45 முரட்டு வைத்தியம்

“யாரு ரஞ்சி இந்த வேளையிலே கூப்பிட்டாங்க?”

“அண்ணனோட கார் ரிப்பேர் ஆயிடுச்சாம். வர லேட்டாகும்னு..!” பாதி வாக்கியத்திலேயே தன் அறைக்குள் ஓடினாள்.

`அண்ணனும், இவரும்தான் மெகானிக்கைக் கூட்டி வந்தாங்களாமே! அவசரமா இன்னிக்கே ரிப்பேர் செய்ய முடியாதுன்னாரே! அப்போ.. இவர்தான் கொண்டுவிடுவாரு!’ என்று பூரிப்புடன் எண்ணமிட்டவள், வலிய கோபத்தை வரவழைத்துக்கொண்டாள். `இருக்கட்டும். என்னை வந்து பாத்து எத்தனை மாசமாச்சு! நான் அவர் முகத்திலேயே முழிக்கப்போறதில்லே,’ என்று தீர்மானம் செய்துகொண்ட அடுத்த கணமே கண்ணாடியில் முகத்தில் எண்ணை வழியாமல் இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொண்டவள், மூக்கில் கொஞ்சம் பவுடரைப் பூசிக்கொண்டாள். கலைந்திருந்த தலையைக் கோதிக்கொண்டு, அப்படியும் திருப்தி ஆகாது, அவிழ்த்துப் பின்னிக்கொண்டாள் அவசர அவசரமாக.

ஸ்கூட்டர் சப்தம் இன்னிசையாகக் கேட்டது. கைகளை இறுக மூடியபடி, வாசலுக்கு ஓடாதபடி தன்னைக் கட்டுப்படுத்தியபடி நிற்க ரஞ்சி மிகுந்த பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

சிறிது பொறுத்த, கதவருகே நின்றுகொண்டு, பேச்சுச் சப்தம் கேட்கிறதா என்று ஒட்டுக்கேட்டாள்.

வெளியே வந்தபடி, “என்னண்ணா! கார் ரிப்பேரா?” என்று அசுவாரசியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள்.

“அதான் ஃபோன் பண்ணினேனே! பாவம், வைத்திதான் சிரமத்தைப் பாக்காம கொண்டு விட்டுட்டுப் போறான்!”

“போயிட்..டாரா?” ரஞ்சியின் குரல் தாழ்ந்து ஒலித்தாலும், அதிலிருந்த ஏமாற்றம் தெளிவாகவே கேட்டது.

ரவி தனக்குள் சிரித்துக்கொண்டான். “என்னை இவ்வளவு தூரம் கொண்டுவிட்டதே பெரிசு! நான்கூட, `வாசலோட போறியே! நாங்க என்ன, அந்நியமா?’ன்னு கேட்டேன். `உள்ளே வந்தா, என்னை மதிச்சுப் பேச யார் இருக்காங்க?’ன்னுட்டான். நியாயமான கேள்வி!”

அவளுடைய ஏமாற்றத்தைக் கவனித்துவிட்டு, விஷமச் சிரிப்புடன், “வீட்டிலே பாட்டி வேற தொணதொணத்துக்கிட்டு! பாவம், வைத்தி!” என்று தன் நாடகத்தை ஆரம்பித்தான்.

“பாட்டி வந்திருக்காங்களா?”

“சரியாப் போச்சு! ஒனக்கு விஷயமே தெரியாதா?” அடுத்து என்ன சொல்வது என்று யோசிக்க சிறிது இடைவெளி விட்டான். பிறகு தொடர்ந்தான்: “தினமும் கண்ட கண்ட இடத்திலே சாப்பிட்டு, இவனுக்கு வயத்திலே கட்டி. அதுக்காக பாட்டியை வரவழைச்சான்!”

பதட்டத்துடன், “ஒங்களுக்கு மொதல்லேயே தெரியுமா? என்கிட்ட சொல்லவே இல்லியே!” என்றாள் தங்கை.

“தெரியுமாவாவது! நான்தானே காரை எடுத்திட்டுப்போய், பாட்டியை ஸ்டேஷனிலேருந்து கூட்டிட்டு வந்தேன்! அவங்களுக்கு பைக்கில ஒக்கார பயமாம்! வயசாயிடுச்சில்ல, பாவம்!”

இவ்வளவு நடந்திருக்கிறது, தன்னை மதித்து ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லையே! ரஞ்சியின் சுயபரிதாபம் பெருக்கெடுத்தது.

`எல்லாரும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டாங்க!’ என்று முணுமுணுத்தபடி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ரவியின் மூளை வேகமாக வேலை செய்தது. “பாட்டி நம்ப வைத்தியைப் பாத்தாங்களா! அழவே ஆரம்பிச்சுட்டாங்க!” அனுபவித்துப் பேசினான். “இவனோ எப்பவுமே சாகப்போறவன்மாதிரி இருப்பான். இப்ப ஒடம்பு வேற மோசம். கேக்கணுமா? `ஒனக்கென்னடா தலையெழுத்து — பொண்டாட்டி குத்துக்கல் மாதிரி இருந்தும், இப்படிப் பரதேசிமாதிரி திண்டாட!’ அப்படின்னு கதறிட்டு, அண்ணங்காரன் நான் பக்கத்திலே இருந்ததைக்கூட லட்சியம் செய்யாம, `இந்த வீட்டுக்கு இன்னொரு பொண்ணைக் கொண்டுவர நானாச்சு!’ன்னு சபதம் போட்டாங்க!”

“நீங்களே அவரோட ஜாதகத்தை எடுத்துக்கிட்டு அலைவீங்க போலிருக்கே!” என்றாள் ரஞ்சி. உலகமே அவளுக்கு எதிரியாகிவிட்டதுபோல் தனித்து உணர்ந்தாள்.

ரவி அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டான். “நானா! சேச்சே!”வன்மையாக மறுத்தான். பிறகு, சுவாரசியத்துடன், “அவங்களுக்கு இப்போ ஜாதகம் பாக்கறதிலே நம்பிக்கையே போயிடுச்சு. தெரியுமா? `எவ்வளவோ பொருத்தம் பாத்துத்தான் ஒரு கல்யாணம் பண்ணினோம். அது என்ன வாழ்ந்திச்சு?’ங்கிறாங்க பாட்டி!”

இவர்களின் உரையாடலைக் கேட்டபடி வந்த பாக்கியம், “இந்தாடா! என்ன, நீபாட்டிலே ஒளறிக்கிட்டிருக்கே?” என்று மகனை அடக்கப்பார்த்தாள்.

ரவி விறைப்பாக நின்றுகொண்டான். “நாளைக்கே வைத்தி கல்யாணப் பத்திரிகை அனுப்பினா, என்னைக் குத்தம் சொல்லாதீங்க. அவ்வளவுதான்! நான் சொல்றதைச் சொல்லிட்டேன்!”

பாக்கியம் அடைந்த பயம் கோபமாக மாறியது. “அது எப்படி செய்துப்பாருன்னு நானும் பாத்துடறேன்! இவ உசிரோட இருக்கிறப்போ..”

“இவதான் அவனோட போகப்போறதில்லேன்னு தீர்மானம் ஆயிடுச்சே! அப்புறம், எவன், எந்தக் கழுதையைப் பண்ணிக்கிட்டா நமக்கென்ன!” எதை, எப்படிச் சொன்னால், அம்மாவுக்கும், பெண்ணுக்கும் வலிக்கும் என்று புரிந்து வைத்திருந்தான். “நான் என்ன சொல்றேன், சட்டப்படி விவாகரத்து வாங்கிட்டா, ஒங்ககூட ரா..ணிமாதிரி இருக்கலாம் ரஞ்சி!”

பாக்கியம் பதறிப்போனாள். “என்னடா, அசிங்க அசிங்கமா பேசறே! நாம்ப எவ்வளவு மரியாதைப்பட்ட குடும்பம்! விவாகரத்தாம் விவாகரத்து! சீ! போகுதே ஒனக்கும், மூளை!”

`என்ன கலாட்டா?’ என்று படுக்கையிலிருந்து எழுந்துவந்தார் மணி. கண்ணாலேயே மகனை விசாரிக்க, அவன் யாருக்கும் தெரியாமல், அவரைப் பார்த்துக் கண்ண்டித்தான்.

`தங்கை நல்லா வாழணும்னு இந்தப் பயதான் என்ன புளுகு புளுகறான்!’ என்று மகனை மெச்சிக்கொண்டு, பாதியில் விட்ட தூக்கத்தைத் தொடரப்போனார் மணி.

ரவி அத்துடன் நிற்கவில்லை. “அம்மா! நீங்க இன்னும் ஒங்க காலத்திலேயே இருக்கீங்க. அநியாயமா நடக்கிற புருஷனை தட்டிக்கேக்க சட்டமே இடங்குடுக்குது, இப்போ. முந்தி ஒரு தடவை வைத்தி நம்ப ரஞ்சியை அடிச்சானே, அப்பவே நாம்ப கோர்ட்டுக்குப் போயிருக்கணும்!”

“எனக்கு ஒண்ணுமே புரியல!” அதிர்ச்சி தாங்காது, அப்படியே தரையில் உட்கார்ந்தாள் பாக்கியம்.

“ஒங்களுக்கு ராதிகாவை நெனப்பிருக்கில்ல? அதான் பீச்சிலே பாத்தீங்களே!”

`இவன் ஒருத்தன்! நானும், இவனோட அப்பாவும் தனியா பீச்சுக்குப் போனதைச் சும்மாச் சும்மா சொல்லிக்காட்டிக்கிட்டு!” பாக்கியம் விறைத்துக்கொண்டாள்.

ரவி சிரித்துக்கொண்டான். “அவங்கம்மா இந்த தலைமுறையில பிறந்திருந்தா, `தைரியசாலி’ன்னு கொண்டாடி இருப்பாங்க. ரஞ்சிக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு. நாளைக்கே ஒரு நல்ல வக்கீலைப் பாத்து..!”

“சீ! சீ! வாயைக் கழுவுடா. கர்மம்!” தலையில் அடித்துக்கொண்டாள் பாக்கியம். இவ்வளவையும் கேட்டுக்கொண்டு, தான் அடுத்து என்ன பண்ண வேண்டும் என்ற பிரக்ஞைகூட இல்லாது ஜடமாக இருக்கும் மகளைப் பார்த்து எரிச்சலாக இருந்தது.

“இதோ பார், ரஞ்சி! நீ இங்கேயே எத்தனை நாள் இருக்க முடியும்? ஒரு பொண்ணு கழுத்திலே தாலி ஏறிட்டா, அப்புறம் அவ அம்மா வீட்டுக்கு விருந்தாளியாத்தான் வர முடியும். நீ இங்கேயே நிரந்தரமா தங்கிட்டா.., நம்ப குடும்ப கௌரவத்தையும் கொஞ்சம் யோசிச்சுப்பாரு!” என்று கறாராகச் சொன்னாள்.

தாயிடமிருந்து இம்மாதிரியான கடுமையான வார்த்தைகளைக் கேட்டே இராத ரஞ்சிக்கு அழுகை வந்தது. “ஒங்களுக்கெல்லாம் ஏன் என்னால கஷ்டம்! நான் நாளைக்கே..,” என்று ஆரம்பித்தவளை அவசரமாகத் தடுத்தான் ரவி. “நாளைக்கு வேண்டாம். போகாதே!” அவ்வளவுதான் அவனால் சொல்ல முடிந்தது. யோசிக்கச் சற்று நேரம் எடுத்துக்கொண்டான்.

“ஏண்ணா?” அழுகைக் குரலில் கேட்டாள் தங்கை.

ரவி தடுமாறினான். “ஒங்கிட்ட சொல்ல வேண்டாம்னு பாத்தா முடியல. நாளைக்கு ஒரு எடத்திலே.. பெண்பாக்கப் போறான் வைத்தி!”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *