5 மோதல்

“ராதி! இன்னிக்கு நீ எங்க வீட்டுக்கு வர்றே!” விளையாட்டும் கண்டிப்புமாகப் பேசினான் ரவி. கல்யாணம் ஆகிவிட்டால், நாம் சொல்வதை இவள் கேட்பாளோ, என்னவோ, இப்போதே கட்டுப்படுத்தினால்தான் உண்டு என்ற முதிர்ச்சி அவனுக்கு வந்திருந்தது.

ராதிகா தயங்கினாள். “என்னவோபோல இருக்கு, ரவி. ஒங்கப்பா அம்மா எங்க வீட்டுக்கு வர்றதுதான் முறை!”

“சம்பிரதாயத்திலே அவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கிறவளுக்குக் காதலா கேக்குது?” ரவி சீண்டினான். “நான் வந்து ஒன்னை முறையா..பொண்ணு பாக்க வர்றவரைக்கும் காத்திருக்கிறது!” ராதிகாவும் அந்த விளையாட்டில் பங்கு கொண்டாள். “எல்லாம் ஒங்களாலதான்! நான் பயலாஜி லாபிலே நான் வெட்டறதுக்காக வெச்சிருந்த தவளைதான் எனக்குப் பராக்கு காட்டிட்டு ஓடிப்போச்சு. அதுக்குத்தான் பயம். நீங்க ஏன்..?”

“இந்த மாதிரி ஏதாவது சான்ஸ் வரும்னுதானே நான் அந்தப் பாடமே எடுத்துக்கிட்டேன்! ஒன்னோட தவளையைப் பிடிக்க அங்கே இங்கே ஓடி, கடைசியிலே ஒன் மனசிலேயும் இல்லே இடம் பிடிச்சுட்டேன்!”

இருவரும் ஒருவர் கண்ணுக்குள் ஒருவர் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

சிரிப்பினிடையே, “ஒங்களை மொத மொதல்லே பாத்தபோது, `சரியான லூஸ் இந்தப் பையன்’னு நினைச்சுக்கிட்டேன்!” என்று கூறினாள் ராதிகா.

“ஏய்!”அவளைத் தாவிப் பிடிக்கப் போனவனிடமிருந்து விலகி, தொடர்ந்தாள். “தனக்குத்தான் ரொம்பத் தெரிஞ்சமாதிரி டீச்சரோட சண்டை போடறது, அரை மார்க் குறைச்சுப் போட்டுட்டாங்கன்னு ஒரு மணி தர்க்கம் பண்ணறது…!”

“நீ என்னதான் சொல்லு, ராதி, எங்களுக்கு இருக்கிற மூளை, சாமர்த்தியம்.. பொண்ணுங்களுக்குக் கிடையாது!” காதலியை வசப்படுத்துவதற்கு முன்னால் மட்டும்தான் மோதல் என்பதில்லை. வம்புக்கு இழுப்பதும் சுகம்தான் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

ராதிகாவும் சளைக்காது, “ஓகோ! நான் சரித்திரம், கெமிஸ்ட்ரியில   எல்லாம் ஒங்களைவிட அதிக மார்க் வாங்கி இருக்கேனே! அதுக்கு என்ன சொல்றீங்க?” என்று சவால் விட்டாள்.

“அம்மா, போதும்மா இந்தப் பேச்சு. அப்புறம், ராத்திரி பரீட்சை சொப்பனமா வந்து பயமுறுத்தும்!” போலியாக நடுங்கினான் ரவி.

அதற்குள் வீட்டு வாசலை அடைந்து விட்டதால், அந்த உரையாடலுக்கு ஒரு முடிவு வந்தது.

“அம்மா! யார் வந்திருக்காங்க, பாருங்க!” வாசலிலிருந்தே உற்சாகமாகக் குரல் கொடுத்தான் ரவி.

பதிலுக்கு, “ஒன் குரல் எனக்குத் தெரியாதாடா, ரவி!” என்றபடி வாசலுக்கு வந்த பாக்கியம், அவனுடன் வந்திருந்தவளைக் கண்டு சற்றுத் திகைத்துப்போனாள்.

“ஒங்களக்கு ராதிகாவைத் தெரியுமில்ல? அதான் அன்னிக்குக் கடற்கரையிலே..” என்று நிலைமையைச் சீர்படுத்த முயன்றான் ரவி.

பாக்கியம் விறைப்பாக நின்றாள். வீட்டுக்கு வந்தவளை `வா!’ என்று வரவேற்கத் தோன்றவில்லை.`இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்குத்தான் என்ன துணிச்சல்!’ என்று அருவருப்புடன் அவளைப் பார்த்தாள்.

இம்மாதிரி ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்துத்தான் ராதிகா அவனுடன் வர அவ்வளவு தயங்கினாள் என்பது விளங்க, ரவிக்குத் தர்மசங்கடமாக இருந்தது.

“அம்மா! ராதிகாவும் நானும் பள்ளிக்கூட நாளிலேருந்தே ஃப்ரெண்ட்ஸ்!” பலகீனமாக வந்தது அறிமுகம்.

`அடப்பாவி! இதுக்காடா ஒன்னைப் படிக்க அனுப்பினேன்!’ பாக்கியத்தின் மனக்குரல் முகத்தின்வழி வெளிவந்தது.

இந்த அம்மாவை ஆரம்பத்திலேயே எதிர்த்தால்தான் உண்டு, இல்லை, அப்பாவைப்போல் ஒரேயடியாக வளைந்து போய்விடுவோம் என்று நினைத்தவனாய், ரவி உடலை நிமிர்த்திக்கொண்டான். பின், திடமான குரலில் அறிவித்தான். “நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்!”

தன்னிடமே இவ்வளவு தைரியத்துடன் பேசுவான் மகன் என்று எதிர்பார்த்திராத பாக்கியம், “நீங்கபாட்டிலே ஏதாவது முடிவு எடுத்திட்டு வந்தா ஆச்சா? ரெண்டு வீட்டிலேயும் பெரியவங்ககிட்ட..,” என்று சொல்ல ஆரம்பித்தவள், ஏதோ சந்தேகம் எழ, “ஏம்மா? ஒனக்கு அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்கதானே?” என்று கேட்டாள்.

தான் எந்தப் பேச்சைக் கேட்க வேண்டாம் என்று நினைத்தோமோ, அது இப்படி அசந்தர்ப்பமாகக் கிளம்பிவிட்டதே என்று ராதிகா குலைந்து போனாள்.

அவள் சார்பில் ரவிதான் பேசினான். “ராதிகாவோட அம்மாவை எனக்கும் தெரியும்மா. வேலைக்குப் போறவங்க!”

“அப்பா?”

“எனக்கு அம்மா மட்டும்தான், ஆன்ட்டி!”

“ஐயோ பாவம்! அப்பா இல்லாத பொண்ணா நீ?”

“அப்பா உயிரோடதான் இருக்கார். ஆனா, அம்மா அவரோட இல்ல. ரெண்டு பேரும் சட்டப்படி பிரிஞ்சுட்டாங்க”.

அதிர்ச்சியுடன் பாக்கியம் வாயைப் பொத்திக்கொண்டாள். `சரியான திமிர் பிடிச்ச பொம்பளையா இருப்பா போல இருக்கே! அவளுக்குப் பிறந்தது மட்டும் எப்படி இருக்கும்? இந்த முட்டாள் பயலுக்கு நல்லா எடுத்துச் சொல்லணும், நாளைக்கு இவனை விட்டுட்டு இந்தச் சிறுக்கியும்..!”

பாக்கியத்தின் எண்ண ஓட்டத்தின் இரைச்சலில், அடுத்து அவர்கள் பேசியது எதுவும் கேட்கவில்லை.

“அம்மா!” சற்று அதிகாரமாகவே ரவி அழைக்க, “ஒக்காருங்க. இதோ போய் தண்ணி கலக்கிட்டு வரேன்,” என்று முகத்தைச் சுழித்தபடி உள்ளே விரைந்தாள் பாக்கியம்.

“ஸாரி, ராதி. சமயத்திலே அப்பா வீட்டில இல்லாம போயிட்டார். அவர் நாலு எடத்துக்குப் போறவர். பல பேரோட பழகறவர். இவ்வளவு மோசமில்ல!” என்று தாழ்ந்த குரலில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான் ரவி.

“படிப்பிலே மட்டுமில்லே, ரவி, மத்தவங்களை எடைபோடறதிலேயும் ஆணும் பெண்ணும் வித்தியாசப்படறாங்க!” என்றாள் ராதிகா, ஆழ்ந்த வருத்தத்துடன்.

“அம்மாவும் அப்பாவும் கெடக்காங்க! நான் ஒன்னைத்தான்..” படபடவென்று பேசியவனை, “என்னால முடியாது, ரவி,” என்று கையமர்த்தினாள் ராதிகா. “ஒலகம் ஏத்துக்காததால எங்கம்மாவும் நானும் பட்ட துன்பம் ஒங்களுக்கும் வரக்கூடாது!”

அவள் குரலிலிருந்த உறுதி ரவியைக் கலக்கியது. தன் தங்கையைப்போலவோ, அம்மாவைப்போலவோ இல்லாது, திடசித்தமும் தன்னம்பிக்கையும் கொண்ட புதுமைப்பெண் இவள் என்று அவன் கொண்டிருந்த பூரிப்பு ஆட்டம் கண்டது.

இவளுடைய பிடிவாதத்தைத் தான் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று மலைத்தான்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *