50 பாட்டியும், பார்ட்டியும்

வாசலில் வந்து நின்ற ரவியின் கார் கிரீச்சிட்டது. வேகமாக உள்ளே ஓடி வந்தான் ரவி.

“என்னடா? வழியிலே பாத்ரூம் எதுவும் இல்லியா?” அவனுடைய அவசரத்துக்குத் தானே ஒரு காரணம் கற்பித்துக் கேட்டாள் பாக்கியம்.

இறைக்க, இறைக்க, ரவி, ”ஐயோ! அதில்லேம்மா!” என்றவன் மேலே பேச முடியாது, காரைச் சுட்டிக்காட்டினான்.

எட்டிப் பார்த்தவள், “யாரு, மாப்பிள்ளையா வந்திருக்காரு!” என்று முகமெல்லாம் மலர, “ரஞ்சி! இங்க வந்து பாரேன்!” என்று கூவினாள்.

“அவன் ரஞ்சியைப் பாக்க வரல, கூட்டிட்டுப் போக! வைத்தி.. பார்ட்டி..!” என்றவன் தலையை ஒரேயடியாகக் குனிந்து, உதடுகளை இறுக்க மூடிக்கொண்டான். சிரிப்பு பொத்துக்கொண்டது அப்படியும்.

“பாட்டியா? ஐயையோ!” என்று அலறிய பாக்கியம், “அடி ரஞ்சி! பொறப்படு, பொறப்படு. ஒங்க வீட்டுப் பாட்டி போயிட்டாங்களாம். நாம்ப எல்லாரும்..!” என்று குரல் கொடுத்தாள்.

“ஐயோ! நீங்க எங்கேம்மா கெளம்பறீங்க?” என்றான் ரவி, உண்மையாகவே அதிர்ந்து.

“சம்பந்தி, நான் போகாட்டி எப்படி!”

“நீங்க அப்புறம் அப்பாவோட வாங்க. மொதல்லே ரஞ்சி போகட்டும்,” என்றான் கண்டிப்பாக.

உள்ளே வந்த பாக்கியம், மகள் பவுடர் டப்பாவை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, “எழவு வீட்டுக்குப் போக என்ன அலங்காரம்! இப்படியே கெளம்பு!” என்று ஆக்ஞை பிறப்பித்தாள்.

கழுத்துப்பட்டியில் நைந்துபோன இரவு உடையிலிருந்தவள் தயங்கினாள். எத்தனையோ மாதங்களுக்குப்பின் கணவர் தன்னை இப்படியா பார்ப்பது! “என்னம்மா!” என்று சிணுங்கத்தான் அவளால் முடிந்தது.

“போடி, சரிதான்! அவர் மனசிருக்கிற நெலையில ஒன்னைத்தான் கவனிக்கப்போறாராக்கும்!”

அதற்கு மேலும் தான் தாமதித்தால், கணவர் கோபித்துக் கொண்டுவிடுவாரோ என்று பயந்தவளாக, ரஞ்சி வேகமாக வாசலைநோக்கி நடந்தாள்.

திடீரென்று நினைத்துக்கொண்டு, “வரேம்மா!” என்று தாயிடம் விடைபெற்றாள்.

“எங்கேடி வரப்போறே? போய் ஒழுங்கா இருக்கிற வழியைப் பாரு!” என்று மிரட்டலாகச் சொன்ன பாக்கியம், “ம்! ஒனக்கு இப்படி ஒரு புருஷன் வாய்ச்சிருக்க வேணாம். இனிமே சொல்லி என்ன புண்ணியம்? கெடைச்சதை வெச்சுக்கிட்டு, ‘நமக்குக் கொடுப்பினை அவ்வளவுதான்’னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்!” என்று அறிவுரை கூறினாள்.

தவறாமல், “நானோ, போற நாளை எண்ணிக்கிட்டிருக்கேன். என்னை நம்பி, எத்தனை நாள் நீ இங்கே தங்க முடியும்!” என்று முடித்தாள்.

தங்கை வருவதைப் பார்த்த ரவி, கார் சாவியை வைத்தியிடம் கொடுத்துவிட்டு, “நல்வாழ்த்துகள்!” என்று சிரித்தான்.

ஒட்டமும் நடையுமாக வெளியே வந்தவளைப் பார்த்து மனதுக்குள் சிரித்தபடி, “என்ன ரஞ்சி, ரெடிதானே?” என்று கேட்டுவைத்தான்.

பெரிதாகத் தலையாட்டினாள் தங்கை.

பக்கத்தில் அமர்ந்த மனைவியை மேலும் கீழுமாக அருவருப்புடன் பார்த்தான் வைத்தி. “இப்படியேவா வரப்போறே?”

“அம்மாதான் சொன்னாங்க..,” என்று அவள் ஆரம்பிக்க, முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு, விழிகளைச் சுழற்றினான் வைத்தி.

`வைத்தி! வேணாண்டா. இப்பவே இன்னொரு சண்டையை ஆரம்பிக்காதே!” என்று உட்குரல் எச்சரித்தது. `ஒரு வாரமாவது போகட்டும்!’

கார் அவர்கள் வீட்டுக்குப் போகாமல், வேறு திசையில் திரும்பியது ரஞ்சிக்குக் குழப்பம் விளைவித்தது.”பாட்டி வீட்டிலே இல்ல?”

“பார்ட்டி.. வீட்டிலேதான்!” என்று அழுத்திச் சொன்னான் வைத்தி. முன்பு வைத்தியின் வீட்டருகே இருந்த ரஹீம் இப்போது புதிய வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தான்.

“இல்ல.., இந்தப் பக்கம் போறீங்களே, ஆஸ்பத்திரியில இருக்காங்களோன்னு கேட்டேன்!”

பரிதாபத்துடன் அவள் பக்கம் திரும்பி, ஒரு பார்வை பார்த்தான் வைத்தி. `ஏற்கெனவே அரைகுறை! தெருவிலே விழுந்தது, அபார்ஷன் ஆனது, எல்லாம் சேர்த்து, இவளை முக்கால் பைத்தியமா ஆக்கிடுச்சு, பாவம்!”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *