17 போன மச்சி திரும்பி வந்தாள்

பாக்கியம் சமைத்துக்கொண்டிருந்தாள். எப்போதும்போல் முதல் நாள் டி.வியில் பார்த்த படத்தின் லட்சணங்களை அலசாது, மகள் பிரமையாய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, ஏதோ விஷயம் இருக்கிறது!’ என்றவரை புரிந்தது அவளுக்கு.

அந்த அசட்டுப் புருஷன் நினைவோ?

ஊகும். நம்பும்படியாக இல்லையே! இருவரும் அப்படி ஒன்றும் ஒருவருக்காக மற்றவர் உருகுவதைப்போலத் தெரியவில்லையே!

பலவிதமான யோசனைகள் வந்தவண்ணமிருந்தன , குழம்பில் உப்பு போட்டோமா, இல்லையா என்பதுகூட மறந்துவிடும் என்ற பயமெழுமளவுக்கு.

இறுதியில், வெளிப்படையாகவே கேட்டாள்: “கண்ணு! வந்ததிலிருந்து இப்படி ஒரே இடத்தில, பிரமையா ஒக்காந்திருக்கியே! ஒங்க வீட்டுக்குத் திரும்பிப் போற உத்தேசமே இல்லியா?”

“நான் இனிமே அங்க போகப் போறதில்லம்மா!”

அதிர்ச்சி தாங்காது, வாயைப் பொத்திக்கொண்டாள் பாக்கியம். “ஓயாம ஏசுவாரு. பொறுத்துக்கிட்டேன். இப்போ,” ரஞ்சி விம்மினாள். “இப்போ.. அடி வேற!”

“ஐயையோ!” பாக்கியம் அலறினாள். “ஒன்னை கைநீட்டி அடிக்கிறவரைக்கும் போயிட்டாரா? நீ என்னடி கண்ணு செஞ்சே?”

“அப்படியே மல்லாக்க விழுந்தேம்மா!” காலைப் பரத்திக்கொண்டு தான் விழுவதுபோல் ஒரு பிரமை ஏற்பட, ரஞ்சிதம் தன் உடலைக் குறுக்கிக்கொண்டாள்.

பாக்கியம் அடுப்பைத் தணித்தாள், இன்னும் அதிகக் கவனத்தை மகளின்பால் செலுத்த வசதியாக. “படுபாவி!” அனுபவித்துச் சொன்னாள். “ராத்திரி தவறாம, ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு வெளியே போயிடுவாருன்னு சொன்னே பாரு, அப்பவே எனக்குச் சந்தேகம்தான்!”

ரஞ்சி குழம்பினாள். கணவர் மீ (நூடுல்ஸ்) சாப்பிடப் போனதற்கும், தான் அடிபட்டுக் கிடந்ததற்கும் என்ன சம்பந்தம்?

பாக்கியம் அடுப்பை அறவே அணைத்தாள், விஷயம் தான் நினைத்ததைவிடப் பெரிது, அதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று. அருமை மகளின் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு, “ஏம்மா அடிச்சாரு?” என்று கொஞ்சினாள்.

அம்மாவை எப்படி உசுப்புவது என்று மகளுக்கா தெரியாது! “அவருக்கு நம்ப யாரையுமே பிடிக்கலேம்மா. என்னை மட்டும் சொன்னா பொறுத்துக்கலாம். ஆனா, ஒங்களைக்கூட தாறுமாறா..!”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *