38 மாமியார் பக்கம் பேசு

வீட்டில் கோபித்துக்கொண்டு, நேராக அலுவலகத்தை ஒட்டியிருந்த கிளப்புக்குப் போனான் வைத்தி. எத்தனையோ ஊழியர்கள், வீட்டிற்குப்போக வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்கவேண்டி, மாலை வேளைகளில் அங்கு சரண் அடைந்துவிடுவார்கள்.

கல்யாணத்திற்குப் பிறகு வைத்தி அங்கு அதிகமாக வந்த்தில்லை. இப்போது அந்த அவசியத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் தாயும் மகளும்.

இப்படி எண்ணியபோதே ஆத்திரம் பிறந்த்து. ஒருவன் நல்லவனாக இருக்க வேண்டுமென்றாலும் விட மாட்டேன் என்கிறார்களே!

ரஹீம் அங்கு கேரம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். “ஏ வைத்தி! நீ என்னடா பண்ணறே இங்கே?” என்று ஆரவாரமாக வரவேற்றான்.

“வீடு என்கிற நரகத்திலேருந்து தப்பிச்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன்!” நாடகபாணியில் பேசினான் வைத்தி. ரஞ்சியுடன் சேர்ந்து உட்கார்ந்துகொண்டு, மணிக்கணக்காய் டி.வி. பார்த்ததன் பலன்.

யோசிப்பதைப்போல பாவனை செய்த ரஹீம், “ஒன் மாமியார் வந்திருக்காங்க. சரியா?” என்றான்.

“ஒன்னோட புத்திசாலித்தனம் என்னை பிரமிக்க வைக்குது, ரஹீம்!”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. கல்யாணமான எந்த ஆணுக்குமே சில வருஷங்களில, சில விஷயங்களில ஞானம் வந்திடும். நண்பர்களைத் தவிர தான் யாருக்கும் வேண்டாதவன்னு என்கிறது அதில ஒண்ணு. விடு! மாமியார் என்ன சொல்றாங்க?”

“நல்ல வேளை, அவங்க தூங்கிக்கிட்டிருந்தாங்க!”

“இந்த வேளையிலேயா?”

“எனக்கும் ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. ஆனா, அவங்க நிலையிலே..!”

“எத்தனை வயசு அவங்களுக்கு?”

“சரியாத் தெரியல. அம்பதுக்கு மேல!”

“அப்படிச் சொல்லு! அந்த வயசு வந்துட்டாலே பொம்பளைங்களைச் சமாளிக்கிறது பெரிய கஷ்டம்!”

“எல்லா வயசிலேயும் பொம்பளைங்களால தொந்தரவுதான்!”

வைத்தியின் முணுமுணுப்பைக் காதில் வாங்கிக்கொள்ளாது, “பிள்ளைங்க வளர்ந்து, தனித் தனியா போயிடறாங்க. இவங்களுக்குப் பொழுது போறதில்ல. நாம்ப யாருக்கும் வேண்டாதவங்களாப் போயிட்டோமோன்னு..!”

“நல்ல வேளை, நான் சின்னப் பையனா இருந்தப்போவே எங்கம்மா செத்துப்போயிட்டாங்க. இல்லாட்டி, அவங்களும் இந்தமாதிரி பிராணனை வாங்கிட்டு இருந்திருப்பாங்களோ, என்னவோ! யார் கண்டாங்க!” என்று சந்தோஷப்பட்டுக்கொண்டான் வைத்தி. “ஒவ்வொரு வாட்டி என் மாமியார் வர்றபோதும், கூடவே எனக்கும் என் மனைவிக்கும் ஏதாவது சண்டையைக் கொண்டுவந்துடுவாங்க!”

“டேய், டேய்! நீ ஒன் மிஸஸ்கிட்டேயே அவங்கம்மாவைப்பத்திக் குறை சொல்வியா?”

வைத்தி பதில் சொல்ல வேண்டியிருக்கவில்லை. அவனுடைய திருதிரு முழியே அவனைக் காட்டிக்கொடுத்தது.

ரஹீம் உள்ளங்கையைத் தட்டிக்கொண்டான். “இப்பத்தான் புரியுது, முனிவர்கள் எல்லாம் ஏன் கல்யாணமே பண்ணிக்கலேன்னு! நிம்மதியா, அவங்களுக்குப் பிடிச்ச விதத்திலே, காட்டிலே தவம் செய்திருக்க முடியுமா, இல்லாட்டி?”

“அவங்க கிடக்கறாங்க! இப்போ எனக்கு ஒரு வழி சொல்லுப்பா!”

“எவ்வளவு பெரிய சமாசாரம்! அவசரப்பட்டா எப்படி?” பொறுமையை உபதேசித்தான் நண்பன். “எப்படி ரயில் ரெண்டு இணையாத தண்டவாளத்திலே போகுதோ, அந்தமாதிரிதான் கல்யாணமானவனோட நிலைமையும்!”

“நீ தமிழிலே புலவன்தான், ஒத்துக்கறேன். கொஞ்சம் புரியும்படியா பேசித் தொலை! இதில ரயிலும், தண்டவாளமும் எங்கே வந்திச்சு?”

“ரயில் — மனைவி. புருஷனும், மாமியாரும் தண்டவாளங்கள். எப்பவுமே இணையமாட்டாங்க, இணையக்கூடாது,” என்று ஒரு அரிய தத்துவத்தை விளக்கினான் ரஹீம்.

“புரியலியே!”

“நீ அவங்கம்மாவைக் குறை சொன்னா, அவங்களையே பழிக்கிறமாதிரி எடுத்துக்கிறாங்க மனைவி. அங்கதான் தகறாறே ஆரம்பிக்குது!”

“ஏன் அப்படி?”

“நான் என்னத்தைக் கண்டேன்! அவ்வளவுதான் தெரியும். நானும் பாத்துட்டேன், என் மொதல் சம்சாரமும் அப்படித்தான், அவ தங்கச்சி, என்னோட ரெண்டாவது சம்சாரமும் அப்படித்தான். அப்புறம்..!”

வைத்தி சுவாரசியத்துடன் அவனையே பார்த்தான். இரண்டோடு நிறுத்திக்கொள்ளவில்லையா இவன்! நண்பனுடைய தைரியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

“அப்புறம் மாமியார் எங்ககூடவே வந்துட்டாங்களா! ஒரு வழியா, நானும் நிலைமையை எப்படிச் சமாளிக்கிறதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். இப்பல்லாம் நான் மாமியார் பக்கம்தான்!”

அப்படி ஒரு எண்ணமே கசப்பை விளைவிக்க, “ரஞ்சி அதிர்ஷ்டசாலி. அவளுக்கு மாமியாரே இல்லே!” என்று வெளிப்படையாகவே வயிற்றெரிச்சல் பட்டான் வைத்தி.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *