44 ரவியின் திட்டம்

இரவு கிட்டத்தட்ட ஒன்பது மணி. வேண்டாவெறுப்பாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான் வைத்தி.

சற்று தூரத்தில் ரவியின் கார் நிற்பதும், அதன் பின்சக்கரத்தின் அருகே மைத்துனன் குனிந்திருப்பதும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. தன் வண்டியை அருகே ஓட்டிப்போனான்.

“என்ன ரவி? பங்க்சரா?

“ஆமா. ஒன்னைப் பாக்கத்தான் வந்தேன். அதுக்குள்ளே இப்படி!”

“வா. ரெண்டுபேருமா மாத்திடலாம்!”

ரவி விழிப்பது வேடிக்கையாக இருக்க, வைத்தி சிரித்தான். “ஸ்பேர் இல்லியா?”

`எவ்வளவு நாட்களாகிவிட்டன, நான் சிரித்து!’ என்று ஒரு நினைவு போயிற்று.

“மெகானிக்கைக் கூப்பிட்டிருக்கேன்,” என்ற ரவி, “ஆமா? ஆபீசிலிருந்து இப்பத்தான் வர்றியா?” என்று கேட்டான். மாப்பிள்ளை நாள் தவறாது, இரவில் எங்கோ போவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்ற தாயின் குற்றச்சாட்டை அலட்சியப்படுத்திவந்தவனுக்கு, முதன்முறையாக, `அதில் ஏதாவது விஷயம் இருக்குமோ?’ என்ற சந்தேகம் பிறந்தது.

“வீட்டில யாரு எனக்காக காத்திட்டு இருக்காங்க!” விரக்தியுடன் பேசினான் வைத்தி. “ஆபீஸ் விட்டா, கிளப்! அப்புறம் வெளியே சாப்பிட்டுட்டு, கால் கெஞ்சறவரைக்கும் அப்படியே நடப்பேன்!”

ரவி சட்டென்று நின்று, அவனை உற்றுப் பார்த்தான். இவனைப்போய் தான் தவறாக நினைத்தோமே என்று வெட்கினான். இந்த அப்பிராணிக்கு எந்த விதத்திலேயாவது உதவ வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

“ஆனாலும், நீ ரொம்ப..!” முடிக்காமல் விட்டான். “இந்தமாதிரி இருந்தா, எங்கம்மாகிட்டேயும், ரஞ்சிகிட்டேயும்.. ஊகும்!” தலையாட்டிக்கொண்டான் நம்பிக்கையின்றி.

வைத்தி கையை விரித்தான் பரிதாபகரமாக, `என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லையே!’ என்பதுபோல்.

“நானா இருந்தா, ஒரு அறைவிட்டு, ரஞ்சியை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுவேன்!”

“சேச்சே!”

சிறிது நேரத்தில் காரை பழுதுபார்ப்பவன் வர, இருவரும் அருகிலிருந்த டீக்கடைக்குப் போனார்கள்.

தயங்கியபடி, வைத்தி கேட்டான்: “ரஞ்சி.. அவ ஒடம்பு தேவலியா?”

ரவியின் முகத்தில் குடிகொண்ட அலட்சியம் அந்த அரைகுறை வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரிந்தது. “அவளுக்கென்ன! எய்ட்ஸ், இல்ல கான்சர் வந்தவங்ககூட இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பா இருப்பாங்க!” என்றவன், “அவளைச் சொல்லியும் குத்தமில்லே. `நம்பளையும் நம்பி ஒரு ஆள் வந்திருக்கே’ன்னு பூரிச்சுப் போயிருக்காங்க அம்மா. கைப்பிள்ளைமாதிரி..!”

வைத்தி முகத்தைக் கடுமையாக ஆக்கிக்கொண்டான். “ரவி! ஒங்கம்மாவை எனக்கு அவ்வளவா பிடிக்காதுதான். இருந்தாலும், பெரியவங்களைப்பத்தி நீ இப்படிப் பேசறது நல்லாயில்லே!”

“அட போப்பா! பெரியவங்க சும்மா வயசை முழுங்கிட்டா மட்டும் போதுமா? அதுக்கு ஏத்த குணமும் இருக்கணும்!”

“இப்ப ஒங்கம்மா என்ன செஞ்சுட்டாங்க? அவங்க பொண்ணோட துக்கத்தைப் பாக்க சகிக்காம..”

“பெரிய துக்கம்!” ரவி இடைவெட்டினான். “ஒனக்கில்லாத துக்கமா?”

வைத்திக்கு வாயடைத்துப்போயிற்று. இவன் ஒருவன்தான், குறை ஆயுளில் போன குழந்தைக்காக தந்தையும் துக்கப்படுவான் என்று ஒத்துக்கொண்டிருக்கிறான்!

“விவரம் தெரிஞ்ச ஒரு அம்மா என்ன சொல்லி இருக்கணும்? `பாவம்! ஒன்னைவிட்டா அந்த அசட்டு மனுஷனுக்கு — அதான் ஒன் வீட்டுக்காரனுக்கு,,”

“ஏய்!”

வைத்தியின் குறுக்கீட்டைப் பொருட்படுத்தாது, “அம்மா புத்தி சொல்லி இருக்கணும். `ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருந்துக்குங்க’ன்னு ரஞ்சியைத் திருப்பி அனுப்பியிருக்கணும். இவங்களோ, இன்னும் தூபம் போட்டுக்கிட்டு..! அவளே புறப்பட்டாகூட, தடுத்துடுவாங்க போல இருக்கு!”

வைத்திக்கு திடீரென ஏதோ ஞாபகம் வர, “ஐயையோ!” என்று கையை உதறினான்.

“என்னது? ஏதாவது பூச்சி கடிச்சுடுச்சா?” கேலியாகக் கேட்டான் ரவி. சுரணை இல்லாதிருக்கும் ஆணை எப்படி உசுப்பேற்றினால், அவன் ஆணாக, லட்சணமாக நடந்துகொள்வான் என்று அவனுக்குத் தெரியும்.

“அட, நீ ஒருத்தன்! என் ஃப்ரெண்ட் வீட்டிலே டின்னர். நான் கண்டிப்பா ரஞ்சியையும் கூட்டிட்டுதான் வரணும்னு..!”

“இவ்வளவுதானே! நீயே வந்து கூப்பிடேன்!”

வைத்திக்கு எங்கிருந்தோ ரோஷம் வந்தது. “அதான் நடக்காது. அவ என்னை யாருன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கா?”

ரவி ஒரு சிறு புன்னகையுடன் புருவங்களை உயர்த்தினான்.

“எல்லாத்துக்கும் என்மேல தப்பு கண்டுபிடிச்சுட்டு, அவ போய், அம்மா வீட்டிலே ஒக்காந்திடணும். நான் வெக்கங்கெட்டுப்போய்..!”

“சரி. சரி. அம்மாவையும் பொண்ணையும் எப்படியாவது வழிக்குக்கொண்டு வரணும். அவ்வளவுதானே? அந்த பொறுப்பை என்கிட்ட விடு” என்று கூறிய ரவி, “இப்ப நீ என்ன பண்றே, பைக்கிலே என்னை வீட்டிலே கொண்டு விடுவியாம்!” என்று முதல் கட்டத்தை ஆரம்பித்தான்.

“கொஞ்சம் பொறுத்தா, காரே ரெடியாகிடுமே!”

“கார் ஒன் வீட்டிலே இருக்கட்டும். நாளைக்கு எடுத்துக்கிட்டா போச்சு! ஆனா, வைத்தி, நீ கண்டிப்பா வீட்டுக்குள்ளே வரவேண்டாம் — வரக்கூடாது!” என்றபடி, கைத்தொலைபேசியை எடுத்தான் ரவி.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *