27 விருந்து

மாமியார் ரஞ்சியையும் அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனதும், அந்த மகிழ்வைக் கொண்டாட, வைத்தி சற்றுத் தூரத்திலிருந்த ப்ரிக்ஃபீல்டுஸுக்குப் போனான். அங்குதான் சிவன், முருகன், கிருஷ்ணன் என்று, பாரபட்சம் இல்லாது எல்லா தெய்வங்களுக்கும் கோயில் இருக்கிறதே, யாராவது ஒருவருக்காவது நன்றி செலுத்த வேண்டாமா என்ற யோசனை எழுந்தபோதே, இன்று எங்கே போய் சாப்பிடலாம் என்று மறறுமொரு யோசனை எழுந்தது.

காசு கொடுத்து சாப்பிடப்போகிறோம், வீட்டுச் சாப்பாட்டைவிடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணியபோதே சிரிப்பு வந்தது. ரஞ்சியின் கைப்பதத்தைவிட எதுவும் சிறப்பாகத்தான் இருக்கும், இதற்குப்போய் அதிகமாகச் செலவழிப்பானேன் என்றது அவனது இயல்பான கஞ்சத்தனம்.

கொண்டாடுவது என்று வந்துவிட்டு, செலவைப் பார்க்கலாமா என்று தன்னைத்தானே கடிந்துகொண்டு, அருகிலிருந்த பங்க்சாரிலிருந்த சரவணபவனுக்குப் போக முடிவெடுத்தான். அப்போது உள்ளே நுழைந்துகொண்டிருந்த ரவியையும், கூடவே ஒரு பெண்ணையும் பார்த்துவிட்டு, அவ்வெண்ணத்தைக் கைவிட்டு, மதராஸ் உட்லாண்ட்ஸுக்குப் போனான்.

அங்கு குளிர்சாதன வசதியை அனுபவித்தபடி, இலைச் சாப்பாடு, குலாப் ஜாமூன், மெட்ராஸ் காபி இத்தியாதிகளுடன் மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு, வெளியே போகும் வழியில் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த பெருஞ்சீரகத்தையும் தாராளமாக அள்ளி வாயில் போட்டுக்கொண்டபடி வெளியே வந்தான்.

அப்போது எதிர்ப்பட்ட ரவி, “என்ன வைத்தி? பாக்காதமாதிரி போறே? நான் ஒரு சிநேகிதனைப் பாக்க வந்தேன்! ” என்று முந்திக்கொண்டான்.

“சிநேகிதனா, சிநேகிதியா? ”

“பாத்துட்டியா? ”நமட்டுச்சிரிப்பு. “ராதிகாவைப் படிக்கிற நாளிலிருந்தே பழக்கம்! ”

“அப்ப, சீக்கிரமே கல்யாணச் சாப்பாடுன்னு சொல்லு! ”

“ஒடனே சப்புக்கொட்டிடுவியே! கல்யாணம் நடக்குமா, நடக்காதான்னு நானே பயந்துக்கிட்டிருக்கேன்! ”

“ஏன்? அவங்க அப்பா, அம்மா..? ”

“யாருமில்ல அவளுக்கு”.

ரவி முடிக்குமுன், “இதைவிட வேற என்ன வேணும்? அம்மா இருக்கிற பொண்ணைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே..! ” என்ற வைத்தி நாக்கைக் கடித்துக்கொண்டான். இவன் அந்த மாமியாரின் மகன் என்பதை மறந்து உளறிவிட்டோமே!

ஆனால், ரவி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாகச் சிரித்தான்.

தைரியம் வர, வைத்தி தன் மனதைத் திறந்து காட்டினான் மைத்துனனிடம். “ஒங்கம்மா ரஞ்சியைத் தலைமேல தூக்கி வெச்சுக்கிட்டு ஆடறாங்க! நான் ஒருத்தன் இருக்கிறதே அவங்க ரெண்டு பேருக்கும் மறந்துபோச்சு! ”

“ஒன்னைச் சொல்லி குத்தமில்ல. அம்மா இருக்கிற எடமெல்லாம் குழப்பம்தான், ” என்றான் ரவி, ஒரு புன்முறுவலுடன். “வெளியில எங்கேயாவது கெளம்ப அப்பா சட்டையை மாட்டிக்கிட்டாலே அம்மாவுக்கு இல்லாத சந்தேகமெல்லாம் வந்துடும்! ”

“இப்பகூடவா? ”

“அங்கதான் விஷயமே இருக்கு. எங்கே யாராவது தன்னைக் கிழவன்னு நெனச்சுடப் போறாங்களோன்னு அப்பாவுக்கு இப்பல்லாம் பயம். எளவட்டம் மாதிரி.. பாக்கிற பொண்ணுங்களை எல்லாம் விமர்சனம் செய்வார்! ”

வைத்திக்கு மாமனார் மீதிருந்த மதிப்பு கூடியது.

“அம்மாவுக்கோ, தனக்கு வயசு போயிட்டதால, அப்பாவுக்குத் தன்மேல உள்ள அன்பு கொறைஞ்சிடுச்சுன்னு கொறை. முந்தியெல்லாம் அப்பா இப்படியா இருந்தாருன்னு ஓயாம புலம்புவாங்க”.

“நீ என்ன சொல்வே? ”

“நான் சொல்ல முடியுமா, அப்பாவுக்குக் குறைஞ்சுட்டது அன்பில்லம்மா, அவரோட சக்திதான்னு? பேசாம, எல்லாத்தையும் கேட்டுக்குவேன்”.

ஒருசில நாட்களே தன்னால் இந்த மாமியாரைத் தாக்குப்பிடிக்க முடியவில்லையே, அந்த அப்பாவி மனிதருடைய தலையெழுத்து, ஆயுள் பூராவும் அவர்களுடன் கழிக்க வேண்டும் என்று இருக்கிறதே, பாவம்!

“பாவம், மாமா! ”   வாய்விட்டுச் சொன்னான்.

ரவி தொடர்ந்தான், “அதனாலதான், அம்மா ஒங்க வீட்டுக்குப் போன மறு வினாடியே அப்பா எங்கேயோ புறப்பட்டபோது சந்தோஷமா இருந்திச்சு எனக்கு. நிம்மதியா, எந்தக் கோயிலைச் சுத்திட்டு இருக்காரோ! ”

அந்தச் சமயத்தில், மணி பங்கோர் தீவில் சமுத்திர ஸ்நானம் செய்யும் சாக்கில், தன் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தார் எனபது அந்த இளைஞர்களுக்கு தெரிய நியாயமில்லை.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *