39 விருந்துபசாரம்

“இப்பத்தான் போனீங்க! அதுக்குள்ளே வந்துட்டீங்களே?” ஆச்சரியமும், மகிழ்ச்சியுமாகக் கணவனை எதிர்கொண்டாள் ரஞ்சிதம்.

“வீட்டிலே விருந்தாளி வந்திருக்கிறப்போ, நான் தனியா வெளியே சுத்திக்கிட்டிருந்தா, நல்லாவா இருக்கு?”

வேண்டாத விருந்தாளியாக இருந்த அம்மா, எப்போது இப்படி இவர் மரியாதை தரும் அளவுக்கு உயர்ந்துபோனாள்? சந்தேகத்துடன் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அந்தப் பார்வையால் சற்றே நிலைகுலைந்து போனவன், “ராத்திரிக்கு சமைச்சுட்டியா, ரஞ்சி?” என்று வினவினான்.

“வந்து.., காலையில சுட்ட அப்பளமும், மிளகு ரசமும் செஞ்சேன்..,” என்று முனகினாள்.

முகத்தைச் சுளிக்காதிருக்கப் பாடுபட்டான். “ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கே! நீ இப்ப திரும்ப அடுப்படியில வேகவேணாம், பாவம்! ஒங்கம்மாவையையும் கூட்டிக்கிட்டு, நாம்ப வெளியே போறோம்!” அரச கம்பீரத்துடன் வந்து விழுந்தன வார்த்தைகள். “ஒரு சைனீஸ் வெஜிடேரியன் ரெஸ்டரண்டிலே நம்ப டின்னர்! எப்படி?” காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான். இன்று தான் மாமியாருக்கு வைக்கப்போகும் ஐஸில், மனைவியும் சேர்ந்து உருகிவிட மாட்டாளா!

ரஞ்சியின் சந்தேகம் வலுத்தது. “கொள்ளை, கிள்ளை அடிச்சீங்களா?”

“அதுக்கெல்லாம் சாமர்த்தியம் வேணாம்? நீ வேற!”

”லாட்டரி அடிச்சிருக்கு!” ஊகம் செய்ய முயன்றாள்.

“சீட்டு வாங்கினா இல்ல பரிசு விழும்?”

தானே கைக்காசு செலவழித்து, அம்மாவை அழைத்துப் போகப்போகிறார்! ரஞ்சியின் முகம் விகசித்துப்போயிற்று.

“நான் இப்பவே அம்மாகிட்ட சொல்றேன்,” என்று உற்சாகமாகப் போனாள்.

வெளியில் சுற்றிவிட்டு வந்ததும், அந்த இனிமையான அனுபவம் முற்றும் அகலாத நிலையில், ரஞ்சி தனிமையில் தன்னிடம் எப்படி நடந்துகொள்வாள் என்று வைத்தி கற்பனை செய்துகொண்டிருந்தபோது, அகால வேளையில் தூங்கி எழுந்திருந்த களைப்புடன் தள்ளாடியபடி வந்தாள் பாக்கியம்.

“நல்லா இருக்கீங்களா?” என்று மாப்பிள்ளையைக் குசலம் விசாரித்தாள்.

`வீட்டிலே இருக்கிறவங்க எல்லாருமா சீக்கா இருப்பாங்க?’ என்று எரிச்சல்பட்ட வைத்தி, “எனக்கென்ன கொறைச்சல்? நல்..லா இருக்கேன்!” என்று அழுத்திச் சொல்லிவிட்டு, `நீங்க வர்றவரைக்கும்!’ என்று மனத்துக்குள் சேர்த்துக்கொண்டான்.

பாக்கியம் அத்துடன் விட்டிருக்கலாம். “பிள்ளை பிறக்கப்போற சந்தோஷம்போல! குண்டாயிட்டீங்க!” என்றாள்.

அவனுடைய ஆண்மை அவனை உசுப்பிவிட்டது. `என்னமோ, இவங்க வீட்டு சாப்பாட்டைச் சாப்பிட்டு, நான் ஒடம்பை வளர்த்துக்கிட்ட மாதிரியில்ல பேசறாங்க!’

நல்ல வேளையாக, அவன் ஏடாகூடமாக எதுவும் சொல்வதற்குள், ரஞ்சி வந்தாள், “அம்மா! எல்லாரும் வெளியே போய் சாப்பிடலாம்கிறாரு!” என்றபடி.

“எதுக்கும்மா வீண் செலவு! வீட்டிலேயே ஒரு ரசம் சோறா சாப்பிட்டுட்டுப் போகாம!” வயதானவளாய் லட்சணமாய், நீட்டி முழக்கினாள் பாக்கியம்.

தனக்கு எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “சும்மா வாங்க, அத்தே. செலவு இருக்கவே இருக்கு! மாசம் பொறந்தா, சம்பளம் வந்துட்டுப்போகுது!” என்று அலட்டிக்கொண்டான்.

பாக்கியத்திற்குச் சபலம் ஏற்பட்டது. இருந்தாலும், “நீங்க ரஞ்சியைக் கூட்டிட்டுப் போங்க. நான் வீட்டைப் பாத்துக்கறேன். ரெண்டு பேர் போனா, பைக்கிலே போயிடலாம். நான் ஒருத்தி சேர்ந்துக்கிட்டா, டாக்சி இல்ல பிடிக்கணும்!” என்றவள், தன்னை `டாம்பீகம்’ என்று மாப்பிள்ளை நினைத்துவிடக்கூடாதே என்ற பதைப்புடன், “எனக்கு முந்திமாதிரி பஸ்ஸிலே ஏறி எறங்கறது எல்லாம் முடியல. ம்..! பாட்டியாகப் போறேனே!”

வைத்தி நெகிழ்ந்து போனான், அவனுக்குப் பிறக்கப்போகும் பிள்ளையைப்பற்றி அவள் குறிப்பிட்டதும். “நல்லா ஒங்களை விட்டுட்டுப் போவோமே!” என்று நெருங்கி வந்தான்.

பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பதுபோல, “ரொம்ப வற்புறுத்திக் கூப்பிடறீங்க! நான் வராட்டி.., வருத்தப்படுவீங்க!” என்று சம்மதம் தெரிவித்தாள் பாக்கியம்.

“இதையே கொஞ்சம் சிரிச்சுக்கிட்டு சொல்றது! என்னமோ, பெரிய தியாகம் பண்ணறமாதிரிதான்!’ என்ற எரிச்சல் எழுந்தது வைத்திக்குள். இந்தப் பெண்கள் அலங்காரம் முடிந்து வருவதற்குள், சீனன் கடையை மூடிவிடப் போகிறானே என்ற பதைப்பும் உடன் எழுந்தது.

கடைக்குள் நுழைந்து, சீருடையிலிருந்த ஒரு இளம்பெண் ஆசார உபசாரம் செய்ய, ஒரு வழியாக அமர்ந்தார்கள். மேசைமேல் அழகிய விரிப்பு. பூச்சாடி. விலைப்பட்டியல் வைத்தியின் வயிற்றைக் கலக்கியது.. இந்தியக் கடை என்றால், ஒருவர் சாப்பாட்டுக்கு ஐந்திலிருந்து எட்டு வெள்ளி ஆகும். இங்கேயோ, ஒரு பண்டமே எட்டு வெள்ளிக்குக் குறையாமல்இருக்கிறதே என்று கணக்குப் போட்டான்.

பின்னே, சும்மாவா ஒரு சாப்பாட்டுக் கடையை இவ்வளவு அழகு படுத்தியிருப்பார்கள் என்று சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றான்

வழக்கமான கஞ்சத்தனத்திலிருந்து சட்டென மீண்டான். மாமியாரைத் தன் கைக்குள் போட்டுக்கொள்வதெனத் தீர்மானித்து, வந்தது வந்தாயிற்று. இனி உபசரித்துத் தொலைக்க அஞ்சுவானேன்!

“சாப்பிடுங்கத்தே. எதையுமே தொடலியே நீங்க!” என்றான் அலாதி கனிவுடன்.

எல்லாருக்கும் பொதுவாக, ஒரு பெரிய தட்டில் வைக்கப்பட்டிருந்த எதையோ பாக்கியம் அருவருப்புடன் பார்த்தாள். “இதுக்குத்தான் மொதல்லேயே நான் வரலேன்னு சொன்னேன். எனக்கு இதெல்லாம் பிடிக்கிறதே இல்ல. பழக்கம் இருந்தாத்தானே..?”

“சாப்பிட்டா, தானே பழகிடுது! இந்தாங்க!” தாராளமாக அந்த எதையோ எடுத்து, அவளுடைய வெள்ளைப் பீங்கான் தட்டில் போட்டான்.

“பாக்கவே பயம்..மா இருக்கே!” என்று வெளிப்படையாகவே சொன்ன பாக்கியம், பக்கத்தில் அவளைப்போலவே அயர்ந்துபோய் உட்கார்ந்திருந்த மகளிடம் திரும்பினாள். “ஏன் ரஞ்சி? நான் சைவம்தான்னு ஒனக்குத் தெரியாது?” மெள்ளக் கடிந்துகொண்டாள்.

வைத்திக்கும் அது காதில் விழ, பல்லைக் கடித்துக்கொண்டான். “நல்லாச் சொன்னீங்க! நீங்களே கேட்டாக்கூட வேற எதுவும் கிடைக்காது இங்க. வெளியே போர்டில போட்டிருந்தாங்களே, வெங்காயம், பூண்டு, பால் எல்லாம் கலக்காத சுத்த சைவம்னு!”

“இது.. மரக்கறிங்கிறீங்களா?” சந்தேகத்துடன் கேட்டாள் பாக்கியம். முகம் சுளித்தபடியே இருந்தது.

“ஆமா. அதோட ஏதாவது மாவு சேர்த்திருப்பாங்க. அவ்வளவுதான். தைரியமாச் சாப்பிடுங்க!” இதேபோல் உபசாரம் செய்துகொண்டே இருக்க வேண்டுமானால், தன்னால் இன்னும் எத்தனை நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற பயம் எழுந்தது.

பாக்கியம் தன்முன் வைக்கப்பட்டிருந்த சிறய தட்டை தூர நகர்த்தினாள். “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. எனக்கென்னமோ..!”

தன் தாயிடம் கணவன் இவ்வளவு அன்பு வைத்திருப்பது தனக்கு இத்தனை நாட்களும் தெரியாமல் போயிற்றே என்று பிரமித்துக்கொண்டிருந்த ரஞ்சிக்கு இப்போது எரிச்சலாக இருந்தத்து. “ஏம்மா? இவ்வளவு தூரம் சொல்றாரு, இல்ல?” குரல் எப்போதும்போல குழைவாக இல்லாது, மிரட்டலாக வெளிவந்தது.

வைத்திக்கு அதுவே போதுமான ஊக்கம் அளிப்பதாக இருந்தது. பரவாயில்லை, ரஞ்சி! பிடிக்காட்டி வேணாம். விடு!” என்று பெரிய மனது பண்ணினான்.

“நான் வரலேன்னு சொன்னேன். நீங்கதான்..!” மீண்டும் அதையே சொல்லி, பழியை அவர்கள்மீதே திருப்பினாள் பாக்கியம்.

மகள் உதட்டை இறுக்கிக்கொண்டவிதம் அவளை பயமுறுத்த, “அது.. வந்து.., கண்ட எண்ணையிலே செய்தது எல்லாம் எனக்கு ஒத்துக்காது. வயசு கொஞ்சமாவா ஆகுது! ஒங்களுக்கென்ன! கல்லைக்கூட ஜீரணிக்கிற வயசு! இங்கேயோ எல்லாமே எண்ணையில மிதக்குது!” என்று சொல்லிக்கொண்டே போனவளுக்கு, திடீரென்று ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. “என்னா சமைக்கிறாங்க இவங்க எல்லாம்! ஹூம்! இதெல்லாம் ஒரு சமையல்னு போர்டைத் தொங்கவிட்டுக்கிட்டு..! வர்றவங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டாங்களா! ஏமாத்து வேலை! சைவச் சாப்பாடுன்னு சொல்லி, கோழிக்கால், வறுத்த வாத்து அப்படின்னு பேர் வெச்சு, பித்தலாட்டமா பண்ணறாங்க?”

கணவனும், மனைவியும் தங்களைச் சுற்றிப் பார்வையை ஓடவிட்டார்கள். `தர்மசங்கடம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புவர்கள் அப்போது அவர்கள் முகத்தைப் பார்த்திருக்க வேண்டும்.

“ஷ்! அம்மா!” அடங்கிய குரலில் ரஞ்சி தாயை அடக்க முயன்றாள்.

வைத்தி எதுவும் பேசாது, அவசரமாக எழுந்திருந்தான். “கெளம்புங்க!”

“இன்னும் நெறைய ஆர்டர் செய்திருக்கீங்களே! அதுக்குள்ளே ஏன் எழுந்துட்டீங்க?” சந்தர்ப்பம் புரியாமல், பாக்கியம் கேட்டாள்.

“அதானே! என்னங்க அவசரம்?” என்று ரஞ்சியும் ஒத்துப் பாடினாள்.

“போதும், நாம்ப டின்னருக்கு வந்த லட்சணம்! நல்ல வேளை, இங்க யாருக்கும் தமிழ் புரியல. இல்லாட்டி, அவங்களே நம்ப கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளி இருப்பாங்க!” என்று எரிந்து விழுந்தான்.

தலையைத் தொங்கப் போட்டபடி, எழுந்து நடந்தார்கள் பெண்கள் இருவரும்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *