28 வாடிய செடிகள்

தன் வீட்டருகே வந்தபோது, பாக்கியத்திற்கு நிறைவாக இருந்தது.

தான் உரிமையோடு இருக்கக்கூடிய இடம் இது ஒன்றுதான். இங்கு அர்த்தமில்லாமல், எவருக்கும் பணிந்துபோக வேண்டியதில்லை. இங்குள்ளவர்கள்தாம் எவ்வித போலித்தனமும் காட்டாது, உண்மையாக நடந்து கொள்பவர்கள்.

`பெண்ணுமாயிற்று, மாப்பிள்ளையுமாயிற்று! எல்லாம் கொஞ்ச காலம்தான்! அவரவர்கள் காரியம் ஆனால் சரி. நானென்ன சமையல்காரியா, கண்டவன் வீட்டுக்குப் போய் சமைத்துப்போட!’ என்று எழுந்த கசப்பை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு, எப்போதுமில்லாத வழக்கமாக, கணவர் போட்டிருந்த தோட்டத்தை அன்புடன் நோட்டமிட்டாள். புருவங்கள் நெரிந்தன.

கணவருடைய உயிரே அவைதாமே? எப்படிச் செடிகளை வாடவிட்டார்?

ஒரு வேளை, தோட்டத்தைப் பராமரிக்க முடியாத அளவுக்கு உடம்பு முடியாமல் போய்விட்டதோ!

மாப்பிள்ளை சொல்லவில்லை, அவர் பாதி உடம்பாக ஆகிவிட்டதாக?

படபடப்புடன் உள்ளே நுழைந்தாள்.

முன்ஹாலில் ஒரு பெட்டி இருந்தது.

`யார் வந்திருப்பார்கள்?’ என்ற யோசனையுடன் பாக்கியம் நின்றுகொண்டிருந்தபோது. “என்ன பாக்கியம்! மாப்பிள்ளையை விட்டு வர மனசு வரலியா? இல்ல, அவர் ஒன் கையைப் பிடிச்சுக்கிட்டு விட மாட்டேன்னுட்டாரா?”

“ஏன் கேக்க மாட்டீங்க?” பாக்கியம் நொடித்தாள். “ஐயோ பாவம், சோத்துக்குத் திண்டாடுவீங்களேன்னு நான் ஓடி வந்தா..!”

“என்னைப்பத்தி என்ன! நான் எதையோ சாப்பிட்டு சமாளிச்சுக்குவேன். ரஞ்சிக்கு ஒத்தாசையா, நீ இன்னும் ஒரு வாரம் இருந்திட்டு வந்திருக்கலாம்!” என்றார் மணி, உபசாரமாக.

“அது சரி, பொழுநு போகாம, நீங்க செடிகிட்ட நின்னு பாட ஆரம்பிச்சுட்டீங்களா, மறுபடியும்?”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாது விழித்தார்.

“இல்லை, செடி எல்லாம் வாடி இருக்கேன்னு கேட்டேன்,” என்று பாக்கியம் விளக்கவும், “அ.. ஆமா, ஆமா. பொழுது போகலியா, அதான்!” என்று உளறிவிட்டு, தான் சொன்னதில் தனக்கே நம்பிக்கை ஏற்படாது, “என்னான்னு சொல்றது, போ! நீ இல்லாம பொழுதே போகல. அதான் கிட்டப்பா பாட்டெல்லாம்..,” என்றார் அழுத்தமாக.

“ஒங்களுக்கு ஒண்ணுமே தெரியாது!”என்று, ஒரு மனைவிக்கே உரிய உரிமையுடன் கண்டனம் தெரிவித்தாள் பாக்கியம். “இந்தக் காலத்து செடிங்க பாகவதரைக் கண்டுச்சா, கிட்டப்பாவைக் கண்டுச்சா? சும்மா, இளையராஜா, ரஹ்மான் பாட்டெல்லாம் எடுத்து விட்டா, அப்படியே தளதளன்னு வளராதா!”

“அதானே! எனக்கு இது தோணல, பாரு!” என்று அவளுக்கு ஐஸ் வைத்தார் மணி.

அந்தச் சமயம் பார்த்துத்தானா உள்ளேயிருந்து ரவி வரவேண்டும்! “எப்பப்பா வந்தீங்க?” என்று கேட்டவன், பாக்கியத்தைக் கவனித்துவிட்டு, “ஓ! வர்றபோதே அம்மாவையும் கூட்டிட்டு வந்துட்டீங்களா?” என்றான் அசந்தர்ப்பமாக.

பாக்கியம் கணவரை உற்றுப் பார்க்க, அவர் நெளிந்தார். இந்த இக்கட்டிலிருந்து விடுபட, அவருக்குத் தெரிந்தது ஒரே வழிதான். அதைப் பிரயோகித்தார். “பாக்கியம்! காலையில என்ன சாப்பிட்டியோ, என்னமோ! காபி போட்டுட்டு வரட்டுமா?”

குழப்பம் தாற்காலிகமாக மறைந்து போக, பாக்கியம் வாயைப் பிளந்தாள். “ஒங்களுக்கு காபிகூடப் போடத் தெரியுமா?”

“அதென்ன அப்படிக் கேட்டுட்டே! நீ இல்லாதபோது நான்தானே எல்லாம்?” என்று, சமயத்திற்கு ஏற்ற அஸ்திரத்தை ஏவிவிட்டார்.

தான் உளறிவிட்டது புரிய, ரவி பெற்றோர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். முகத்தில் சிறு நகை.

பாக்கியத்திற்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. “ஆமா? ரவி என்னமோ..?”

அவளை நெருங்கி ரகசியக் குரலில், “எப்போ நீ அந்தப் பொண்ணு ராதிகாவை வேணாம்னு சொன்னியோ, அப்பலேருந்து அவன் ஒரு மாதிரியா ஆகிட்டான்!” என்றார். “பாவம்!” என்றார், சிறிது பொறுத்து.

“இந்தப் பொட்டி ஏன் இங்க வந்திச்சு?” என்று துருவினாள் பாக்கியம்.

“அது.. அது.. எனக்குப் பொழுது போகல, இல்லியா?அதான் தூசி தட்டி வெச்சேன். எவ்வளவு பாச்சைக் குஞ்சுங்க, தெரியுமா? கரப்பான் பூச்சி மருந்து வாங்கி, போட்டு வெச்சிருக்கேன்!”

இவ்வளவு பொறுப்பான மனிதரை அனாவசியமாக சந்தேகித்தோமே என்று வருந்திய பாக்கியம், “எங்கே நான் அந்தப் பக்கம் போனதும், நீங்க இன்னொரு பக்கம் நழுவிட்டீங்களோன்னு நினைச்சுட்டேன்!” என்று ஒத்துக்கொண்டாள். குரல் தழுதழுத்தது.

மணி அதிர்ந்தார். அதாவது, அப்படிக் காட்டிக்கொண்டார். “நழுவறதா! நானா! என்ன பாக்கியம், நீ! முப்பது வருஷத்துக்குமேல என்கூட இருந்திருக்கே! இன்னும் என்னை.. நீகூடப் புரிஞ்சுக்கல, பாத்தியா!” இன்னும் கொஞ்சம் போனால், அழுதுவிடுவார் போலிருந்தது.

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன், நீங்க இப்படி வருத்தப்படறீங்க?”

அவள் கேள்விக்குப் பதிலளிக்காது, சோகமே உருவாக மணி விட்டுக்கு வெளியே போனார்.

குற்ற உணர்ச்சி தாக்க, “காபி கேட்டீங்களே! இதோ போட்டுக்கிட்டு வரேன், இருங்க!” என்றபடி பாக்கியம் உள்ளே விரைந்தாள்.

அதற்கு மேலும் சஸ்பென்ஸைத் தாங்க முடியாது, ரவி தந்தையைப் பின்தொடர்ந்து போனான். “அப்படி எங்கதாம்பா போனீங்க?”

“ஒங்கம்மா திரும்பி வர்றதுக்குள்ளே வந்துடலாம்னு நான் போனா, அவளும் இன்னிக்கே வந்து தொலைச்சுட்டா. நீ வேற, சமயத்தில காலை வாரி விட்டுட்டே!”

“எங்கப்பா போனீங்க?” மறுபடியும் கேட்டான்.

தர்மசங்கடத்துடன், முகத்தைத் திருப்பிக்கொண்டு பதிலளித்தார் மணி. அது.. “சமுத்திர ஸ்நானம் பாவத்தைத் தொலைக்கும்பாங்க. அதான், பங்கோர் தீவுக்கு..!” என்று, பாதி உண்மையும், பாதி பொய்யுமாகக் கலந்து சொல்ல ஆரம்பித்தவருக்கு, கோர்வையாகப் பேசத் தைரியம் வந்தது. “பாரேன், நம்ப நாட்டிலேயே இருக்கு இவ்வளவு அழகான கடற்கரை! டி.வியில வெள்ளைக்காரன் படம் பிடிச்சுப் போடறான். ஆனா, நான் இன்னும் அங்க போனதே கிடையாது. இத்தனைக்கும் இங்கேயே பிறந்து வளர்ந்தவன்!

“அப்படி என்னப்பா பாவ மூட்டை சேர்ந்துடுச்சு?”

“யாருடா இவன், துருவித் துருவிக் கேட்டுக்கிட்டு! இதுக்கு ஒங்கம்மாவே தேவலை போலிருக்கே!”

கையில் சூடான கோப்பையோடு வந்த பாக்கியம், தன் பெயர் அடிபடுவதைக் கேட்டு, மறைவாக நின்றுகொண்டாள்.

“அது வந்துடா.. ஒங்கம்மாவோட போர்ட் டிக்சனுக்குப் போனப்போ, அங்கே, இங்கே பாக்க முடியல. ஹி! ஹி! என் வயசில பாக்கத்தான் முடியும். அது இந்தக் கெழவிக்குப் புரியுதா?”

அவர் காலத்தில் இல்லாத புதுமையாக, குறைந்த அளவில் நீச்சலுடையில் இருந்த இளம்பெண்களைத்தாம் அப்பா குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொண்ட ரவிக்குச் சிரிப்புப் பொங்கியது. சிரித்தால் மரியாதையாக இருக்காது என்று கையால் வாயை மூடிக்கொண்டான்.

“நீ பாட்டில, விவரம் புரியாம, ஏதோ உளறிட்டே! நல்லவேளை, நான் எப்படியோ சமாளிச்சுட்டேன்!” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டவர், “ஏண்டா? செடிக்குத் தண்ணிவிடச் சொல்லிட்டுப் போனேனே! நீ என்ன செய்துக்கிட்டிருந்தே?” என்று மடக்கினார்.

`மறந்து விட்டேன்!’ என்று உண்மையைக் கூறினால், அப்பாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று, அவர் ஏற்கும் விதத்தில் பதிலளித்தான் மகன். “நீங்க செஞ்சதுதாம்பா. நான் இங்கேயே.. பார்க்கில.., தியேட்டரில்ல.., சும்மா மயிலு, குயிலு எல்லாம் பாத்துக்கிட்டு!”

பாக்கியத்தின் கொதிப்பான மூச்சு பருத்த மார்பகங்களின்வழி வெளியே தெரிந்தது. `இருக்கட்டும். கவனிச்சுக்கறேன்!’

உள்ளே போய், மேலும் மூன்று கரண்டி சீனி போட்டுக் கலக்கினாள்.

`என் வீட்டிலேயே இவ்வளவு தில்லுமுல்லு! இந்த அழகிலே, மாப்பிள்ளையைக் குத்தம் சொல்லப் போயிட்டேனே! அவரோட கை அடிக்கிற கை. ஆனா, அது அணைக்கவும் செய்யும். இங்கேயோ, அடியோ, அணைப்போ — ரெண்டுமே கிடையாது!’

அவளுடைய மன ஒட்டத்தைத் தடுத்து நிறுத்தியது மணியின் குரல்: “ஆகா! இந்தமாதிரி காபி குடிச்சு எத்தனை நாளாச்சு! ஒன் கைமணமே தனிதான், பாக்கியம்! என் ருசி புரிஞ்சு, சீனி அதிகமா..!”

சோகமும், வெறுப்புமாகக் கணவரையே பார்த்தாள் பாக்கியம்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *