29 ரகசியத் திட்டங்கள்

அன்று ஞாயிற்றுக்கிழமை. காரைத் திறந்து வைத்துக்கொண்டு, ஏதோ எண்ணையை ஊற்றி, அதை, இதைத் துடைத்து, அதற்கு சிசுருஷை செய்துகொண்டிருந்தான் ரவி.

வழக்கமாக தமிழ், ஆங்கில தினசரிகள் எல்லாவற்றையும் வாங்கி, அவைகளில் ஆழ்ந்துவிடும் மணிக்கு அன்று சுரத்தே இல்லை. மகனைத் தேடிக்கொண்டு வாசலுக்கு வந்தார்.

“ஒங்கம்மாவுக்கு என்னடா ஆயிடுச்சு? ரஞ்சி வீட்டில தங்கிட்டு வந்ததிலேருந்து எங்கிட்ட முகம் குடுத்தே பேசறதில்ல,” என்றார் பரிதாபமாக. பின், குரலைத் தணித்துக்கொண்டு, “நீ ஏதாவது சொல்லிட்டியா?” என்று கேட்டார், அதற்கு உண்மையான பதில் அவனிடமிருந்து வராதென்று தெரிந்திருந்தும்.

“சேச்சே! என்னப்பா நீங்க!” வன்மையாக மறுத்தான் மகன். “நான் நினைக்கறேன், ரஞ்சி வீட்டில.. அவங்க புதுசா கல்யாணமானவங்க, இல்லியா? வைத்தி அசட்டுப்பிசட்டுன்னு நடந்துக்கிட்டிருப்பான் பொண்டாட்டிகிட்ட! அம்மாவுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும்!” என்று தானே ஒரு காரணத்தைக் கற்பித்துக் கூறினான்.

“நான் என்னிக்கு அப்படி நடந்திருக்கேன்!” மணியால் குரலிலிருந்த ஏக்கத்தை மறைக்க முடியவில்லை.”மூணு தங்கச்சிங்க — ஒன் அத்தைங்கதான். பாட்டியும் கடைசிவரைக்கும் நம்பகூடவேதானே இருந்தாங்க! அம்மா கிட்ட வந்தாலே..!”

ஏதோ புரிந்தவனாக ரவி தலையை ஆட்டிக்கொண்டான். “தாலி கட்டினவர் பக்கித்தில வர்றதுகூட அசிங்கமா?” மேலும் யோசித்தவன், “ஓ! அதான், நீங்க வெளியில கிளம்பினாலே, அம்மாவுக்கு அப்படி ஒரு பயம்!” என்று சரியாக ஊகித்தான்.

“தனியா ஒங்கம்மாவைக் கூட்டிட்டு நான் எங்கேயுமே போனது கிடையாது, ரவி. அப்படியே போனாலும், கல்யாணம், இல்லே, கருமாதிக்குத்தான்! எங்க காலம் அப்படி. இப்ப நானே கூப்பிட்டாக்கூட, அவளுக்குக் கூச்சமா இருக்கு!”

“இப்ப.., ஒங்களுக்கு அம்மாமேல அன்பு இருக்குன்னு காட்டிக்கணும். அவ்வளவுதானே!” ரவி நிறையவே யோசித்தான். “இப்படிச் செஞ்சா என்னப்பா? வர்ற ஞாயித்துக்கிழமை அம்மாவுக்குப் பிறந்தநாள்!”

அலட்சியமாகக் கையை வீசினார் மணி. “இதையெல்லாம் யாரு ஞாபகம் வெச்சுக்கறாங்க?”

“அம்மாதாம்பா. நீங்களும் மறக்காம, ஒரு பரிசு குடுத்தா..!”

மணியின் முகத்தில் வெளிச்சம் வந்தது. “பரிசென்னடா பரிசு! தடபுடலா விழாவே கொண்டாடிலாம்!”

கேக், வெளியிலிருந்து ஆர்டர் செய்த விருந்துச் சாப்பாடு என்று உற்சாகமாகத் திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள் இருவரும்.

“இப்படியெல்லாம் செய்யணும்னு எனக்கு மொதல்லேயே தோணல, பாத்தியா!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார் மணி.

“ஏம்பா? கேக்கில எவ்வளவு மெழுகுவத்தி வைக்கலாம்? அம்பத்தி..,” என்று கணக்கிட்டவனைச் சாடினார் மணி. “ஏண்டா? இப்ப நாம்ப கொண்டாடறது எதுக்கு? `ஒனக்கு ரொம்ப வயசாகிடுச்சு’ன்னு ஒலகத்துக்கே டமாரம் அடிக்கவா? அது அம்மாவைக் கேலி செய்யறமாதிரி ஆகிடாது?”

“இது எனக்குப் புரியலியே! ஒங்களுக்கும் வயசானதால, ஒங்களைப்போல இன்னொருத்தர் மனசு..!”

“டே டேய்! சமயத்ததில காலை வார்றே, பாத்தியா!”

ரவி சிரித்தான். “சரி. எத்தனை மெழுகுவத்தி வைக்கலாம்? நீங்களே சொல்லுங்கப்பா!”

“பதினெட்டு,” என்றார் மணி, ஆணித்தரமாக.

`அது என்ன கணக்கு?’ என்று முதலில் விழித்த ரவி, புரிந்து கொண்டவனாக, `ஓ! கல்யாணம் ஆனப்போ, அம்மாவுக்கு பதினெட்டு வயசில்ல!’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். பாசத்துடன் தந்தையை நோக்கினான்.

“அவளுக்கு எத்தனை வயசானாலும், என் கண்ணுக்கு என்னவோ..!” சுவற்றில் மாட்டியிருந்த கல்யாணப் போட்டோவில் மாலையும் கழுத்துமாகத் தன் பக்கத்தில் நின்றிருந்த மனைவியையே அன்பு கனியப் பார்த்தார் மணி.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *