30 பிறந்த நாள் கேக்

தன்னை அவசரமாகச் சந்திக்க வேண்டும் என்று ரவி அழைத்தபோது, கலவரமடைந்தாள் ராதிகா. உடனே சம்மதித்தாள்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு, “இது அநியாயம், ரவி! பெரியவங்களைப் போய் ஏமாத்திக்கிட்டு! வெள்ளிக்கிழமை, அதுவும் அவங்க பிறந்தநாள் அன்னிக்கு!”

ரவி அலட்சியமாகச் சூள் கொட்டினான். “ஒன்னைப்பத்தின உண்மை எல்லாத்தையும் சொன்னதாலதான் நாம்ப இன்னிக்கு..!”

ராதிகா கண்டிப்புடன் அவனைப் பார்த்தாள். “அது வேற! அதுக்காக, சுத்த சைவமான அவங்களுக்கு முட்டை போட்ட கேக் குடுக்கறதை நான் ஒத்துக்க மாட்டேன். அது தப்பு!”

ஆக்ரோஷமாகப் பேசியவளைப் பார்த்து ரவிக்குப் பெருமையாக இருந்தது.

“ஒங்களுக்கென்ன! முட்டை போடாத கேக்தானே வேணும்?”

“சண்டை போடாதே. எந்தக் கடையில கிடைக்குமின்னும் சொல்லிடும்மா, தாயே!”

“கடையில ஏன் வாங்கணும்? நான் செஞ்சு தரேன்!”

கண்களை சுருக்கிக்கொண்டு ராதிகாவையே பார்த்தான் ரவி. ஏதாவது சாக்கில், தன் குடும்பத்துடன் நெருங்கிவரப் பார்க்கிறாளோ?

“கவலைப்படாதீங்க. நான் வரமாட்டேன். இது ஒங்க குடும்ப சம்பந்தப்பட்ட விஷயம்,” என்று வருத்தமாகச் சிரித்தவள், “நான் செஞ்ச கேக்குனுகூட யார்கிட்டேயும் சொல்லக்கூடாது!” என்று நிபந்தனை விதித்தாள்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *