9 பழைய நினைவுகள்

வழக்கமாக மகள் வீட்டிலிருந்து திரும்பியதுமே வாய் ஓயாது பேசித்தள்ளும் மனைவி இன்று சுரத்தில்லாது இருந்ததைக் கண்டு மணிக்கு அதிசயமாக இருந்தது.

வீட்டு வாசலில் அவர் போட்டிருந்த சிறு தோட்டத்தில் பூத்து ஓய்ந்துவிட்ட ரோஜாக் கிளைகளை மூன்று அல்லது ஐந்து முளைகளுக்குக் கீழே வெட்டிக் கொண்டிருந்தவர், தன் கையிலிருந்த கத்தரிக்கோலைக் நழுவவிட்டார். “மாப்பிள்ளையும் ரஞ்சியும் நல்லா இருக்காங்கதானே?”

சில நொடிகள் கழித்துத்தான் பதில் வந்தது. “அவர் நல்லாத்தான் இருக்காரு. இந்த ரஞ்சிதான்..!”

ஆச்சரியத்தோடு நிமிர்ந்தார் மணி. அருமை மகளை யாராவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் சீறியெழுவாள், இல்லை மூன்று நாட்களானாலும், அவர்களுடன் முகம் கொடுத்துப் பேசமாட்டாளே! அந்த பாக்கியம்தானா இது!

எல்லாரையும் அடக்கி ஒடுக்குபவள் தானே அடங்கி இருந்ததைப் பார்க்க கண்ராவியாக இருந்தது.

“என்ன ஆச்சு, பாக்கியம்?” என்று கனிவுடன் கேட்டார்.

“என்னான்னு சொல்றது!” என்று பெருமூச்செறிந்தவளாக, “இருபது வயசுக்குமேல ஆகியும், அவளுக்குக் கொஞ்சங்கூட பொறுப்பே வரலீங்க!” என்று குறிப்பாகத் தெரிவித்தாள். எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னால், `நீ வளர்த்த லட்சணம் அப்படி!’ என்று பழித்துவிட்டால்?

“இதுக்கா கவலைப்படறே?” மணி ஆறுதல் அளித்தார். “அதெல்லாம் மாப்பிள்ளை அனுசரிச்சுப் போயிடுவார்! அவ்வளவு சாமர்த்தியம் இல்லாட்டியும், சும்மா சொல்லக்கூடாது, குணத்தில மனுசன் தங்கக் கம்பி!”

“அந்த தங்கத்தோடகூட ஒத்துப்போக முடியல ஒங்க மகளுக்கு!”

“அது என்ன, `ஒங்க மக?’ தாயைப்போல பிள்ளை!” குறும்பாகச் சிரித்தபடி, அவளை வம்புக்கு இழுத்தார். எவ்வளவு நாட்களாகி விட்டன, இப்படி அவரையும் ஒரு பொருட்டாக அவள் மதித்துப் பேசி!

“உக்கும்! நான் என்னிக்குமே இப்படி இருந்ததில்ல. நேத்து பாருங்க, நான் நெய்யுருண்டை செஞ்சேனா! அவருக்குக் குடுக்காம, அவளேதான் எல்லாத்தையும் தின்னு தீர்ப்பேன்னு..!”

மணி சிரிக்க ஆரம்பித்தார். “எல்லாரும் அவளுக்கு விட்டுக்குடுத்தே பழக்கமாயிடுச்சு, இங்க! விடு! தானே ஒரு குழந்தை பிறந்தா சரியாகிடும்!”

“நீங்க வேற! இங்க மொதலுக்கே மோசமாகிடும்போல இருக்கு. அந்த மனுசன் வேணுமின்னே அவ வாயைப் பிடுங்கிட்டு, கோவிச்சுக்கிட்ட மாதிரி, தினம் ராத்திரி..” பாக்கியம் அதீதமாகத் தலையைக் குனிந்துகொண்டாள், `நான் வாய்விட்டுச் சொல்ல முடியாத அசிங்கத்தை நீங்களேதான் புரிந்துகொள்ள வேண்டும்!’ என்பதுபோல்.

மணி விளங்காது, “என்ன சொல்றே?” என்றார்.

“அட, ஆமாங்கறேன்! ராத்திரி வேளையானா, எங்கேயோ போயிடறாரு. தினமுமே இப்படித்தானாம். நான் ரஞ்சியைக் கேட்டேனே!”

அழகு, அறிவு, இதெல்லாம் இருந்தால்தானா ஆண்பிள்ளை? மாப்பிள்ளையும் தன்னைப்போல ஒருவர்! மணிக்கு ரோஷம் எழுந்தது. “சேச்சே! அப்படிப்பட்ட ஆளில்ல வைத்தி!” என்று பரிந்தார்.

அவருடைய வார்த்தைகளால் மேலும் நொந்துபோன மனைவியைப் பார்த்ததும், என்னமோ அவளுக்குத் துரோகம் இழைத்துவிட்டதைப்போல குற்ற உணர்வு மிகுந்தது. சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

“பாக்கியம்! அவங்க ரெண்டு பேருக்கும் எத்தனை நாளாப் பழக்கம்?”

“தெரியாதமாதிரி இல்ல கேக்கறீங்க! இந்த நாலைஞ்சு மாசமாத்தான்!”

“அதாவது.., அவங்க கல்யாணம் ஆனப்புறம்தான், ம்?” கட்டபொம்மன் சிவாஜி கணேசன் மாதிரி உறுமினார்.

அவரைப் பாராட்டும் மனநிலையில் இருக்கவில்லை அவள். ஆக்ரோஷமாக, “பின்னே? அதுக்கு முந்தி அவர் அவளை நெருங்க விட்டிருப்பேனா? அப்புறம் நம்ப குடும்ப மானம் என்ன ஆகறது?” என்றவள், எதையோ நினைத்தவளாகச் சிரித்தாள். பிறகு, குரலில் என்றோ காணாமல்போன மென்மையுடன், “நம்ப நிச்சயதார்த்தம் முடிஞ்சப்புறம் நீங்க எங்க வீட்டுக்கு வருவீங்களே, நினைப்பிருக்கா?” என்று கேட்டாள்.

“மறக்குமா!” என்ற மணியின் குரலில் காலங்கடந்த கோபம். “அந்தக் கெழவர், எல்லாம் ஒங்கப்பாவைத்தான் சொல்றேன்! என்னமோ, நான் அவரைத்தான் பாக்க வந்தமாதிரி, மூ..ணு தலைமுறையோட கதையையும் பேசிப் பேசி.., கழுத்தறுப்பாரு!”

“போனவரைப்பத்தி இப்படிக் குத்தமா..,”வருத்தத்துடன் இடைமறித்த பாக்கியத்தை அவர் சட்டை செய்யவில்லை. “நீயாவது, `ஏதுடா! நம்பமேலகூட ஆசைப்பட்டு ஒரு இளிச்சவாயன் வந்திருக்கானே!’அப்படின்னு பெருமையா என் எதிரே வந்து ஒக்காந்தியா?”

“நல்லாக் கேட்டீங்க, போங்க! வீட்டுக்குள்ளே நீங்க நுழைஞ்சதுமே, உள்ளே எங்க பாட்டியும் அத்தையும் எனக்கு ரெண்டு பக்கமும் ஒக்காந்துடுவாங்க. நகரக்கூட முடியாது!”

எவ்வளவு ஏக்கம் இவள் குரலில்தான்! இவளுக்கும் நம்மேல் ஆசை இல்லாமல் இல்லை என்று உள்ளூர மகிழ்ச்சி ஏற்பட்டது மணிக்கு.

“கடைசியில நானே துணிஞ்சு ஒங்கப்பாகிட்ட கேட்டேன்..,” அவர் சொல்லப்போனதைப் புரிந்துகொண்டவளாக, மகிழ்வுடன் குறுக்கிட்டாள் பாக்கியம். “என்னைப் படத்துக்குக் கூட்டிப் போகத்தானே? அதான் வந்தேனே!” என்றவள், படத்தின் பெயரையும் ஞாபகமாகச் சொன்னாள்: “நாடோடி மன்னன்!”

அவளுடைய மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லை மணியால். பழைய கோபம் இன்னும் கனன்றுகொண்டு இருந்தது. “நான் ஒரு மூளை கெட்டவன்! `என்னடா, கெழவர் இவ்வளவு சுலபமா ஒத்துக்கிட்டாரே!’ன்னு ஒரே சந்தோசம் எனக்கு. ஹிந்துஸ்தான் தியேட்டருக்குப் போனா, பின்னாலேயே அந்த ரெண்டு தடியன்களும்! ஒன் அண்ணன்காரங்கதான்!” பற்களைக் கடித்தார், அந்த நினைவில். “என்னமோ, ஒலகத்திலேயே இல்லாத அழகி பாரு, அவங்க தங்கச்சி! அவளுக்குக் காவலாம்! ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒருத்தரா துவாரபாலகர் கணக்கா ஒக்காந்துட்டாங்க!”

“அவ்வளவு நம்பிக்கை ஒங்கமேல!” பாக்கியம் சிரித்தாள்.

மணி தொடர்ந்து புலம்பினார். “வாத்தியார் படம் வேறயா! ஒரே கிளுகிளுப்பு! ஒன் கையைக்கூடப் பிடிக்க முடியல. எனக்கு வந்த ஆத்திரத்திலே…,” என்று ஏதோ சொல்லப்போனவர், சட்டென நிறுத்தினார். “நமக்கு வயசு ரொம்பத்தான் ஆகிப்போச்சு, பாக்கியம்!”

கணவர் குறுகி உட்கார்ந்ததைப் பார்த்தாள் பாக்கியம். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

“பாரேன், ஒங்க அத்தை, பாட்டி, அப்புறம்.. அந்தத் தடியனுங்க எல்லாரும் ஒன்னைக் கட்டிக் காத்ததாலே அவங்க வில்லன். இப்ப நாம்பளும் அதைத்தானே செய்துக்கிட்டிருக்கோம்?”

சிறிது நேரம் மௌனமாக இருந்து, இருவரும் தத்தம் உணர்ச்சிகளுடன் போராடினர். மணிதான் முதலில் பேசினார். “இந்தமாதிரி.. பெரியவங்க பாத்து நிச்சயிக்கிற கல்யாணத்தில.. ஏதோ, ஒரு நாள் கூத்து இது! முன்னே பின்னே பழக்கமில்லாத ரெண்டுபேரை, `இனிமே நீங்க எப்பவும் ஒண்ணாத்தான் இருக்கணும்!’னு நிர்ப்பந்தப்படுத்திடறோம்!”

“ஆமாங்க. கல்யாணமான புதுசில.. எனக்குக்கூட கண்ணைக் கட்டி காட்டில விட்டமாதிரி இருந்திச்சு. நல்லவேளை, ஒங்கம்மா அனுசரணையா இருந்தாங்க!”

“என்னை விட்டுட்டியே! அப்போ ஆரம்பிச்சதுதான்! இன்னிவரைக்கும் எப்படி ஒன் தாசானுதாசனா இருக்கேன்!”

பாக்கியம் சிரிப்புடன் கையை வீசினாள். முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது.

“என்ன செய்யறது? ஒன் அதிர்ஷ்டம் ஒன் பொண்ணுக்கு இல்லியே!” சீண்டினார். அவள் சமாதானமாகாததைக் கண்டு, “அவங்களுக்குப் பிடிச்சிருக்கு, சண்டை போட்டுக்கறாங்க! விடுவியா!” என்றார் லேசாக.

“ரஞ்சி கண்ணைக் கசக்கினா..,” பாக்கியம் வராத கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.

“அதான் அவ கண்ணைத் தொடைச்சுவிட ஒருத்தர் வந்தாச்சே! ஒனக்கு இதெல்லாம் புரியாது, பாக்கியம்!” என்ற மணி, நமட்டுச் சிரிப்புடன், “நமக்குக் கல்யாணமான புதிசில, நீ எதுவும் புரியாம முழிச்சுக்கிட்டு இருப்பியா! அப்போ.. எனக்குள்ள ஒரு வெறி — ஒன்னை அடிச்சோ, ஒதைச்சோ, எப்படியாவது அழ விடணும்னு!”

“என்னங்க இது, அநியாயம்! நானே பயந்துக்கிட்டு..!”

“அங்கதான் விஷயமே இருக்கு. நீ அழுதுக்கிட்டு எங்கிட்ட வருவே! அப்போ..,” வெட்கினார். “ஒன்னைக் கட்டி அணைச்சு சமாதானம் செய்யலாம்னு..!”

பாக்கியம் புரியாது பேசினாள். “நான்தான் எதுக்கும் அத்தைகிட்ட ஓடுவேனே! அவங்ககூட அதிசயப்படுவாங்க — `சாதுவா, அசடுமாதரி இருந்தான்! இவனுக்கு என்ன வந்திச்சுன்னு தெரியலியே!’ன்னு!”

“அதே நிலையிலதான் இப்ப வைத்தியும்! யோசிச்சுப் பாரு!”

பாக்கியம் அதிக நேரம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. ஆனால், உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் கடினமாக இருந்தது. “நீங்க.. அத்தைமேல ஆத்திரப்பட்டீங்களா?” அவள் குரல் இறங்கியிருந்தது.

“பின்னே? சும்மாச் சும்மா எனக்கும் என் பெண்டாட்டிக்கும் குறுக்கே வந்தா?” பொரிந்தார் மணி.

`மாப்பிள்ளையும் அப்படித்தானே என்னை.!’ பாக்கியம் அதைச் சொல்லவில்லை. அவள் வெறித்த பார்வையே சொல்லிற்று.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *