6 பழைய நினைவுகள்

அன்று ஞாயிற்றுக்கிழமை. புகைப்பட ஆல்பத்தை வெளியே எடுத்த வைத்தி, அதிலேயே ஆழ்ந்துபோனான்.

“ரஞ்சி! நம்ப கல்யாண போட்டோவிலே நீ எவ்வளவு அழகா இருக்கே, பாரேன்!” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தான்.

“சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில வரும்!” சாயம் போன நைட்டியில், கரண்டியும் கையுமாக உள்ளிருந்து வந்த ரஞ்சி பெருமையாகக் கூறினாள்.

“ஏய்! இந்தப் பழமொழி எல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே!” என்று மிரட்டியவன், `புரிய மாட்டேங்குது!’ என்று முணுமுணுத்துக்கொண்டான்.

ஆரம்பத்தில் தோட்டப்புறத்தில் தமிழ்ப்பள்ளியில் படித்திருந்தாலும், பெற்றோர் இருவரையும் ஒரே சமயத்தில் லோரி விபத்தொன்றில் பறிகொடுத்தபின், நகர்ப்புறத்திற்குக் குடிபெயர்ந்துவிட்ட தாத்தா பாட்டியிடம் வளர்ந்தவன் அவன். வீட்டருகே இருந்த மலாய் பள்ளியில் படிக்க நேரிட்டதும், தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட, பேசுவது மட்டுமே பழக்கத்தில் இருந்தது.

ஏதோ நினைவு வந்தவளாய், “ஏங்க? நானே கேக்கணும்னு இருந்தேன். அது என்ன, பொண்ணு பாக்க வந்தப்போ, என்னை அப்படி வெறிச்சு வெறிச்சுப் பாத்தீங்களாம்?” என்று அவனைச் சண்டைக்கு இழுத்தாள் ரஞ்சிதம்.

“அதுக்குத்தானே என்னைக் கூப்பிட்டு இருந்தாங்க? பொண்ணு பாக்க?”

“உக்கும், போங்க! எனக்கு ஒரே வெக்கமா போயிடுச்சு. ஒங்களை நான் சரியாவே பாக்கல!”

“ஆசையா இருந்தா பாத்திருக்கிறது!”

“பாத்திருந்தா, ஒங்களை நான் ஏன் கல்யாணம் பண்ணிட்டு இருந்திருக்கப் போறேன்!”

“இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல. அப்படிப் பாத்திருந்தாப்போல, கண்ணு தெரிஞ்சிருக்கவா போகுது! இந்த சோடாபுட்டி கண்ணாடியைப் போட்டுக்காம ஏமாத்திட்டியே அன்னிக்குத்தான்! நீ மட்டும் இப்ப இருக்கிறது மாதிரி, சுருட்டையான எலிவால் பின்னலும், சோடாபுட்டியுமா காட்சி குடுத்திருந்தா, நான் ஒன் திக்குக்கே கும்பிடு போட்டுட்டு ஓடியிருப்பேன்!”

ரஞ்சியின் மார்பகங்கள் மேலும் கீழும் எழுந்தவிதம் அவளுடைய ஆத்திரத்தை வெளிக்காட்ட, வைத்தியின் மூளை அபாயச்சங்கு ஊதியது. `ஏண்டா மடையா! இப்ப அவ கோவிச்சுட்டுப் போயிட்டா, அப்புறம் சமாதானப்படுத்தத் தெரியாம திண்டாடப்போறது யாரு? ஏதாவது மலிவான ஹோட்டலில அழுகின, இல்லாட்டி புழுவெச்ச மரக்கறியில பண்ணின சமையலுக்குத் தண்டம் அழப்போறியா?’

உடனே, எல்லா கணவர்களும் காலம் காலமாகச் செய்துவந்ததைப்போல, தாஜா செய்ய ஆரம்பித்தான். “நீ கண்ணாடி போட்டிருக்கிறதும் நல்லதுக்குத்தான். ஒன் ஒண்ணரைக்கண் தெரியாம மறைக்குது. முடி கட்டையா இருக்கிறதால, எண்ணையும் மிச்சம்!”

அவளையும் மீறி, ரஞ்சி சிரித்தாள். “காதல் வசனம் பேச, ஒவ்வொருத்தனும் ஒங்ககிட்டதான் கத்துக்கணும்!”

“வசனம்னு சொன்னதும் நினைவு வருது. படத்துக்குப் போலாமா?”

“ஹை! நெசம்மாவா சொல்றீங்க?”

“பின்னே? டிரெஸ் மாத்திட்டு வா!”

“ஒங்க கண்ணுக்கு அழகா இருக்கேன்ல? இதுவே போதும்!” என்று அப்படியே புறப்பட ஆயத்தமானாள் ரஞ்சி.

வைத்தி தலையில் அடித்துக்கொண்டதை அவள் பார்க்கவில்லை.

License

பழைய நினைவுகள் Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *