11 மானசீக நாயகர்

தன்னை இன்னொரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள் ரஞ்சிதம்.

நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்துக் கண்ணாடியில் ஒட்டி வைத்துவிட்டு, அந்த இடத்தில் குங்குமத்தை வைத்துக்கொண்டவள், அதையும் சற்றே கலைத்துவிட்டாள். அவளுடைய சுருட்டை முடி பாதி முதுகுவரை அலங்கோலமாகப் படர்ந்திருந்தது.

நடிகைகள் க்ளிசரின் என்று எதையோ கண்ணுக்கு விட்டுக் கொள்வார்களாமே, அதுதான் விளக்கு வெளிச்சத்தில் காய்ந்துபோகாது என்று! அதற்கு எங்கே போவது! வெங்காயத்தைக் கண்ணில் பிழிந்துகொண்டாள். அப்படியும் கண் சிவக்காததால், இமைகளின் விளிம்பில் உப்பைத் தடவிக்கொண்டாள். ஒரேயடியாக எரிந்தது. `ஒரு நல்ல காரியத்துக்காக!’ என்று அதைப் பொறுத்துக்கொண்டாள்.

அவள் எதிர்பார்த்தபடியே நடந்தது. உள்ளே நுழைந்த வைத்தி நிலைகுலைந்து போனான். சிவந்த கண்களுடன் மனைவி!

முதல்நாள் போட்ட சண்டை மறந்தே போயிற்று.

“ரஞ்சி! என்னம்மா ஆச்சு?”

அவள் காதில் விழாதவளாக, பிரமை பிடித்தவள்போல உட்கார்ந்திருக்க, “ஒங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிடுச்சா? பாவம், கொழுகொழுன்னு இருப்பாரே!” என்று ஒரு ஊகத்தின் பேரில் அனுதாபமும் தெரிவித்தான் வைத்தி.

`இல்லை,’ என்று தலையாட்டினாள்.

“ஓ! ஒங்கம்மாவுக்கா? அவங்க எப்பவுமே வியாதி கொண்டாடிட்டு இருப்பாங்க! இப்ப என்ன?” அவன் குரலில் கேலி நிரம்பி வழிந்தது.

தான் ஒன்றை நினைத்து நாடகமாட, இவர் இப்படி உளறிக் கொட்டுகிறாரே என்ற ஆத்திரம் எழுந்தது ரஞ்சிக்கு. “சொந்தக்காரங்க இல்ல. எனக்கு ரொம்ப வேண்டியவர் ஒருத்தர் போயிட்டாரு!” மூக்கை உறிஞ்சத் தவறவில்லை அவள்.

தன்னைவிட வேண்டியவன் இவளுக்கு இருக்கிறானா? பதட்டத்துடன், “யாரு? யாரு?” என்று வார்த்தைகள் வந்தன.

“சிவாஜி கணேசன்!”

“யாரு?” தன் காதுகள் ஏமாற்றுகின்றனவோ என்ற சந்தேகம் வந்தது.

“தமிழன்னு சொல்லிக்க வெட்கமா இல்ல ஒங்களுக்கு?”

“அதுக்கு ஏன் வெக்கப்படணும்?”

“பின்னே? எவ்வளவு பெரிய நடிகர் அவர்! ஒலகம் பூராவும் அவரைத்      தெரிஞ்சு வெச்சிருக்கு, ஒங்களுக்குத் தெரியாதுங்கறீங்களே?”

“அவர் செத்துப்போய் எவ்வளவு வருஷம் ஆச்சு! இப்போ என்ன       அதுக்கு?”

“எவ்வளவு பெரிய துக்கம்! அவ்வளவு சீக்கிரம் ஆறிடுமா?” என்ற         மனைவியை சந்தேகத்துடன் பார்த்தான் வைத்தி. இவள் அசடா, இல்லை,   பைத்தியமா?

“அவரைத்தான் நான்.. படிக்கிற நாளிலேருந்து..,” கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தலைகுனிந்தாள் பாவை. “வீடியோவில பழைய படமாத்தான் பார்ப்போம். அப்பல்லாம் என்னை பத்மினியாவோ, சாவித்திரியாவோ, அவர்கூட யார் நடிக்கிறாங்களோ, அந்த கதாநாயகிமாதிரி நினைச்சுப்பேன். அவரையே நினைச்சுக்கிட்டுத்தான் எட்டாவது பரீட்சையிலகூட கோட்டைவிட்டேன்!”

ஆத்திரம் தலைக்கேற, “அதெப்படி என்னைக் கேக்காம நீ இன்னொரு ஆம்பளையை நினைக்கலாம்?” என்று கத்தினான் வைத்தி.

“சரி. அப்போ, இனிமே ஒங்களைக் கேட்டுக்கறேன்!” சிரிக்காமல் சொன்னாள்.

அதைக் காதில் வாங்காது, “எனக்கு வர்ற ஆத்திரத்தில, அவர் கழுத்தை அப்படியே..,” என்று ஏதோ சொல்லப்போனவன், அது நடக்காத காரியம் என்பதை உணர்ந்தவனாக, “இருக்கட்டும். அவரோட பழைய படம் ஏதாவது வர்றப்போ.. அவர் நாக்கைப் பிடுங்கிக்கிறமாதிரி நறுக்குனு..!”

வைத்தி திகைப்போடு அவளைப் பார்க்கையிலேயே, ரஞ்சிதம் தலையை முடிந்தாள். களுக்கென்று சிரித்தாள். “எப்பவோ செத்துப்போன ஒருத்தர்மேல காதல்னு செல்றேன், அதுக்கே இந்த ஆட்டம் ஆடறீங்களே! நீங்க மட்டும் எதிரே போற பொண்ணுங்க எல்லாரையும் பாத்து ஜொள்ளு விடலாமா?”

வைத்தி விறைப்பாக நின்றான். “அது வேற!”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *