42 மீண்டும் பிரிவு

பாக்கியத்திற்குத் தனது உடலைப்பற்றிய கவலைகள் பறந்தோடிவிட்டிருந்தன. உண்மையாகவே அவளை நாடும் மகள்தான் வீட்டிலேயே இருந்தாளே!

மிளகு ரசம் சேர்த்துக் குழையப் பிசைந்திருந்த சாதக் கிண்ணத்துடன் அறைக்குள் நுழைந்தாள். ரஞ்சிதம் கட்டிலில் படுத்தவாறே, எதிரில் மாட்டியிருந்த காலண்டரில் சிரித்துக்கொண்டிருந்த பாப்பாவைக் கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தது அவள் கண்ணுக்குத் தப்பவில்லை.

`ஏற்கெனவே பிள்ளையைப் பறிகுடுத்த துக்கத்தில இவ இருக்கா. இது வேற, இன்னும் அழவிட்டுக்கிட்டு! மொதல்ல இதைத் தூக்கி வீசணும்!’

“அம்மா! குழந்தை.. என் ஜாடையா, இல்ல, அவர் மாதிரியா? பொம்பளைப் பிள்ளைதானே?” திக்கித் திக்கிக் கேட்டாள் ரஞ்சி.

இதற்குப் பதில் கூற முடியாது, தாய்க்கும் அழுகை வந்தது. “விடு, ரஞ்சி! அடுத்த வருஷமே ராஜாமாதிரி ஒரு குழந்தை பிறக்கும், பாரு! இப்ப நடந்ததெல்லாம் கதையாப் போயிடும்!”

“ஹூம்! அஞ்சு மாசமா சுமந்ததே நிலைக்கலியே!”

இப்படியே புலம்பிக்கொண்டிருந்தவளிடம் என்னதான் பேசுவது என்று விழித்த பாக்கியம், “ரஞ்சி! ஒங்க வீட்டுக்காரர் இங்கேயேதான் இருக்காரு. கூப்பிடவா?” என்று பேச்சை மாற்றினாள்.

“எல்லாம் அவராலதான்! நான் எதுக்கு அவரைப் பாக்கணும்? கெளம்பறப்போவே தடங்கல். என்னைக் கேலி செஞ்சாரு. அதான் கடவுள் சரியான தண்டனை குடுத்துட்டார்!”

இவள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறாளே, எப்படித்தான் சமாதானப்படுத்தப்போகிறோம் என்ற ஆயாசம் ஏற்பட்டது பாக்கியத்துக்கு.

“சாப்பாடு வெச்சிருக்கேன்,” என்று யாரிடமோ தெரிவிப்பதுபோலச் சொல்லிவிட்டு, அறைக் கதவை லேசாக மூடியபடி வெளியே வந்தாள்.

மாமனாருக்கு எதிரே உட்கார்ந்திருந்த வைத்தி வேகமாக எழுந்து வந்தான். “ரஞ்சியோட குரல் கேட்டுச்சே! நான் போய் பாக்கறேன்!”

இப்போது தன்னை நாடும் மகள், எங்கே கணவனின் அரவணைப்பில் மீண்டும் தன்னைத் தூக்கி எறிவதுபோல் பேசிவிடுவாளோ என்ற பயம் உள்ளூர அரிக்க, “இப்ப யார்கூடவும் பேசறமாதிரி இல்ல அவ!” என்று அவனைத் தடுத்து நிறுத்த முயன்றாள். அவன் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியைக் கண்டு, “ரொம்ப ஒடைஞ்சு போயிருக்கா,” என்று விளக்கினாள். இப்போது தன் கை ஓங்கியிருக்கிறது, முடிந்தவரையில் இதை அனுபவித்துவிடுவோமே என்பதில் குறியாக இருந்தாள்.

மணி எழுந்து வந்தார். வைத்தியின் முதுகில் ஆதரவாகத் தட்டினார். “விட்டுப் பிடி. ஒன் பொண்டாட்டி எங்கே போயிடப் போறா? போனதையே நெனைச்சுக்கிட்டு இருக்காம, ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக்கிட்டு செய். இந்தமாதிரி சமயத்திலே. யோசனை செய்யற சமாசாரமே கூடாது!” என்றவர், அவன் தோளில் கைபோட்டு, தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

`மாப்பிள்ளை’ என்று வரட்டு உபசாரம் எதுவும் செய்யாது, இயல்பாக அவர் பழகியது வைத்திக்கு ஆறுதலாக இருந்தது.

“மாமா! ஆபீசுக்குப் போனா, வேலையில கவனம் செலுத்த முடியல. வீட்டுக்கு வந்தா.., அதைவிட! வெறிச்சுனு, பயங்கரமா இருக்கு! குழந்தையை ஒரு தடவைகூட தூக்கிக் கொஞ்சல. ஆனா, அதை மிஸ் பண்றேன்!” ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் தன் மனதைத் திறந்து காட்டினான்.

வீட்டுக்குள் பார்வையை ஓடவிட்டு, குரலைத் தணித்துக்கொண்டார் மணி. “ஒங்க அத்தையைப் பாரு! சமையலைத் தவிர வேற வேலையே கிடையாது — என்னமோ, பிறவி எடுத்ததே சமைக்கத்தான் என்கிறமாதிரி! பிள்ளைங்களும் வளந்துட்டாங்களா! ஓய்வு நேரத்தை என்ன பண்றதுன்னு புரியாம, ஏதாவது குருட்டு யோசனை செய்துகிட்டிருப்பா. அவளோட பிரச்னையே அதுதான்!”

வைத்திக்கு அவர்மேலிருந்த மதிப்பு அதிகரித்தது. இப்படி ஒரு மனைவியைச் சகித்துப்போவதும் இல்லாது, அதற்கு மனோதத்துவ ரீதியில் விளக்கம் வேறு அளிக்கிறாரே!

“அதனாலதான், நான் தோட்டத்தில உசிரை விடறேன். ஒடம்பால ஒழைச்சுச் செய்யற வேலையால மனசுக்கு நிம்மதி. அதோட..,” என்றவர், மஞ்சளாகி இருந்த செம்பருத்தி இலைகளைப் பறித்துத் தரையில் போட்டார். “செடிங்களுக்கும் உயிர் இருக்கில்ல! அது வளர, வளர, ஏதோ ஒரு திருப்தி!”

வைத்தி பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

“நிறையப் பதியன் போட்டு வெச்சிருக்கேன். எடுத்துக்க. தினமும் தண்ணி விடணும். மாசத்துக்கு ஒருவாட்டி உரம், பூச்சி மருந்தெல்லாம் போடு. முடிஞ்சா பாடு!”

`பாட்டு’ என்ற வார்த்தை காதில் விழுந்ததும், தான் ரஞ்சியைப் பெண்பார்க்க வந்தபோது, `ஐயா சாமி, ஆவோஜி சாமி’ என்று அவள் பாடியது வைத்தியின் காதில் ரீங்காரமிட்டது. வருத்தம் மேலெழுந்தது.

“எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை கிடையாது, மாமா. எங்க ஆபீஸ் கிளப்புக்குப் போறேன். அங்கே ஏதாவது விளையாடலாம்!” என்று, அவர் விவரித்த கடினமான வேலைகளிலிருந்து தப்பிக்கப்பார்த்தான்.

“அதுவும் சரிதான்,” என்று பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார் மணி. “வெளியே போனா, நாலுபேர்கிட்ட ஒன் வருத்தத்தைச் சொல்லிக்க, வைத்தி. தப்பில்லே. மனசிலேயே வெச்சுக்கிட்டா, தாங்க முடியாம போயிடும்!” என்று ஓர் அரிய அறிவுரையும் வழங்கினார்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *