32 பிறந்தநாள் விழா

கணவர் தன் மனத்துடன் விளையாடியது புரியவில்லை பாக்கியத்துக்கு. தன்னை நோயாளி என்றே நம்பி, அயர்ந்து உறங்கிப்போனாள்.

“அம்மா! தூங்கறீங்களா?” என்ற மகளின் குரலைக் கேட்டு, திடுக்கிட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள்.

குழப்பத்துடன், “ரஞ்சியா? எங்கேடி வந்தே? வீட்டுக்காரரோட சண்டையா மறுபடியும்?” என்று குசலம் விசாரித்தாள்.

ரஞ்சிதம் சிரித்தாள். “என்னம்மா நீங்க! நான் ஒரு நல்ல நாளுக்கு வரக்கூடாதா? ஒங்க மாப்பிள்ளையும் வந்திருக்காரு!”

“இப்போ என்ன டைம்?” கணவன் பெயரை உச்சரித்தால், அவருக்கு ஆயுள் குறைந்துவிடும் என்று நம்பியவள் பாக்கியம். `மணி’ என்ற பெயரையே தவிர்த்தாள் அந்தப் பத்தினி.

“ஒண்ணாகப் போகுது!”

பாக்கியம் பதறி எழுந்தாள். “இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்! காலையில பாரு, குளிக்கப்போனவ..!”

“அப்பா சொன்னாரு. சாப்பாடெல்லாம் ரெடி. முகத்தை மட்டும் கழுவிட்டு வாங்கம்மா”.

பாக்கியம் கூனிக் குறுகிப் போனாள். பெண்ணும், மாப்பிள்ளையுமாக வீடு தேடி வந்திருக்கிறார்கள்! அவர்களை உபசரிக்காது, தான் இப்படி வேளை கெட்ட வேளையில் படுத்து..!

தலையைக் கோதியபடி சாப்பாட்டு அறைக்கு வந்தாள்.

மேசையைச்சுற்றி குடும்பத்தினர் அனைவரும் ஏதோ ரகசியச் சிரிப்புடன் நின்றிருந்தது போல் தோன்றியது அவளுக்கு. `என்ன நடக்கிறது இந்த வீட்டில்?’

பாக்கியம் சற்றும் எதிர்பாராவிதமாக, அனைவரும் உற்சாகமாகப் பாட ஆரம்பித்தார்கள்.

“ஹாப்பி பர்த்டே டு யூ!” என்று இருமுறை பாடிவிட்டு, அந்த வரியின் இறுதியில், `பாக்கியம்’ என்று மணியும், `அம்மா’ என்று அவள் பெற்ற செல்வங்களும், `அத்தை’ என்று மாப்பிள்ளையும் ஒரே சமயத்தில் ஆளுக்கொரு ஸ்ருதியில் கூவ, அதையெல்லாம் மீறி, மேசைமேல் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த கேக்கையை உற்றுப் பார்த்தாள் பாக்கியம்.

அவளுடைய திகைப்பை ரசித்த ரவி, “என்னம்மா அப்படிப் பாக்கறீங்க? ஓ! மெழுகுவத்தியை எண்ணறீங்களா? பதினெட்டுதான். எல்லாம் அப்பாவோட ஐடியா!”என்றான் பெருமை பொங்க.

அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக, பாக்கியம் ஒரு கையால் முகத்தை மூடிக்கொண்டாள். விசும்ப ஆரம்பித்தாள். “இப்படி நம்ப பிள்ளைங்க முன்னாலேயே என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளாத் திட்டம் போட்டீங்க?”

மணி எதுவும் புரியாது விழிக்க, பாக்கியம் தன் கணைகளைத் தொடர்ந்து வீசினாள். “நான் வயசானவதான். இல்லேங்கலே. ஆனா, நீங்களும் அப்படி ஒண்ணும் சின்ன வயசில்ல. உக்கும்! ஒங்களுக்குப் பதினெட்டுவயசுப் பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு.. இப்படி… எல்லார் எதிரிலேயும்..! ஒங்களுக்கே இது நல்லாயிருக்கா?” பெரிதாக அழுதபடி உள்ளே ஓடினாள்.

அதிர்ச்சியில், மணியின் வாய் பிளந்தது. தான் எது செய்தாலும், அது ஏன் இப்படி அனர்த்தமாகவே வந்து முடிகிறது என்று அயர்ந்து போனார்.

ரவியும், ரஞ்சிதமும் அவரை இரக்கத்துடன் பார்க்க, `இந்த பொம்பளைங்களை யாராலும் மாத்த முடியாது!’ என்று வெறுப்புடன் தலையை ஆட்டிக்கொண்டான் வைத்தி.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *