10 வேறொரு பெண்ணைப் புகழாதே

அடுப்பில் ஏதோ கருகிய வாசனை.

வைத்தி மூக்கைச் சுளித்தான். ஹோட்டல் சமையலில் நாக்கு செத்துப்போகிறதென்று கல்யாணம் செய்துகொண்டோமே! இவள் சமையலை எப்படிக் காலமெல்லாம் சகித்துச் சமாளிக்கப் போகிறோமோ என்ற கலக்கம் பிறந்தது.

“என்ன ரஞ்சி! ஒங்கம்மாவைக் கொஞ்சநாளாக் காணோம்? வாரத்துக்கு நாலு தடவை வந்துடுவாங்க?” என்று குரல் கொடுத்தான்.

“பாவம்! ஒடம்புக்கு முடியலியோ, என்னவோ!” என்று சமையலறையிலிருந்தே பதில் குரல் கொடுத்தவள், ஏதோ புரிந்தவளாக, ஆக்ரோஷமாக வெளியே வந்தாள். “அது என்ன, `வாரத்துக்கு நாலு தடவை?’ அம்மாவைக் கண்டா ஒங்களுக்கு எப்பவுமே இளக்காரம்தான்!” கோபமாகப் பேச ஆரம்பித்தவள், அழுகையில் முடித்தாள்.

“சேச்சே! அப்படிச் சொல்வேனா? அவங்க இல்லாட்டி நீ ஏது!”

அவள் முகம் மலர்ந்ததைப் பார்த்து, வைத்திக்குப் பெருமை உண்டாயிற்று. பரவாயில்லை, மனைவியை ஓரளவுக்காவது சமாளிக்கத் தெரிகிறதே இப்போதெல்லாம்!

“எனக்கு ஏன் இப்ப ஒங்கம்மா ஞாபகம் வந்திச்சு, தெரியுமா?”

தன்னிச்சையாக, இரு கரங்களாலும் தனது பின்பகுதியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் ரஞ்சி. “குண்டாப் போயிட்டேனா?”

விஷமத்தனமான புன்னகையுடன், “சில இடத்தில சதை போட்டாக்கூட..!” என்று தலையை ஆட்டியவன், “கை நிறைய..” என்று அவளைப் பிடிப்பதுபோல் சைகை செய்ய, ரஞ்சிக்கு ஒரேயடியாக வெட்கம் வந்தது. தன் அழகில் இப்படி மயங்குகிறாரே!

உடனே, கணவனுக்குப் பிடிக்காத மூக்குக்கண்ணாடி நினைவு வர, அவசரமாக அதைக் கழற்றப்போனாள்.

“கழட்டாதே. ஏன் கழட்டறே? ஒன்னை இப்படிப் பாத்தே பழகிட்டேனா! இப்பல்லாம்.. தெருவில எந்தப் பொண்ணு கண்ணாடி போட்டிருந்தாலும், தெரியல, ஒரே மயக்கம்!” என்று வாய்க்கு வந்தபடி உளற ஆரம்பித்தான்.

ரஞ்சி ஆத்திரம் தாங்காது, உள்ளே நடப்பு செய்ததும்தான் தன் தவறு புரிந்தது அவனுக்கு. இன்னொரு பெண்ணைப் புகழ்ந்தால் — அது அவனுடைய பாட்டியாகவே இருந்தாலும் — அதை எந்தப் பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பாடத்தைக் கற்றது அப்போதுதான்.

தான் சொன்னதை இவள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டாளே என்ற வருத்தத்துடன், நொடிக்கு ஒரு தடவை உள்ளே பார்ப்பதும், பிறகு பெருமூச்சுடன் தலையைக் குனிந்துகொள்வதுமாக இருந்தான்.

அவனது செய்கை ரஞ்சியின் கண்களுக்குத் தப்பவில்லை. `எப்போதும், யாரைப் பார்த்தாலும், உன் நினைவாகவே இருக்கிறது!’ என்பதைத்தான் வழக்கம்போல், சொல்லத் தெரியாமல் சொல்லி இருக்கிறார்! இதற்குப்போய் கோபித்துக் கொள்வானேன்!

இப்போது என்ன சொல்லி அவரைச் சமாதானப்படுத்துவது என்று குழம்பியவள் காதில் பாக்கியத்தின் குரல் கேட்கிறது: “விதவிதமா சமைச்சுப்போடணும். அடிக்கடி ரெண்டு பேருமா சேர்ந்து வெளியே போகணும். அப்பத்தான்..!” அம்மாவே எதிரில் நின்று, மீதி சொல்ல முடியாததை கண்சிமிட்டிப் புரியவைப்பதுபோல் இருந்தது அவளுக்கு.

“என்னங்க!” கோபத்தை மறந்து அழைத்தாள்.

சோகத்துடன் தலைநிமிர்ந்தான் வைத்தி.

“வந்து..,”தயங்கினாள். “எனக்கு என் சமையல் அலுத்திடுச்சு!”

`எனக்கு நாக்கே செத்துடுச்சு. அதனாலதானே ஒங்கம்மா நினைவு வந்திச்சு! வகைவகையா சமைச்சுப் போடுவாங்க!’ மனதில் தோன்றியதை உரக்கச் சொல்லாமலிருக்க அரும்பாடு பட்டான்.

“இன்னிக்கு நாம்ப வெளியில போய் சாப்பிடலாமா?”

எப்படியோ அவள் சமாதானம் ஆனால் போதும் என்று வைத்தி தலையாட்டினான். தனிமையில் பர்சைத் திறந்து பார்த்துப் பெருமூச்சு விடத்தான் முடிந்தது. `வேணும்! எனக்கு நல்லா வேணும்! யோசிக்காம வாய்விட்டதுக்குத் தண்டனை! யாரோட அம்மா எப்படிப்போனா எனக்கென்ன?’

தெருவில் ஆணும் பெண்ணுமாக நிறையபேர் போய்க் கொண்டிருந்தார்கள் — வேலை முடிந்து திரும்புகிறவர்கள், கர்ப்பிணியான மனைவியின் உடற்பயிற்சிக்காக அவளுடன் பொறுமையாக, பெருமையாக, நடந்து செல்லும் கணவன்மார்கள், கடைக்குப் போய் அன்றாட சமையலுக்கு வேண்டியதை வாங்குகிறவர்கள், இப்படி..

“இனிமே ஒங்களுக்குக் குதிரைக்குப் போடறமாதிரி.. கண்ணை ரெண்டு பக்கமும் மறைக்க ஏதாவது வாங்கணும்!” ரஞ்சியின் கேலியும் கோபமும் நிறைந்த குரல் அப்படியும், இப்படியும் திரும்பி வருகிற, போகிற பெண்களையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்த வைத்தியைச் சுயநினைவுக்குக் கொண்டுவந்தது.

அசடு வழிய, “ஆபீசில ஒரே நிலையில ஒக்காந்திருந்தேனா! கழுத்து சுளுக்கிக்கிச்சு!” என்று சமாளிக்கப் பார்த்தான்.

“பொய் சொல்லாதங்க. அப்பறம் நெசமாவே சுளுக்கிக்கும்!”

`நான் என்ன சின்னப் பையனா? மிரட்டுகிறாளே, என்னமோத்தான்!’ ஆத்திரம் எழுந்தது. “ஆமா, பாத்தேன். அங்க போற பெண்ணைத்தான் பாத்தேன். யாரோ தெரிஞ்ச ஜாடையா இருந்திச்சு!” என்று இரைந்தான்.

அதை நம்பிவிடும் அளவுக்கு முட்டாளில்லை என்று நிரூபித்தாள் ரஞ்சி. “இப்படி எதிரே வர்ற பொண்ணுங்களை எல்லாம் வெறிச்சு வெறிச்சுப் பாத்தா, எல்லாமே பழகின முகமாத்தான் தெரியும்!” என்றவள், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

“சரிதான் போடி! மனுஷனுக்கு ஒண்ணில்ல, ரெண்டு கண்ணைக்கு டுத்து, பொண்ணுங்களையும் சாமி படைச்சு விட்டிருக்கிறது எதுக்காகவாம்?” தர்க்கம் பேசினான். “நீயும் பாக்கறது! என்மேல எதுக்கு பொறாமை?”

அதற்குள் சாப்பாட்டுக்கடை வந்தது. அன்றைய இரவுச் சாப்பாடு இறுகிய மௌனத்தில் நடந்தது.

`தண்டம்! தண்டம்!’ என்று முனகிக்கொண்டே வைத்தி எட்டு இட்லிகளை விழுங்கினான்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *