20 ரகசியச் சந்திப்பு

கடந்த வாரம், ஏதோ உற்சாகத்தில், செம்பருத்திச் செடிகளுக்கு அளவுக்கு அதிகமான உரம் போட, அதனால் மஞ்சளாகிவிட்ட இலைகளை ஒவ்வொன்றாகக் கிள்ளிப் போடும்போதுதான் அந்த யோசனை பிறந்தது மணிக்கு. வேண்டாத பழைய குப்பைகளை நீக்கினால், புதியன துளிர்க்காதா?

தாய் ஆட்டுவித்தபடி எல்லாம் ஆடுபவள் ரஞ்சி. பாக்கியமோ, தன்னைவிடத் தன் அண்ணன்மார்களை அதிகம் படிக்க வைத்துவிட்டார்கள் பிறந்த வீட்டில் என்று, பொதுவாக ஆண்வர்க்கத்தின் மேலேயே கோபத்தை வளர்த்துக்கொண்டவள்.

மகளே மனம் மாறி, `கணவன் வீட்டுக்குப் போகிறேன்,’ என்றால்கூட, இவள் அனேகமாகத் தடுத்து விடக்கூடும். இவளை மீறித் தான் எதுவும் செய்ய முடியாது.

பாக்கியம் அறியாமல் செய்தால்?

நம்பிக்கை பிறக்க, சாயந்திரம் கோலாலம்பூர், ஈப்போ ரோடு சித்தி விநாயகர் கோயிலுக்குக் கிளம்பினார் மணி. காரியம் கைகூட வேண்டுமென்றால், வேறு யாரைப் பிடிப்பது என்று அவன் அங்குதான் வருவான் என்று அவர் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. படி ஏறிப் போனதுமே பார்த்துவிட்டார். வாய் ஏதோ மொணமொணக்க, பிராகாரத்தைச் சுற்றியபடி இருந்தவன், மாமனாரைக் கண்டதும் பயந்தான். நழுவப்பார்த்தவனை விடவில்லை மணி. சிநேகிதமாக அவன் தோளில் கைவைத்து அழுத்தினார். “என்ன வைத்தி! எங்கே, பாக்காதமாதிரி போறே?”

வைத்திக்கு மூச்சு திரும்பி வந்தது. அக்குடும்பத்தில் தன்னைப் பிடித்தவர்களும் இல்லாமல் போகவில்லை!

“நல்லா இருக்கீங்களா, மாமா?”

“எனக்கென்ன கேடு? ஒன்னைப் பாத்தாதான் சகிக்கலே!”

தான் சகிக்க முடியாது இருக்கிறோமா?

ரஞ்சி பார்க்க வேண்டும் இப்போது!

சிறிதே சந்தோஷம் உண்டாயிற்று. தன்னிச்சையாகத் தாடையை நோக்கிப் போயிற்று அவன் கரம். தடவிப் பார்த்துக்கொண்டான்.

“இது என்ன வேஷம்?” செல்லமாக வைதார் மாமனார். “நீ சாமான் வாங்கற கடையில பிளேடு தீர்ந்து போச்சா?”

வைத்தி மனம் நொந்து, “நான் யாருக்காக மாமா இனிமே அழகா இருக்கணும்!” என்றான்.

“அட! சவரம் பண்ணிக்கறவன் எல்லாம் அழகா ஆயிடறானா? ஏதோ சுத்தமா..,” என்று அவர் வியாக்கியானம் செய்துகொண்டு போக, அதற்கு மேலும் பொறுக்க முடியாது இடைவெட்டினான் வைத்தி. “வீட்டிலே.. எல்லாரும் நல்லா இருக்காங்களா, மாமா?”

தனக்குள் சிரித்துக்கொண்டார் மணி. `இதைக் கேட்க இவ்வளவு நேரமாயிற்றாடா பயலே உனக்கு?’

மிடுக்காகச் சொன்னார்: “நீயே வந்து பாக்கறது!”

அந்த அழைப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தவனுக்கு இப்போது பயம் எழுந்தது. “நான் எந்த மூஞ்சியோட மாமா அங்க வர்றது?”

“சும்மா இந்த மூஞ்சியோடேயே வா!” ஜோக்கடித்தார். “நல்லா இல்லேங்கிறதுக்காக அடிக்கடி மாத்தவா முடியும்?”

அதற்கு மேலும் அவன் யோசிப்பதைப் பார்த்துவிட்டு, தன் இறுதி அஸ்திரத்தைப் பிரயோகித்தார். “இப்பவே பிடிச்சு ஒன் பெண்டாட்டியை அம்மா வீ்டடில விட்டு வெச்சா, ” என்று கண்ணடித்துவிட்டு, “இன்னும் ஆறு மாசத்துக்கு அப்புறம்தான் இருக்கு இருக்கு கட்டாயப் பிரிவு!”

அப்படியும் அவன் விழிப்பதைக்கண்டு, “அதான், வளைகாப்பு, சீமந்தம், அப்புறம்..!” என்று கோடி காட்டினார்.

வைத்தியின் விழி பிதுங்குவதை ரசித்தபடி, `நாளைக்கு நம்ப வீட்டில விருந்துதான்! நேரே பாசார் மாலாமுக்கு (இரவுச் சந்தை) போகணும்,” என்று நிச்சயித்தபடி நகர்ந்தார்.

வீடு திரும்பிய வைத்தியின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

தான் அப்பாவாகப்போகிறோம்!

ரஞ்சியைப் பார்க்கப்போகிறோம்!

என்னதான் அவளுடன் பிணக்கு இருந்தாலும், பெரியவரின் அழைப்பை மதித்துப் போகாவிட்டால், மரியாதைக் குறைவாக ஆகிவிடும் என்று சொல்லிக்கொண்டான். உதடுகளைக் குவித்து விசில் அடித்தபடி குளியலறைக்குச் சென்றான்.

`ராத்திரி வேளையில சவரம் பண்ணிக்காதேடா, வைத்திநாதா! இப்ப கண்ணாடியில பாத்துக்கிட்டா, அடுத்த பிறவியில மோசமான பிறவிதான் கிட்டும்!’ பாட்டியின் குரல் கடந்த காலத்திலிருந்து அசரீரியாக ஒலித்தது.

அதை அலட்சியம் செய்துவிட்டு, சவர க்ரீமை தாடையில் பூசிக்கொண்டான். அப்போது இன்னொரு அசரீரி கேட்டது: `ரொம்ப வருத்தமா காட்டிக்க. ஒன்னைப்பாத்தா, அப்படியே அவங்களோட தாய்மை உணர்ச்சி பொங்கணும்!”

கையிலெடுத்த பிளேடைஎடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டான். பாட்டியின் வார்த்தையை மீறி நடக்காததுபோலவும் ஆயிற்று, ரஞ்சியைப நெருங்க வழி பண்ணியதுபோலவும் ஆயிற்று என்ற சந்தோஷம் பிறந்தது. கண்ணாடியை விட்டு அகலாது, முகத்தைப் பலவிதமாகக் கோணி, ஒத்திகை பார்த்துக்கொண்ண்டான்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *