35 வயதைக் குறைக்க

“என்னப்பா? சோர்ந்துபோய் ஒக்காந்திருக்கீங்க, லைட்டுகூடப் போடாம? ஒடம்பு சரியில்லையா?”

துள்ளி எழுந்தார் மணி. “அந்த வார்த்தையையே என் காதில போடாதேடா!”

“என்னப்பா?”

“என்னான்னு சொல்றது, போ! முந்தியெல்லாம் `ஒடம்பு’ங்கிற வார்த்தையைக் கேட்டா, நல்..லா, வளைவு, வளைவா.. (கையால் ஒரு பெண்ணின் உருவத்தைக் காட்டியபடி தொடர்ந்தார்), கண்ணுக்கு முன்னாடி தெரியும். இப்பவோ, கண்ணு, மூக்கு, தோள், முழங்கால்.. இப்படி தனித்தனியா வந்து பயமுறுத்துது!” என்றார் அழமாட்டாக்குறையாக.

தன்னையும் மீறிச் சிரித்தான். “ஏம்பா?”

“நம்ப வீட்டில என்னமோ ஆயிடுச்சுடா. அம்மா தினம் ஒரு வியாதி கொண்டாடறதும், அவ பேச்சைக் கேட்டுக்கிட்டு நானும் என்னென்னமோ வாங்கிட்டு வர்றதும்..! சேச்சே! ஏண்டா கல்யாணம் செய்துகிட்டோம்னு இருக்கு!”

ரவி புன்னகை மாறாது, “இந்த யோசனை முப்பது, நாப்பது வருஷத்துக்கு முந்தி வந்திருக்கணும்,” என்றான் மெள்ள. தொடர்ந்து, “நல்ல வேளை, வரல. இல்லாட்டி, நான் எங்கே?” என்று முடித்தான்.

மணிக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. தான் வாய்தவறி ஏதோ சொல்லப்போக, இந்தப் பயல் இப்படி அசிங்கமாகப் பேசுகிறானே!

அவரது நிலைமையைப் புரிந்துகொண்ட ரவி, ஆதரவாகப் பேச ஆரம்பித்தான். “அப்பா! நான் நெனைக்கறேன், அம்மாவோட வயசைச் சேர்ந்தவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா சாகறதைப் பாத்து அம்மாவுக்கும் பயம் வந்திருக்கணும். நீங்க ஏதாவது புது முயற்சி எடுத்துக்கிட்டா..!”

அவன் முடிப்பதற்குள் மணி அலறினார். “இன்னொரு முயற்சியா! ஐயோ! நீ சொன்னதை நம்பி, அவ பிறந்தநாள் அன்னைக்கு நான் வாங்கிக் கட்டிக்கிட்டது போதாதா?”

“ஏதோ ஒரு தடவை அப்படி ஆயிடுச்சு. அதுக்காக.. வேற முயற்சியில..”.

“சரி, சொல்லு. நிலைமை இதைவிட மோசமாக முடியாது!”

“வயசாகிக்கிட்டே போகுதேன்னு அம்மாவுக்குக் கவலை!”

“வயசு விலைவாசியைப்போல! ரெண்டும் எறங்கினதா சரித்திரமே இல்லியே! அதுக்கு நான் என்னடா செய்யறது?”

“அப்படிக் கேளுங்க! ஒங்க வயசு குறைஞ்சமாதிரி நீங்க நடந்துக்கணும். சும்மா, நடையில ஒரு மிடுக்கு, சட்டையில செண்டு..!”

“கஷ்ட காலம்! புதுசா கல்யாணமானவன் செய்யறது அதெல்லாம்!” அருவருப்படைந்தார். “நானோ, சீக்கிரமே தாத்தா ஆகப்போறவன்!”

“நீங்க எளமையாக் காட்டினா, அம்மா தனக்கும் வயசு கொறைச்சல்தான்னு..,” என்று ஆரம்பித்த ரவி, தன்னறைக்குள்போய் எதையோ எடுத்து வந்தான்.

ஒரு பூப்போட்ட சட்டையைத் தந்தையிடம் கொடுத்தபடி, “இந்தாங்கப்பா. என் ஃப்ரெண்ட் எனக்காக வாங்கிட்டு வந்தான். எனக்குத் தொளதொளன்னு இருக்கு. ஒங்களுக்குச் சரியா இருக்கும்,” என்றான்.

அதற்குள் மணி செண்ட் பாட்டிலைத் திறந்து முகர்ந்து கொண்டிருந்தார். மூக்கு சுளித்தது. “இது என்னடா கர்மம்? இந்த நாத்தம் நாறுதே?”

“இது.. ஆண்களை விரட்டியடிக்கும், பெண்களைக் கவர்ந்திழுக்கும்!” விளம்பரத்தொனியைக் கையாண்டான்.

“இந்த வயசில எனக்கெதுக்குடா இந்தக் கண்ராவியெல்லாம்!”

“பாத்தீங்களா, பாத்தீங்களா? ஒங்க வயசை நீங்க மறந்து நடக்கணும்னுதானே பிளான் போட்டோம்? எனக்குத் தெரியும். சொன்னாக் கேளுங்கப்பா!” என்று வற்புறுத்தி அவரை இணங்கவைத்தான் ரவி. தனது வாக்குச் சாதுரியத்தில் பெருமைகூட ஏற்பட்டது அவனுக்கு.

License

வயதைக் குறைக்க Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *