைமறித்தார்: “அவ்..வளவு வயசாகிடுச்சா?”

“என்னது?” பாக்கியம் முறைத்தாள்.

“இல்ல, இல்ல, சொல்லு. ஒங்க சரளாவுக்கு..?”

“சரளா இல்ல. சரசா. அவளுக்கும் என்னைமாதிரிதான்!”

“என்னது? கீரை, கேரட்டு, தேன் எல்லாத்துமேலேயும் தனி மோகமா?”

பாக்கியம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள். “ஒங்களுக்குக் கேலியா இருக்கு! அவளுக்கும், பாவம், சளியும், இருமலுமா..!”

“புட்டி புட்டியா தேன் குடிக்கச்சொல்லி நீ அட்வைஸ் குடுத்திருப்பியே!”

அவரது குரலில் தொக்கியிருந்த கேலியைப் புரிந்துகொள்ளாது, “அவ யார்கிட்டேயும் சொல்லாம, அசிரத்தையா இருந்துட்டா. டாக்டர்கிட்ட போனப்போ, `நீங்க மொதல்லேயே வந்திருக்கணும்’ அப்படின்னுட்டாரு!”

“பிழைக்கத் தெரிஞ்சவர்! அப்பத்தானே நல்லா கறக்க முடியும்!”

“சும்மா இருங்க. அவளுக்கு என்ன கோளாறு தெரியுமா?”

“உசிரு போறதுக்கு எதுவா இருந்தா என்ன?”

“கான்சர்! சுவாசப் பையிலே!”

“அட! அவள் சிகரெட் பிடிப்பாளா?”

“கேலியா செய்யறீங்க? ஒங்களுக்கு வந்தா தெரியும்!”

“இதுக்குத்தாம்பா நான் சிகரெட்கிட்டேயே போறதில்ல,” என்று சந்தோஷப்பட்டுக்கொண்ட மணி, “வெறும் புகையிலைதான்!” என்றார் மெள்ள.

“ஒங்ககிட்டபோய் சொல்றேனே!”

“கோவிச்சுக்காதே, பாக்கியம்! ஒங்கிட்ட விளையாடாம, வேற யார்கிட்ட விளையாடப்போறேன், சொல்லு!”

அதற்கும் அவள் மசிவதுபோல் தெரியாததால், “ ஒனக்கு என்ன! தேன் வாங்கிட்டு வரணும். அவ்வளவுதானே? சொல்லிட்டேயில்ல? விடு. பெரிய புட்டியா ரெண்டு..”.

“இங்க என்ன, காசு கொட்டியா கிடக்குது! ஏன்தான் இப்படிக் காசைக் கரியாக்குவீங்களோ!”

`தாக்குப்பிடிக்க முடியாது,’ என்பதாக மணி தலையை ஆட்டிக்கொண்டார். ஒரு சிறு காகிதத்தை எடுத்துப் பட்டியல் போடத் துவங்கினார். `ஒரு டஜன் எலுமிச்சம்பழம்! அதை விட்டுட்டாளே! ரெண்டா வெட்டி, தலையிலே தேய்ச்சுக்கிட்டா, எனக்கு பைத்தியமாவது பிடிக்காம இருக்கும்!”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *