21 விருந்துக்கு வந்த மாப்பிள்ளை

முதல் நாளிரவு கணவர் வாங்கி வந்திருந்த ஏராளமான காய்கறி வகைகளை தனித்தனியாகப் பிரித்து குளிர்சாதனப் பெட்டியில் அடைக்க முயன்று கொண்டிருந்தாள் பாக்கியம்.

தான் சொல்வது கேட்கும் தொலைவில்தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, “சரியான சுயநலம் பிடிச்சவரு! ஏதுடா! வாழவேண்டிய பொண்ணு வீட்டில அழுதுக்கிட்டு இருக்கேன்னு ஒரு வருத்தம், பச்சாதாபம் எதுவுமில்லாம்! சே!” என்று உரக்கக் கத்தினாள்.

“என்ன பாக்கியம்? பேச ஆளு கிடைக்கலியா? தானே பேசிக்கறே!” என்று சிரிக்காமல், அவளை வம்புக்கு இழுத்தார் மணி.

“தெரியாமத்தான் கேக்கறேன், நாலு தினுசு கூட்டு, கறியோட ஒங்களுக்கு என்னங்க விருந்து கேக்குது இப்போ?”

வலிய வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன், “யாரோ, யார் கூடவோ, பொழுது போகாம சண்டை பிடிச்சுட்டு வந்து நின்னா, அதுக்காக நான் எதுக்கு வாயைக் கட்டணும்? தலையெழுத்தா?” என்று இரைந்தார். “எனக்கென்ன அல்சரா, இல்ல, சர்க்கரை வியாதியா? இருக்கிறவரைக்கும் நல்லா இருந்திட்டுப்போறேன்! முடிஞ்சா ஆக்கிப்போடு!” என்று மிரட்டினார்.

வழக்கத்துக்கு விரோதமான அவரது தொனி மகளை அங்கு வரவழைத்தது. ரோஷத்துடன், “தள்ளுங்கம்மா. இன்னிக்கு நான் சமைக்கிறேன்!” என்றாள் சவாலாக.

தன் வெற்றிப் புன்னகையை மறைக்க, மணி விரைந்து வெளியில் நடந்தார். போகிற போக்கில், “பாக்கியம்! சீனன் பாகற்காயை வெச்சா பழுத்துடும். கசப்பா இருந்தாலும், வயத்துக்கு நல்லது. உப்பு, மஞ்சள்பொடி போட்டு, கொஞ்ச நேரம் பிசிறிவெச்சு, அப்புறம் பிழிஞ்சு, வறுத்துடு. சாம்பாரில.. முருங்கக்காயை தாராளமாவே போடு. நல்ல வாசனையா இருக்கும்!” என்று குரல் கொடுக்கத் தவறவில்லை.

“இவரு எனக்குச் சமையல் கத்துக் குடுக்கறாரு!” பாக்கியத்துக்கு எரிச்சலாக இருந்தது. “காடு வா, வாங்குது. இந்த வயசில இவருக்கு முருங்கக்காய் கேக்குதோ!” என்று ரகசியமாகத் திட்டியவளுக்கு ஏதோ உறைத்தது. குரலைத் தழைத்துக்கொண்டு, “ஏன் ரஞ்சி? ஒங்க வீட்டுக்காரருக்கு முருங்கக்கா ரொம்பப் பிடிக்குமோ?” என்று விசாரித்தாள்.

`வீட்டுக்காரர்’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ரஞ்சிக்குப் பிரிவுத் துயரம், ஏக்கம் எல்லாம் ஒருங்கே எழுந்தன. “ஆசை ஆசையாச் சாப்பிடுவாரு! ஏம்மா கேக்கறீங்க?”

“நான் பெரிய தப்பு பண்ணிட்டேண்டி. மொதல்லேயே ஒன்னை எச்சரிச்சிருக்கணும். இந்த மாதிரிப்பட்டவங்களுக்கு..,” மேலே சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு, தலையை ஒரேயடியாகக் குனிந்துகொண்டாள்.

மகள் விழிப்பதைக் கண்டு, “பாக்யராஜ் படம் பாத்தேயில்ல? அப்படித்தான்! ஒங்க வீட்டுகாரர் வேற ராத்திரி ஆனா, ஸ்கூட்டரை எடுத்திட்டு வெளியே போயிடுவாரா! இந்த மாதிரி ஆம்பளைங்களுக்கு.. வாசனையா உள்ளது எதுவுமே.. அதாண்டி, முருங்கை, முள்ளங்கி, வெங்காயம்.. இந்தமாதிரி எதையுமே இவங்க கண்ணிலே காட்டக்கூடாது,” என்று பொரிந்துவிட்டு, ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, குரலைத் தழைத்துக்கொண்டாள்: “புலனடக்கம் இல்லாம போயிடும்!”

புலனாவது, அடக்கமாவது!

ரஞ்சிதத்திற்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. “நான் இனிமே எங்கேம்மா அவர் முகத்தில முழிக்கப்போறேன்! என்னென்னமோ சொல்றீங்களே!”

அப்போது வாசலிலிருந்து மணியின் உற்சாகக் குரல் கேட்டது: “ரஞ்சி! யார் வந்திருக்காங்க, பாரு!”

ஒரு வார தாடி, மீசையுடன் வந்திருந்த வைத்தி, மனைவியின் வருகையை எதிர்பார்த்து, மேலும் கூனி நிற்க முயன்றான்.

இருவரும் எதிரெதிரே நின்று, இமைக்கவும் மறந்து, ஒருவரையொருவர் கண்ணாலேயே விழுங்கியபடி இருக்க, ஏதோ, என்னவோ என்று வெளியே வந்த பாக்கியம் அதிர்ந்தாள். `நான்கூட இல்ல ஏமாந்துட்டேன்! வயசாக ஆக, இந்த மனுசனுக்குத் துணிச்சல் அதிகமாயிடுச்சு!’ முறைத்தாள்.

அவரோ, அவளை லட்சியமே செய்யவில்லை. “ஏன் ரஞ்சி? வீட்டுக்கு வந்தவங்களை ஒக்காரச் சொல்றதில்ல?” என்ன்று சீண்டினார் மகளை.

“என்னைப் பாக்கவா வந்தாரு?” பிணங்கினாள்.

ஏதொ அசட்டுத் தைரியத்தில் தான் இங்கு வந்துவிட்டோம், அடுத்து என்ன செய்வது என்று குழப்பமடைந்தான் வைத்தி. “மாமா! நான் வந்தது இங்க உள்ளவங்களுக்குப் பிடிக்கல போலிருக்கு!” என்று அழமாட்டாக்குறையாகச் சொல்லிவிட்டு, திரும்புவதுபோன்ற பாவனை செய்தான்.

`ஐயோ! போய்விடுவார் போலிருக்கிறதே!’ ரஞ்சிக்குப் பயம் பிடித்துக்கொண்டது. அவசர முடிவெடுத்தாள். “எனக்காக யாரும் போக வேணாம்பா!” சரக்கென்று உள்ளே திரும்பி நடந்தாள்.

அவள் சொல்லிப்போனதற்கு என்ன அர்த்தம் என்று வைத்தி விழிக்க, `எல்லாம் சரியாகிடும். இரு!’ என்று கண்ஜாடை காட்டினார் மாமனார்.

ஒரு காலத்தில் தன் மாமனார் செய்ததுபோல, மூன்று தலைமுறையைப் பற்றிய கதைகளை எல்லாம் மணி அனுபவித்து விவரிக்க, `சரியாக மாட்டிக்கொண்டோமே!’ என்று வைத்தி தன்னைத்தானே நொந்துகொண்டான். இந்த கழுத்தறுப்புக்காகவா இவ்வளவு கவனமாக, சவரம்கூட செய்துகொள்ளாமல், கசங்கிய சட்டையும், கலைந்த, நீண்ட முடியுடனும் வந்தோம்! ரஞ்சியோ, கண்ணிலேயே பட மாட்டேன் என்கிறாள்!

ஒருவழியாக, சாப்பாட்டு நேரம் வந்தது. அப்போதுதான் தன் சாணக்கியத்தனத்தை அவனுக்கு உணர்த்தினார் மணி.

“பாக்கியம்! காலையிலிருந்து ஒனக்கு நிறைய வேலை! அப்புறமா, `தோளைப் பிடிச்சு விடுங்க,’ன்னு எங்கிட்ட வந்து நிக்காதே, ஆமா! ரஞ்சி சும்மாத்தானே இருக்கா? விருந்தாளிக்குப் பரிமாறினா என்ன, கொறைஞ்சா போயிடுவா?”

அவர் எண்ணியதுபோலவே, ரஞ்சி சிலும்பிக்கொண்டு வந்தாள். “நீங்க போங்கம்மா. நான் கவனிச்சுக்கறேன்!”

சாப்பாடு மௌனமாக நடந்தது. அவ்வப்போது, மணி மட்டும் பேசினார்: “முருங்கக்கா வாசனை கமகமன்னு வருது, இல்ல வைத்தி?”

இதற்கு ஏதானும் உள்ளர்த்தம் இருக்குமா என்று யோசித்தவன், அசடு வழியச் சிரித்தான்.

“யுத்தத்தில அடிபட்டவன் மாதிரி இருக்கே! பாவம், வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு காலமாச்சோ!” என்று அனுதாபப்பட்டுவிட்டு, “ஹோட்டல்லே இப்படியா சமைப்பான்! வெறும் காம்புதான் இருக்கும் சாம்பாரிலே! நாலு பங்கு விலைவேற!” என்று கண்டனம் தெரிவித்தார். மகளைப் பார்த்து, “மாப்பிள்ளைக்கு நல்லாப் பாத்துப் போடும்மா, பாத்து!” என்று பலமாக உபசாரமும் சொய்தார்.

தந்தையின் வாக்கை வேத வாக்காக கொண்டு, ரஞ்சியும் கணவனைப் பார்த்தபடி இருக்க, கைபாட்டில் சாம்பாரைக் கரண்டி கரண்டியாக ஊற்றியது.

அரை மணி நேரத்திற்குப்பின், அந்த வீட்டில் வயதான தம்பதிகள் இருவர் மட்டுமே இருந்தார்கள். இணைந்து, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.

“என்னங்க இது, அக்கிரமமா இருக்கு?” தாளமுடியாது அரற்றினாள் பாக்கியம். “அவர்பாட்டில வந்தாரு, மூக்கைப்பிடிக்க சாப்பிட்டாரு! போற போக்கிலே, இவளையுமில்ல இழுத்துக்கிட்டுப் போயிட்டாரு!”

யோசனையுடன், “இவ இல்ல, அவன் பின்னால ஓடினமாதிரி இருந்திச்சு!” என்றார் மணி.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *