46 பால்யப் பழக்கம்

மறுநாள் சீக்கிரமே எழுந்தார் மணி, முதல்நாள் மகன் வைத்த வேட்டு எப்படி வெடிக்கப்போகிறது என்ற ஆவலில்.

வழக்கம்போல் தினசரியைக் கையில் எடுத்துகொண்டு, சாய்வு நாற்காலியில் சௌகரியமாக உட்கார்ந்தாலும், கவனம் அதில் போகவில்லை. உள்ளேயிருந்து ஏதேனும் சப்தம் வருகிறதா என்று காதைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

ஒரு தட்டில் கீரையை எடுத்துக்கொண்டு, பாக்கியம் அவர் காலடியில் வந்து அமர்ந்தாள். சமீப காலத்தில் அவள் இவ்வளவு பணிவாக இருந்ததாக அவருக்கு நினைப்பில்லை. பெருமையை மீறி, பாவமாக இருந்தது.

புலி உறுமினால்தான் அழகு. அதன் பல்லைப் பிடுங்கலாமோ?

கீரையை ஆய்ந்தபடியே, “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தாள்.

சாவதானமாக, பேப்பரிலிருந்து தலையை நிமிர்த்தினார் மணி. மகன் ஆரம்பித்து வைத்த நாடகத்தைத் தானும் நல்லபடியாக நகர்த்திக்கொண்டு போக வேண்டாமா!

“நீ செய்யறதைத் தவிர, வேற யாரு எது செய்தாலும் அநியாயம்தானே ஒனக்கு?” என்றார் சுள்ளென்று.

அவரே எதிர்பாரவண்ணம், பாக்கியம் தழைந்துபோனாள். “நீங்க இப்படிப் பேசினா, நான் யாருகிட்டேபோய் சொல்றது!” என்று மூக்கை உறிஞ்சினாள்.

அதற்கு மேலும் நடிக்கத் தெம்பில்லாதவராய், “என்ன ஆச்சு, பாக்கியம்?” என்றார் கரிசனத்துடன்.

அழுகைக் குரலில் அவள், “ஒங்க அருமை மாப்பிள்ளை இன்னொரு கல்யாணம் செய்துக்கப் போறாராம்!” என்று தெரிவித்தாள்.

அலட்சியத்தை வலிய வரவழைத்துக்கொண்டார். “யார் சொன்னாங்க?”

“ரவிதான். கல்யாணத்துக்கு முந்தியே இவனும், அவரும் சிநேகமில்ல!”

“நெனச்சேன், இப்படியெல்லாம் வரும்னு! வைத்திக்கு சின்ன வயசு! எத்தனை நாள்தான் ரஞ்சி திரும்பி வருவாள்னு காத்திட்டு இருப்பான்! ஒங்களுக்கெல்லாம் ஆம்பளைங்க சுபாவம் புரியறதில்ல!”

“நீங்கதான் அவர்கிட்டே போய், எடுத்துச் சொல்லி..,” மிகுந்ததைச் சொல்ல முடியாது தொண்டை அடைத்துப்போக, இரு கரங்களையும் இணைத்துக் காட்டினாள். கவனிப்பாரற்று, கீரை அப்படியே கிடந்தது.

“என்னமோ, நான் அவங்களைப் பிரிச்சமாதிரி இல்ல பேசறே?” கிண்டலாகக் கேட்டார்.

அந்த தாக்குதலால் சட்டென அவள் உடல் பின்னால் போயிற்று. சமாளித்துக்கொண்டு, “எல்லாம் அந்த பாழாப்போன விபத்தால வந்தது!” என்று, பழியை அதன்மீது திருப்ப முயற்சித்தாள்.

“எந்த விபத்தைச் சொல்றே? எனக்கு மறந்துகூடப் போச்சு!”

“வெளையாடாதீங்க!”

“அடேயப்பா! எப்பவோ நடந்ததை இன்னுமா மனசிலே வெச்சுக்கிட்டு இருக்கே?” என்றவர், அவள் அங்கிருப்பதையே மறந்தவர்போல, சினிமாப் பக்கத்தைத் திருப்பி, படிக்க ஆரம்பித்தார்.

வழக்கமாக, பாக்கியமும், ரஞ்சியும்தான் அதில் ஒரு எழுத்து விடாமல் படிப்பார்கள் — என்னமோ கடவுள் நாமாவளியைப் பாராயணம் செய்வதுபோல. அதற்கென்றே, ஞாயிறு பேப்பரை புதன், வியாழன்வரை பத்திரப்படுத்துவார்கள். ஒரு `க’ நடிகர், ஒன்றில்லை, இரு மனைவியரை விவாகரத்து செய்தார் என்று படித்தபோது சுவாரசியம் மிக, பல நாட்கள் அதைப்பற்றியே பேசினார்கள், அலுக்காமல்.

அதே பிரச்னை தனக்கென்று வந்தபோது, எவ்வளவு பாதிப்பை உண்டாக்குகிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை அவரால்.

“ஆமா! ஒங்களுக்கு ஒங்க தோட்டத்தைவிட்டா, வேற எதுவுமே தெரியாது!” என்று நொடித்தாள பாக்கியம்.

“எனக்குத் தனியா ஒரு வேலை இருக்கிறதாலதான், மத்தவங்க விவகாரத்திலே குறக்கிடாம..,” மறைமுகமாக அவளைத் தாக்கினார்.

“ஏன் சுத்தி வளைக்கறீங்க?. நான்தான் ரஞ்சியோட வாழ்க்கையிலே புகுந்து, கலாட்டா பண்றேன்னு நேராவே சொல்லிட்டுப் போங்களேன்!”

அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, பேப்பரைக் கீழே போட்டார், அசிரத்தையாக. “ஒண்ணு சொல்றேன், கேட்டுக்க. ஒரு வயசுவரைக்கும்தான் பிள்ளைங்க நமக்கு சொந்தம். அதுக்கப்புறம்..!”

“ஒங்கமாதிரி பாசம், பந்தம் எதுவுமில்லாம என்னால இருக்க முடியாது!”

“நல்ல பாசம்! ரஞ்சிக்குக் குறைப்பிரசவம் ஆனப்போ, அவளைவிட நீதான் அமர்க்களப்படுத்தினே!”

“பெத்தவளுக்குத்தான் தெரியும், பிள்ளையோட அருமை,”தலைநிமிர்த்திச் சொன்னாள். “அவ செஞ்ச புண்ணியம், நாம்ப கூப்பிடு தூரத்திலே இருக்கோம். இல்லாட்டி, இந்தமாதிரி புருஷன் வாய்ச்சதுக்கு.. எப்பவும் கண்ணைக் கசக்கிட்டு..!”

“பாக்கியம்! நாம்ப சண்டை போடலியா, சமாதானம் செஞ்சுக்கலியா?” சமாதானமாக ஆரம்பித்தவருக்கு எங்கிருந்தோ வெறி வநதது. “இப்படியா எல்லாத்துக்கும் அம்மாகிட்ட ஓடி, ஓடி வருவாங்க! வந்து, வந்து, புருஷன்மேல கோள் சொல்றது!” காட்டுக் கத்தலாகக் கத்தினார்.

“ஷ்! எனக்கென்ன, காது செவிடா? ஏன் இந்தக் கத்து கத்தறீங்க? அவ காதிலே விழுந்து வைக்கப்போகுது!”

“விழட்டுமே! உள்ளதைத்தானே சொல்றேன்!” மேலும் கத்தினார். உடனே இரும ஆரம்பித்தார். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “பாக்கியம்! பிள்ளைங்க வளர்ந்தா, பெத்தவங்களை விட்டுப்போறது என்ன, ஒலகத்திலே நடக்காத அதிசயமா? நீ வரலியா?” என்றார் கனிவாக.

பாக்கியம் வருத்தம் மேலிட, “அம்மா, அம்மான்னு என் காலைச் சுத்திச் சுத்தி வளர்ந்தது. இன்னிக்கு நான் மட்டும் தனியா..!”

“அது எப்படி தனியா? என்னை விட்டுட்டியே!” என்றார் மணி. குரல் ரகசியமாக, படுக்கையறையில் பேசுவதுபோல், ஒலித்தது.

“ஆ..மா! நீங்க பாட்டிலே, ஏதோ பண்ணிக்கிட்டு இருப்பீங்க!”

“வெள்ளைக்காரன்மாதிரி கையைக் கோர்த்துக்கிட்டோ, இல்லே, ஒருத்தர் இடுப்பை ஒருத்தர் பிடிச்சுட்டுப் போனாத்தான் அன்பா? நம்ப வயசிலே.. இவ்வளவு வருஷம் சேர்ந்து, ஒண்ணா இருந்து, அப்புறம் எதிரெதிரே ஒக்காந்து, ஒண்ணும் பேசாமலே இருந்தாலே..! எனக்கென்னமோ, நீ என்னோட ஒரே வீட்டிலே இருந்தாக்கூட..! சொல்லத் தெரியல, போ!”

பாக்கியம் ஆச்சரியத்துடன் கணவரைப் பார்த்தாள். ஒரு புதிய மனிதரைப் பார்ப்பதுபோலிருந்தது. அவர் இவ்வளவு பேசினதே அதிகம். ஆனால், அவளுக்குப் புரிந்தது, அவர் என்ன சொல்ல வருகிறார் என்று.

மணி தொடர்ந்தார்: “நீ அடிக்கடி ரஞ்சி வீட்டுக்குப் போவியே, அப்பல்லாம்.. ஒண்ணும் புரியாம, வீட்டையே சுத்திச் சுத்தி வருவேன்!”

“அதெல்லாம் சும்மா!” என்றாள் பாக்கியம். அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. பிறகு, சற்று யோசித்துவிட்டு, “தெருவிலே போற பொம்பளைங்களை எல்லாம் நீங்க திரும்பித் திரும்பிப் பாக்கறது எனக்குத் தெரியாதுன்னு நெனச்சுட்டீங்களா?” என்று வம்புக்கு இழுத்தாள்.

மணி அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். “அது.. பதினஞ்சு வயசிலே உண்டான பழக்கம். மொதமொதல்லே, டீச்சரைப்பத்திப் பேசுவோம் –அவங்க நடை, உடை, அழகு, இப்படி. ஒரு டீச்சருக்குக் காதல் கடிதம்கூட எழுதி வெச்சேன்!”

பொங்கிய சிரிப்புடன், வாயைப் பொத்திக்கொண்டாள் பாக்கியம்.

“இப்படியெல்லாம் செய்தாத்தான் ஆம்பளைன்னு கூட்டாளிங்க சொல்லிக் குடுத்தது. எத்தனை வருஷப் பழக்கம்! அவ்வளவு சுலபமா விட்டுப் போயிடுமா?”

பாக்கியம், சிரிப்பு மாறாமலேயே, தலையில் அடித்துக்கொண்டாள்.

“அதெல்லாம்.. சும்மா! அந்த நிமிஷத்திலே ஒரு ஜாலி. அவ்வளவுதான். ஒரு வாரம் கழிச்சு, அவங்க முகம்கூட ஞாபகம் இருக்காது. ஆனா, ஒன்னைப்பத்தி நினைச்சா.. நம்ப கல்யாண சமயத்திலே..!”

ஆச்சரியம் தாங்காது, சட்டென தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள் பாக்கியம்.

“இன்னும் என் கண்ணுக்கு அப்போ பாத்தமாதிரிதான் இருக்கே! அப்போ, பதினெட்டு வயசுப் பொண்ணு நீ!”

“அதான் என்னோட பொறந்தநாளிலே..?” மேலே சொல்ல முடியாது, நா தழுதழுத்தது. கேக்கின் மேல் வைக்கப்பட்டிருந்த பதினெட்டு மெழுகுவர்த்திகளைப் பார்த்து, தான் என்ன அமர்க்களம் பண்ணினோம்! நினைக்கவே வெட்கமாக இருந்தது பாக்கியத்திற்கு. நெருங்கி வந்து உட்கார்ந்துகொண்டாள். தன்னையும் அறியாது, அவரது கையைத் தடவிக் கொடுத்தாள். “ஒங்க மகளாப் பொறந்து, இந்தப் பொண்ணு இப்படிக் குணமில்லாம இருக்கே!” என்று அங்கலாய்த்தாள்.

“அதுக்கென்ன செய்யறது! அவ எனக்கு மட்டும்தான் மகளா?” என்றார் மணி, குறும்புச் சிரிப்புடன்.

ஆருயிர் கணவனைச் செல்லமாக முறைத்தாள் தர்மபத்தினி.

யோசிப்பதுபோல் பாசாங்கு செய்தார் மணி. “ஒனக்கென்ன, காலைக் கட்டிக்க பிள்ளைங்க வேணும். அவ்வளவுதானே? ரவிக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வெச்சுடலாம். நாளைக்கே, பேரப் பிள்ளைங்க..!”

“பொண்ணு யாரு? ராதிகாவைத்தானே சொல்றீங்க?”

“சீச்சீ! புருஷனை வேணாம்னு விட்ட குடும்பத்தில வந்த பொண்ணில்ல அது! நம்ப குடும்ப கௌரவம் என்ன ஆறது? வேற நல்ல எடத்திலே..!”

அவரைச் சந்தேகமாகப் பார்த்தாள். தன் காலை வாருகிறாரோ?

“என் ஃப்ரெண்ட் ரத்னசபாபதி இல்லே?” என்று எதற்கோ ஆயத்தமானார்.

“யாரு? போன வருஷம் செத்துப்போனாரே, அவரா?”

“அ.. செத்துப் போயிட்டானா? அவனோட சொந்தக்காரங்கதான். ஆமா. அவனோட சொந்தக்காரங்க! பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்கும். அவங்க வீட்டுக்குப் போய், மெதுவா பேச்சுகுடுத்துப் பாத்தேன்..!”

பணக்காரக் குடும்பமாயிற்றே! “என்ன சொன்னாங்க?” ஆர்வத்துடன் கேட்டாள்.

“அவங்க கெடக்காங்க, மரியாதை தெரியாதவங்க! `ஒங்க மக வாழாவெட்டியா, ஒங்க வீட்டுக்கே வந்திடுச்சாமே!’ன்னு நீட்டி முழக்கினாங்க, பாரு!”

“படுபாவிங்க! மத்தவங்களைப்பத்தி என்ன வம்பு இவங்களுக்கு எல்லாம், கேக்கறேன்! ஒரு நல்..ல பொண்ணு, ஏதோ மனத்தாங்கலோட புருஷனைவிட்டுக் கொஞ்சநாள் பிரிஞ்சிருந்தா, ஒடனே பேர் கட்டிடுவாங்களே!”

சாதுவாக, “இதெல்லாம் எனக்கென்ன தெரியும்! நான் பேசாம, தலையைக் குனிஞ்சுகிட்டு, எழுந்து வந்துட்டேன்!” என்றார் மணி. புளுகுவதில் மகனையும் மிஞ்சிவிட்டோமோ என்ற பெருமை ஏற்பட்டது.

“நீங்க ஏன் என்னைக் கேக்காம, இப்படி கண்டவங்க வீட்டுக்கெல்லாம் போய் அவமானப்படறீங்க? ரவிக்கு எதிலே கொறைச்சல்? இல்ல, அவனுக்குப் பொண்ணு குடுக்கத்தான் ஆளில்லையா? நம்ப ராதிகா அவனுக்காகவே பொறந்து வளர்ந்திருக்கா,” என்று அழுத்திச் சொன்னவள், “ஒங்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகுது!” என்று முடித்தாள்.

மணி வாயைப் பிளந்தார்.

“பாவம், அவங்கம்மா! அநியாயம் செய்யறதெல்லாம் ஆம்பளை, ஆனா, கெட்ட பேரு பொம்பளைக்கா? இதைப் பொம்பளைங்கதானே தட்டிக் கேக்கணும்?”

“பாக்கியம்! நீதானா பேசறே!” தன் காதையே அவரால் நம்ப முடியவில்லை.

“எனக்கு எல்லாம் தெரியும். நீங்க குறுக்கே பேசாதீங்க. காலை வேளையிலே, என்னை ஒரு வேலை செய்யவிடாம, வம்புக்கிழுத்துக்கிட்டு!” என்றபடி எழுந்தாள். போகிற போக்கில், “என்னோட மருமக ராதிகாதான்! அவங்களைத் தனிக்குடித்தனம் வெச்சுடலாம். பிரச்னையே வேணாம்!” என்றாள்.

“பாக்கியம்!”

“நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். போய், ஒங்க செடிக்கெல்லாம் தண்ணியோ, வேற என்ன எழவோ ஊத்தற வேலையைப் பாருங்க!”

வெற்றிச் சிரிப்பை அடக்கிக்கொண்டார் மணி.

“அதுக்கென்ன! ரெண்டு பேரும் பட்டதாரிங்க. ஆயிரக்கணக்கில சம்பாதிக்கிறாங்க. அந்த வயத்தெரிச்சல்லே நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கதான்! பேசிட்டுப் போகட்டுமே! அதுக்கெல்லாம் பயப்படறவ இந்த பாக்கியம் இல்லே!”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *