16 பொய்க்கோபம் நிஜமாகியது

இரவு மணி பத்தாகியது. சாப்பிட்டு முடிந்ததுமே வைத்தி படுக்கப் போய்விட்டான்.

ரஞ்சி இரவு பன்னிரண்டுவரை டி.வியின் முன் அமர்ந்து, அசையாது தவம் செய்துவிட்டுத்தான் வருவாள். கல்யாணம் ஆகிவிட்டதால் மட்டும் பல வருடப் பழக்கத்தை விட்டுவிட வேண்டுமா, என்ன!

தூக்கம் வராது புரண்டுகொண்டிருந்தான் வைத்தி. அது எப்படி தனக்கும் ரஞ்சிக்கும் சில மாதங்களாக வாக்குவாதமே நிகழவில்லை என்ற வேண்டாத யோசனை வந்தது. வயது கூடிக்கொண்டே போனதில், இருவருக்குமே மனப்பக்குவம் வந்துவிட்டது போலும் என்று எண்ணினான். ஆனால், அதை ஏற்கத்தான் கடினமாக இருந்தது.

ஏற்கெனவே, முன் நெற்றியில் வழுக்கை. இப்படி கன்னா பின்னா என்று முதுமை வருவதைத் தடுக்க, ஒரே வழிதான்: ரஞ்சியைச் சீண்டவேண்டும். வர வர, அவள் தன்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எப்போதும், டி.விதான்.

கேட்டால், `தினம் தினம் ஒங்ககூட பேச அப்படி என்ன விஷயம் இருக்கு?’ என்றுவிடுவாள். இருக்கட்டும், இன்று அவளை ஒரு கை பார்த்துவிடுவோம் என்று முன் ஹாலுக்கு வந்தான். “ம்! எழுந்திரு!”

திரையிலிருந்து கண்ணை அகற்றாமலேயே சொன்னாள்: “அப்படிப் போய் ஒக்காருங்களேன்! வேற இடமா இல்ல?”

“அது என்னவோ, இங்க ஒக்காந்தாத்தான் எனக்குப் படம் பாத்தமாதிரி இருக்கும்!”சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னான்.

“எனக்கும்தான்!” என்றாள் பத்தினி.

“வெளையாடறியா? அப்படியே பாத்தாதான் ஒனக்கு என்ன புரியப்போகுது?”

அவனை நன்றாகத் திரும்பிப் பார்த்த ரஞ்சி விழித்தாள். “ஏனாம்? எனக்குத் தமிழ்ப்படம்கூடப் புரியாதா?”

`உளறிவிட்டோமே!’ என்று நாக்கைக் கடித்துக்கொண்டான் வைத்தி. திகைப்பு நீங்கியவுடன், “ரஞ்சி! ரஞ்சி! ஒன் கன்னம் எப்படி ஒட்டிப் போயிருக்கு!” என்று கொஞ்சலில் இறங்கினான். “அனாவசியமா தூக்கம் முழிக்காதம்மா. காலாகாலத்தில போய் படுத்துக்க!”

“நான் என்ன, சிவாஜியோட பூந்தோட்டத்திலேயும், ஆத்தங்கரையிலேயும் டூயட் பாடிட்டு, ஓடவா போறேன்?”

வைத்தியின் முகம் கோணியது. “சிவாஜி இங்க எங்க வந்தாரு?”

முகம் மலரச் சொன்னாள்: “இந்தப் படத்தில அவர்தாங்க ஹீரோ!”

விளையாட்டாகச் சண்டை போடலாம் என்று எழுந்து வந்த வைத்திக்கு அப்போது நிஜமாகவே கோபம் வந்தது. “நீ இதைப் பாக்கப்போறதில்ல!” என்றான் கண்டிப்பாக.

ரஞ்சிக்கும் கோபம் வந்தது. “பாப்பேன்!”

“அதெல்லாம் கிடையாது. நான் கால் பந்தாட்டம் பாக்கப்போறேன். ஸ்டேடியத்தில நடக்கிறதை ஒடனுக்குடனே..”.

ரஞ்சி ஏளனத்துடன் உதட்டைப் பிதுக்கினாள். எல்லாம் சிவாஜியின் நடிப்பின் பாதிப்புதான். “அதையும் ஒரு விளையாட்டுன்னு பாக்கறாங்களே! ஒரே ஒரு பந்தை வெச்சுக்கிட்டு, அதுக்காக பல பேர் அடிச்சு ஒதைச்சுக்கிட்டு! சே! சரியான காட்டுமிராண்டித்தனம்!”

“அதுக்காக ஆளுக்கு ஒரு பந்தா வாங்கிக் குடுப்பாங்க? என்று தன்பங்குக்கு வாதாடினான் வைத்தி.

“நீங்க என்ன சொன்னாலும் சரி. நான் இந்த எடத்தைவிட்டு நகரப்போறதில்ல,” என்று அறிவிப்பு செய்தவள், “வேணுமானா, நீங்களும் எங்கூட ஒக்காந்து..,” என்று பெரிய மனது பண்ணினாள்.

வைத்தியின் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போயிற்று. “நீயே பாத்து ரசிச்சுக்க. சிவாஜி ஒனக்குத்தான் பாய் ஃப்ரெண்ட்!”

அறைக்குள் வேகமாகப் போனவன், சட்டையை மாற்றிக்கொண்டு, அதே வேகத்தில் வெளியே செல்வதை ரஞ்சி கவனித்தாள். ` ரசனை இல்லாத ஜன்மம்!’ என்ற பட்டத்தை அவனுக்கு வழங்கிவிட்டு, படத்தில் ஆழ்ந்தாள்.

ஒரு வழியாகப் படமும் முடிந்தது. தள்ளாடியபடி அறைக்குள் நுழைந்தவள் உடனே உறங்கிப்போனாள். இனிய கனவுகள் வந்தன. அவைகளில் வைத்தி இல்லை.

தூங்கி எழுந்ததும், முதல் நாள் படத்தில் கேட்ட டூயட் பாட்டை தானே குரலை மாற்றி மாற்றிப் பாடியபடி அறைக்கு வெளியே வந்த ரஞ்சிதம், நிலைகுலைந்து சோபாவில் சாய்ந்திருந்த கணவனைப் பார்த்ததும் சற்றே திடுக்கிட்டாள். லேசான குற்ற உணர்ச்சி வந்தது. “ராத்திரி பூராவும் இப்படியேவா ஒக்காந்துக்கிட்டு இருந்தீங்க?”

அவள் குரல் காதில் விழாதவனாக, எதிரிலிருந்த சுவற்றையே வெறித்துக் கொண்டிருந்தான் வைத்தி.

“ஏங்க? கேக்கறேனே! படுக்கக்கூட சோபாதானா?”

திரும்பிப் பாராது பதிலளித்தான். “ரொம்பக் கரிசனம்தான்!”

“இல்லியா, பின்னே?” என்றாள் ரஞ்சி. “நீங்க சிவாஜிமாதிரி பெரிய ஒடம்புக்காரர் இல்லதான். இருந்தாலும், சோபாவோட ஸ்ப்ரிங் ஒடைஞ்சுடாது?” என்று ஆதங்கப்பட்டாள். போகிற போக்கில், “ரொட்டி வாங்கி வெச்சிருக்கேன். சாப்பிடுங்க!” என்ற உபசாரம் வேறு.

வைத்தியால் அதற்குமேல் தாங்கமுடியவில்லை. “எல்லாத்தையும் நீயே கொட்டிக்க!” என்று எரிந்து விழுந்தான்.

இப்போது ரஞ்சிக்கும் கோபம் வந்தது. “நல்லதாப்போச்சு! நான் இன்னிக்கு சமைக்க வேணாம்! பத்தரை மணிப் படமும் பாக்கலாம்!”

அன்று பிறமொழிப் படம்தான் என்பது சற்று பொறுத்து நினைவு வர, “இன்னிக்கு என்னங்க சமைக்கிறது?” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

`எதையோ பண்ணு. எல்லாம் ஒரே லட்சணமாத்தான் இருக்கும்!’ என்று தோன்றியதை சொல்லத் தைரியம் வரவில்லை வைத்திக்கு. “சே! சரியான தொணதொணப்பு! மனுஷன் மனசு ஒடைஞ்சு போயிருக்கிறப்போ..!”

“ஆமா! நீங்க என்னிக்கு சிரிச்ச முகமா இருந்திருக்கீங்க? எப்பவும் விளக்கெண்ணை குடிச்சமாதிரி..,” நொடித்தாள்.

“நேத்து, காசு குடுத்து டிக்கட் வாங்கி, ஸ்டேடியத்துக்குப் போனேனா! நான் ரொம்ப நம்பிக்கிட்டிருந்த டீம் என்னை ஏமாத்திடுச்சு, ரஞ்சி!” கைகளில் தன் முகத்தைப் பதித்துக்கொண்டான்.

அனாவசியமாகக் காசு செலவழிந்துவிட்டதே என்ற ஆத்திரமும், காலை வேளையில் தன் `மூடை’யும் கெடுக்கிறாரே என்ற கோபமும் சேர, “எவன் தோத்தா ஒங்களுக்கென்ன? ஏன் இப்படி புத்திக்கெட்டத்தனமா..!” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.

அதுவரை இல்லாத உத்வேகத்துடன் எழுந்தான் வைத்தி. அவளுடைய இரு தோள்களையும் பற்றி உலுக்கினான். “சீ! என் வருத்தம் துளியாவது புரிஞ்சா, இப்படிப் பேசுவியா! நீயெல்லாம் ஒரு மனுஷி, உனக்கு ஒரு கல்யாணம்!”

அவன் கையை விட்ட வேகத்தில் ரஞ்சிதம் கீழே விழுந்தாள்– உட்கார்ந்த நிலையில், காலைப் பரத்தியபடி.

பதறிப்போய், அவளைத் தூக்கிவிடக் கையை நீட்டினான் வைத்தி.

ரஞ்சிக்கு அழுகை குமுறியது. அவனைக் கவனிக்காது, தன் போக்கில், “இப்படி அடிபட்டுச் சாகத்தானா என்னை.. ஒங்களுக்கு..!” என்று, மணிரத்னம் பாணியில், முழுவதுமாகச் சொல்லி முடிக்காது, “நான் எங்கேயோ தொலைஞ்சு போறேன்,” என்று முடித்தாள். நிதானமாக எழுந்தாள்.

விளையாட்டாக ஆரம்பித்த சண்டை வினையாகிவிடும்போல இருக்கிறதே என்ற பயம் பிடித்துக்கொண்டது வைத்தியை. “ரஞ்சி, ரஞ்சி!” என்று அவள் கழுத்தில் விரல்களால் விளையாடப்போனான்.

“கிட்ட வராதீங்க! நான் எங்கம்மா வீட்டுக்குப் போய் தொலையறேன்!” என்று மிரட்டியவள், “இனிமே, தாராளமா ஒங்களுக்குப் பிடிச்சதை டி.வியில போட்டுக்குங்க!” என்று சேர்த்துக்கொண்டாள்.

மனைவி தன்னைவிட்டு விலகப்போகிறாள்!

அடிப்பிடித்த சாதமோ, உப்பு சப்பில்லாத, தீய்ந்துபோன பதார்த்தங்களோ, இனிமேல் அவைகூட வீட்டில் கிடைக்காது என்ற யதார்த்தம் உறைக்க, கவலை ஆட்கொண்டது வைத்தியை.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *