51 பெரிய விசேஷம்

ரஹீமின் வீட்டுக்கு வெளியே, தெருவின் இருபுறங்களையும் அடைத்துக்கொண்டு கார்கள் நின்றன.

ரஞ்சிக்குப் பெருமையாக இருந்தது. “பெரிசா, புது வீடு வாங்கிட்டீங்களா! அடேயப்பா! எவ்வளவு பேர் வந்திருக்காங்க!” என்று பூரித்துப்போனாள். பாட்டிக்கு இவ்வளவு செல்வாக்கா, இது நமக்கு முதலிலேயே தெரியாமல் போயிற்றே, செவிட்டுப் பாட்டி என்று அலட்சியமாக நடத்தினோமே என்று தன்னையே நொந்துகொண்டாள்.

`என்னென்னவோ உளறுகிறாளே! இவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகாமல், பொது இடத்திற்கு அழைத்து வந்தது தவறோ?” என்ற அச்சம் எழ, அவளை ஒரு பார்வை பார்த்தான்.

தன் பதிலை எதிர்பார்த்து, வாயையே அவள் பார்த்துக்கொண்டிருந்தது உறுத்த, “பெரிய விசேஷம், இல்லியா!” என்று சமாளிக்கப்பார்த்தான்.

வீட்டு வாசலில் அறுபதுக்குக் குறையாத ஜோடி செருப்புகள். பெண்களையுடையதில் பல சரிகை வேலைப்பாடு அமைந்ததாகவும், குதிகால் உயர்ந்து, மணிகள் பொருத்தப்பட்டதாகவும் இருந்தன.

தன்னையுமறியாமல், தனது செருப்புகளைப் பார்த்துக்கொண்டாள் ரஞ்சி.

வீட்டில் மட்டுமே அணியத் தகுந்த மலிவான ஜப்பான் செருப்புகள்!

பாதம் பட்ட இடத்தில் திட்டுத் திட்டாக அழுக்கு வேறு!

`எப்படியும் வெளியேதானே விடப்போகிறோம்! நல்ல வேளை, யாரும் நம்மை இதில் பார்க்க மாட்டார்கள்!” என்ற அல்ப திருப்தியுடன், கணவனைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்.

பலத்த ஆரவாரத்துடன் அவர்களிருவரையும் வரவேற்றான் ரஹீம். நண்பன் அழுமூஞ்சியாக இருந்தது போதும், இப்போதாவது மனைவியுடன் இணைந்திருக்கிறானே என்று அவர்களுக்காக மகிழ்ச்சியடைந்தவனாக, உரத்த குரலில் மனைவியை அழைத்தான்.

பொய்யான புன்னகையுடன் யாருடனோ பேசிக்கொண்டிருந்த அவள், அரைகுறையான வாக்கியத்தில் நிறுத்திவிட்டு, அங்கு விரைந்தாள்.

கணவன் இவ்வளவு பலமான வரவேற்பு கொடுக்க வேண்டுமென்றால், அவர்கள் அரசாங்கப் பட்டம் வாங்கியவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தாள்.

யாராக இருக்கும்? நாடாளும் அரசியல் கட்சிப் பிரமுகர்களா, இல்லை, தொழிலதிபர்களா?

எண்ணற்ற கற்பனைகளுடன் விரைந்து வந்தவள், ரஞ்சிதத்தைப் பார்த்துத் திகைத்துப்போனாள். ஏதோ புறம்போக்குப் பகுதியிலிருந்து வந்தவள்போல, யார் இவள்!

திகைத்தது அவள் மாத்திரமில்லை.

ரஞ்சியும் விறைத்துப்போனாள்.

பெண்களிடையே நிலவிய அசாதாரண மௌனம் வைத்தியின் அறிவுக்குக்கூடத் தப்பவில்லை. அடுத்து என்ன செய்வது என்று அவன் விழிக்க, ரஞ்சி விடுவிடுவென வெளியில் நடந்தாள்.

பின்னாலேயே ஓடினான் வைத்தி.

“ரஞ்சீ..!” கெஞ்சலாகக் கூப்பிட்டான்.

“இத்தனைபேர் முன்னாலே இப்படி என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை மாசமா திட்டம் போட்டீங்க?” கேட்பதற்குள் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அண்ணனும் இந்த அநியாயத்துக்கு உடந்தை! “எல்லாரும் பட்டை பட்டையா சங்கிலியும், வளையும் போட்டுட்டு வந்திருக்காங்க. நான் மட்டும் வேலைக்காரி மாதிரி..!”

தன் பங்குக்கு, “நான்தான் அப்பவே கேட்டேன்! நீதான் அம்மா சொன்னாங்க, ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு..! ஒனக்குச் சுயமா மூளை இருந்தா இல்ல!” வைத்தியும் இரைந்தான். மனைவி அடைந்த அவமானத்தில் அவனுக்கு மட்டும் பங்கில்லையா, என்ன!

“பாட்டி செத்துப் போயிட்டாங்கன்னு பித்தலாட்டம் பண்ணிட்டு, என்னைப் பார்ட்டிக்கா கூட்டிட்டு வர்றீங்க?” உறுமினாள்.

கொஞ்சம் விழித்த வைத்தி, `ஓகோ! இவளை அந்த வீட்டிலேருந்து கிளப்ப ரவிதான் ஏதோ அளந்து வெச்சிருக்கான். அவனை..,’ என்று ஆத்திரப்பட்டுவிட்டு, `அவன்மேல என்ன தப்பு! நான்தானே அந்த வீட்டுக்குள்ளே நுழையமாட்டேன்னு, பெரிய `இவன்’ மாதிரி சபதம் போட்டேன்!’ என்று தன் தவற்றை உணர்ந்தான்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தர யாருமில்லையே என்ற பயம் உண்டாயிற்று.

“என்ன முழிக்கிறீங்க? பொய் சொல்றதையும் சொல்லிட்டு..!”

வைத்திக்கு வீரம் வந்தது. “ஆமா. சொன்னேன். நல்லபடியா கேட்டாதான், அம்மாவும், பொண்ணுமா சேர்ந்துக்கிட்டு ஆட்டி வைப்பீங்களே!”

தன் அருமை அம்மாவைப்பற்றி கணவன் குறை சொன்னது ரஞ்சிக்கு ரோஷமாக இருந்தது. “நான் இப்பவே போறேன்!” என்று முழங்கினாள்.

“போ!” விரட்டாத குறையாகச் சொன்னான்.

ஆனால், அவள் நகரவில்லை. “அவசரத்திலே.. காசு கொண்டு வரல!” அவமானத்துடன் முனகினாள்.

எதுவும் பேசாது, வைத்தி பர்சைத் திறந்து, பச்சை நிறத்திலிருந்த ஐம்பது ரிங்கிட நோட்டு ஒன்றைக் கொடுத்தான். அதைப் பிடுங்காத குறையாகப் பெற்றுக்கொண்டு, அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த டாக்சியைக் கையைக் காட்டி நிறுத்தினாள் ரஞ்சி.

மீண்டும் அவ்வீட்டில் நுழையும் துணிவு வைத்திக்கு இருக்கவில்லை. நண்பன் புரிந்துகொள்வான் என்று எண்ணியவனாக, தான் கொண்டு வந்திருந்த காரில் ஏறி, வீட்டை நோக்கி ஓட்டிப்போனான்.

எல்லாம் நடக்கிறபடி நடந்தால், பத்தே மாதங்களில் இன்னொரு குழந்தை பிறக்கும் என்று கனவு கண்டிருந்தவனுக்கு மனமெல்லாம் கனத்திருந்தது.

`எவ்வளவு ஆசையாக அவளை அழைத்துப்போனோம்! இப்படி ஆகிவிட்டதே! இனி என்ன சொன்னாலும் ரஞ்சி மசியப்போவதில்லை!’

வீட்டையடைந்ததும், சோர்வுடன் இறங்கினான்.

வாசலில் ரஞ்சி உட்கார்ந்திருந்தாள்.

அவனைப் பார்த்ததும் எழுந்துகொண்டு, “வீட்டுச் சாவியும் கொண்டு வரல!” என்று முனகினாள்.

வெற்றிப் புன்னகையுடன், “வீட்டிலே சாப்பிட ஒண்ணுமில்லே. ஒன் சாமானெல்லாம் அப்படி அப்படியே இருக்கு. ஒரு நல்ல புடவையை எடுத்துக் கட்டிட்டு வா. வெளியே போய் சாப்பிடப்போறோம்!” புருஷனாய், லட்சணமாய், அதிகாரமாகச் சொன்னான் வைத்தி.

சொன்ன உடனேயே, `தண்டச் செலவு! ரஹீம் வீட்டிலே சும்மா கெடச்ச வீட்டுச் சாப்பாட்டை கோட்டை விட்டுட்டு..!” என்று மனம் இடித்துரைத்தது.

`அதனாலென்ன! ஒரு குழந்தைக்கு அஸ்திவாரம் போடுவதென்பது லேசா!’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டான் அந்தக் கஞ்சன்.

 

முற்றும்

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *