1 வந்ததே முடிவு பிரம்மச்சரியத்துக்கு

வைத்தியின் கல்யாணம் நடந்ததே ஒரு விபத்தால். இல்லையென்றால், பெண் பார்க்க அவனது ஒரே உறவினளான பாட்டி ஏற்பாடு செய்திருந்த அன்று பார்த்து அவனுக்குக் கண்வலி வருவானேன், பார்வையும் மங்கலாகிப் போவானேன்!

விழியை அகற்றிப் பார்த்தபோது, நிழலாகத்தான் தெரிந்தது எதிரில் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் உருவம். சந்தியா காலமாக இருந்ததால், எரிந்துகொண்டிருந்த இரு மின்சார விளக்குகள்கூட பிரயோசனப்படவில்லை.

தனக்குப் பெண்டாட்டியாக வாய்க்கப்போகிறவளை பேரன் நன்றாகப் பார்த்துக்கொள்ள வாய்ப்பளிப்பதற்கென்று, “ஒரு பாட்டு பாடும்மா!”என்று கேட்டுக்கொண்டாள் பாட்டி. அவளுக்குக் காது டமாரச் செவிடு என்பது வேறு விஷயம்.

பட்டிக்காட்டுப் பெண்ணாக உருமாற்றப்பட்டிருந்த பெண்ணும், `எந்தப் பாட்டைப் பாடறது?’ என்று அம்மாவைக் கண்ணாலேயே கேட்டாள்.

“சாமி பாட்டு பாடு, ரஞ்சி!” என்றாள் பாக்கியம், கனிவுடன்.

அவளும் ஆரம்பித்தாள்: “ஐயா சாமி, ஆவோஜி சாமி! ஐயா சாமி, ஆவோஜி சாமி! ஐயா…”

ரஞ்சிதத்தைச் சொல்லிக் குற்றமில்லை. அவள் வளர்ந்திருந்த விதம் அப்படி. ஒரே மகள். வீட்டின் செல்லப்பெண். எதற்காக கஷ்டப்பட்டுப் படிக்கவேண்டும், எப்படியும் ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கொண்டு, கணவனுக்குச் சமைத்துப் போடத்தானே போகிறோம் என்ற ஞானம் பதின்மூன்று வயதிலேயே வந்திருந்ததால், படிப்பில் நாட்டம் போகவில்லை.

மாறாக, அவளுடைய கவனம் முழுவதும் தமிழ்ப்படங்களில் லயித்தது. தாயும் மகளும் பழைய, புதிய படம் ஒன்று விடாமல் வீடியோவில் பார்த்தார்கள். பொழுதுபோக்காகவும் இருந்தது, கோயிலில், தெருவில் இன்னும் பார்க்கும் இடங்களில் எல்லாம் சந்திக்கும் தோழிகளுடன் அலசுவதற்கு சுவாரசியமான சமாசாரம் கிடைத்தது போலவும் ஆயிற்று.

அவள் பிறக்குமுன்பே வெளியாகியிருந்த படங்களில் ஒலித்த பாடல்கள், நடிக நடிகையரில் யார் யாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்கள் போன்ற அதிமுக்கியமான சமாசாரங்கள் எல்லாமே ரஞ்சிதத்திற்கு அத்துப்படி.

நல்லவேளையாக, அவளுக்கு அந்த `ஐயா சாமி’யில் இரண்டு வரிகளுக்குமேல் நினைவிருக்கவில்லை. அதையே நாலைந்து முறை திரும்பத் திரும்பப் பாடினாள். தலையை ஆட்டாது பாட, அதிகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

`இந்த அம்மா ஒண்ணு, இவ்வளவு நீள சவுரியை வெச்சு சடை பின்னி விட்டிருக்காங்க! அதுக்கு மேல ஒரு பந்து மல்லிகைப்பூ வேற! ஒரேயடியா கனக்குது! எங்கேயாவது விழுந்து வெச்சு, வந்திருக்கிறவங்க எதிரே மானத்தை வாங்கிடப்போகுது!’ என்று மனதுக்குள் கவலைப்பட்டாள்.

எதிரே இருந்த நாற்காலியில் விறைப்பாக உட்கார்ந்திருந்த மாப்பிள்ளைப் பையனைப் பார்க்க தலையை நிமிர்த்தினாள். தனக்கு வாழ்வு கொடுக்க வந்திருக்கிறாரே!

முக அழகைக் குறைத்துவிடும் என்று ஞாபகமாக, மூக்குக்கண்ணாடியைக் கழற்றி வைத்திருந்ததால், அவளுக்கும் லேசாகத்தான் தெரிந்தது. ஆனால் அவன் பார்வை தன்மேல் பதிந்திருந்தது என்றவரையில் புரிந்தது.

ஒரே சமயத்தில் ரஞ்சிதத்திற்குக் கோபமும், வெட்கமும் எழுந்தன. `சீ! என்ன இப்படி நம்மையே முறைத்து முறைத்துப் பார்க்கிறார்!’

மாப்பிள்ளையைச் சரியாகப் பார்க்க முடியவில்லையே என்ற நிராசையில் எழுந்த கோபம், தன்னைக் கண்டதுமே காதல் கொண்டுவிட்டார் போலிருக்கிறதே என்ற வெட்கம் கலந்த ஆனந்தம்.

தனக்குப் பிடித்து என்ன ஆகவேண்டும், அவருக்குத் தன்னைப் பிடித்தால் சரி என்று, திரைப்படங்களில் பார்த்த தமிழ்ப்பெண்ணாய் லட்சணமாய் எண்ணமிட்டவள், பின்பாரம் தாங்காது தலையைக் குனிந்துகொண்டாள்.

“பொண்ணு ரொம்ப அடக்கம்!” என்று பாட்டி மெச்சினாள். “நல்லாவும் பாடறா! ஏண்டா, வைத்திநாதா! பிடிச்சிருக்கில்ல?” என்றுவிட்டு, “ஒன்னை என்ன கேக்கறது! அதான் ஒன் முழியே சொல்லுதே!” என்று தானே அந்த விஷயத்துக்கு ஒரு முடிவும் கட்டினாள்.

வைத்தி அசடுவழியச் சிரித்தான். அப்போதே மாப்பிள்ளைகளை வந்துவிட்டது போலிருந்தது.

மாப்பிள்ளையின் தலை மறைந்ததுமே பெண் வீட்டுக்காரர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச ஆரம்பித்தார்கள்.

எல்லாரையும் மீறிக்கொண்டு எழுந்தது பெண்ணுக்குத் தாயான பாக்கியத்தின் குரல்: “பையனைப் பாத்தா சாதுவா இருக்கார். நம்ப பொண்ணை அடிச்சு கிடிச்சுச் செய்யாம, அருமையா வெச்சுப்பாருன்னுதான் தோணுது!”

“வைத்தியை எனக்கு பள்ளிக்கூட நாளிலேயே தெரியும். தன்னைக் கடிக்கிற கொசுவைக்கூட அடிக்க அவனுக்குத் தைரியம் கிடையாது!” பெண்ணின் அண்ணன் ரவியும் ஒத்துப் பாடினான். சற்று யோசித்து, “ஆனா என்ன! ரொம்ப கருமி!” என்றான்.

“நல்லதுதான். வீண் செலவு செய்ய மாட்டார்!”

தந்தை மணி, தன் பங்குக்கு, “பையன் கொஞ்சம் எலும்பா இருக்காரில்ல?” என்று கேட்டுவைத்தார். மாப்பிள்ளைப் பையனை அவருக்கும் பிடித்துப் போயிருந்தது. ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும் மனைவியின் குணத்தை அறியாதவரா, அவர்!

தன்னை மீறி ஒருவர் பேசுவதா! பாக்கியத்திற்கு அசாத்தியக் கோபம் எழுந்தது. “கல்யாணத்தின்போது நீங்க எப்படி இருந்தீங்களாம்?” வருங்கால மருமகனுக்குப் பரிந்தாள். “நாளைக்கே, கல்யாணமானதும், நம்ப ரஞ்சி சமைச்சுப்போட்டா, அவர் ஒடம்பு தானே தேறிடாதா!”

“ரஞ்சியோட சமையல்! அதைச் சாப்பிட்டு ஒருத்தர் உடம்பு ஊதிடும்!” ரவி பெரிதாகச் சிரித்தான். “ஜோக் பண்ணாதீங்கம்மா!”

அவள் சோறு சமைத்தால், ஒன்று, குழைந்து போகும், அல்லது அடிப்பிடித்து, பாத்திரத்தையே தூக்கி எறியும்படி வந்துவிடும் என்றால், மற்ற குழம்பு, கறி வகைகளைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது!

“நீ சும்மா இருடா!” என்று மகனை அடக்கினாள் தாய். “செல்லமா வளர்ந்த பொண்ணு! இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப்போறதாச்சேன்னு, ஒரு வேலையும் செய்யவிடாம அருமையா வளர்த்துட்டேன். இப்ப என்ன? உள்ளூரிலேதானே இருக்கப்போறா? நான் அடிக்கடி போய் அவளையும், மாப்பிள்ளையையும் கவனிச்சுட்டுப் போறேன்!”

`பாவம் வைத்தி!’ கண்களை உருட்டியபடி அங்கிருந்து நகர்ந்தான் ரவி.

“தாய், தகப்பன் இல்லாதவர், பாவம்! நம்பகிட்ட அருமையா இருப்பார். ரஞ்சிக்கும் மாமியார், நாத்தனார் பிடுங்கல் எதுவும் இருக்காது!” என்று சந்தோஷப்பட்டுக்கொண்ட பாக்கியம், “என்னங்க! இந்த வரனையே முடிச்சுடுங்க!” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டினாள்.

இப்படித்தான் வைத்தியின் பிரம்மச்சரியத்துக்கு ஒரு முடிவு வந்தது.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *