25 படத்துக்குப் போகலாம்

சோர்ந்து படுத்திருந்த மகளைப்ப பரிதாபத்துடன் பார்த்தாள் பாக்கியம். “நீ எப்பவும் இப்படி வீட்டிலேயேதான் அடைஞ்சு கிடப்பியா? ஜெயில் மாதிரி இல்ல இருக்கு!” என்று தூபம் போட்டாள்.

சூள் கொட்டினாள் ரஞ்சிதம். “தினமும் எங்கம்மா போறது!”

“ஏண்டி! இந்த கோலாலம்பூரில போக இடமா இல்ல? இங்கிலிஷ்காரன், அமெரிக்காக்காரன் எல்லாம் இருபதாயிரம், முப்பதாயிரம் செலவழிச்சுக்கிட்டு வரான்!” அதிகம் வெளியில் போய் பழக்கமில்லாவிட்டாலும், டி.வி செய்திகளைப் பார்த்து வந்ததில், பாக்கியத்திற்கு நாட்டு நடப்பு தெரிந்திருந்தது.

“ஆ..மா!”நொடித்தாள் மகள். “அவங்க மாதிரி பணத்தைக் குவிச்சு வெச்சுக்கிட்டு, எப்படி செலவழிக்கிறதுன்னு புரியாம திண்டாடறோம், பாருங்க! பிள்ளைக்கு வாங்க வேண்டியது இன்னும்.. !”

“பிள்ளை பெத்துட்டா, நெனச்சவுடனே வெளியே கிளம்ப முடியுமா? கூடை நிறைய டயாபர், பால் போத்தல், சுடு தண்ணி எல்லாத்தையுமில்ல கட்டித் தூக்கிட்டுப் போகணும்!”

“ஐயோ! கேக்கறப்போவே பயமா இருக்கு!” என்று சிலிர்த்துக்கொண்டாள் ரஞ்சி.

“இப்பவே எல்லாத்தையும் நல்லா அனுபவிச்சுடு. கைப்பிள்ளை ராத்திரி பூராவும், `நை, நை’ன்னு அழும். என்ன, ஏதுன்னு கண்டு பிடிக்கிறதுக்குள்ளே பொழுது விடிஞ்சுடும்!”

“என்னால் அதெல்லாம் முடியாதுப்பா. நான் படுத்தா, அசந்து தூங்கிடுவேன். அவர்தான் பாத்துக்கணும்”.

“ரொம்ப நல்லா இருக்குடி. யாராவது கேட்டா, சிரிக்கப் போறாங்க!”

“ஏன்? நான் இப்ப பத்து மாசம் சுமக்கல? அவரும்தான் அதுக்கப்புறம் பத்து மாசம் சுமக்கட்டுமே!” லாஜிக் பேசினாள் மகள்.

“அடி போடி! நாங்க எல்லாம் மூணு, நாலு பிள்ளைங்களைப் பெத்து வளத்தோமே, சும்மாவா? அம்மான்னா அப்படித்தான். கடை..சிவரைக்கும்..,” என்று வீறாப்பாக ஏதோ சொல்ல ஆரம்பித்தவளுக்குத் திடீரென்று தொண்டை கம்மியது. “இல்லாட்டி, நான் ஏன் இந்த வயசில ஒங்க வீட்டுக்கு வந்து இப்படி மாடா ஒழைக்கிறேன்! அப்பா கேட்டா.., அப்படியே உருகிடுவாரு. என்னை ராணிமாதிரி வெச்சிருப்பாரு!”

அந்தக் குற்றச்சாட்டைக் கேட்டு ரஞ்சி நொந்து போனாள். “ஏம்மா? நானா எங்களை வேலை வாங்கறேன்? நீங்களே இழுத்துப் போட்டுக்கிட்டு ஏதாவது செஞ்சுட்டு..!”

அவள் வாக்கியத்தை முடிக்க விடவில்லை, அப்போது வேகமாக உள்ளே வந்த வைத்தி. “ரஞ்சி! புறப்படு, புறப்படு!” என்று அவசரப்படுத்தினான்.

தன் காதுகளையே நம்ப முடியாதவளாக, ”எங்கே போறோம்?” என்று கேட்டாள் ரஞ்சி.

“நாளைக்கே பிள்ளை பிறந்துட்டா, இப்படி நெனச்சமாதிரி வெளியே கிளம்ப முடியுமா? அதான் சினிமாவுக்குப் போக ரெண்டு டிக்கட் வாங்கிட்டு வந்திருக்கேன்!”

பாக்கியம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள் .”அவ காலையிலேருந்து வாந்தியும் மயக்கமுமா தலையே நிமிரல. ஓய்வா கொஞ்சம் படுத்திருக்காம, எதுக்கு ஊர் சுத்தணும்?”

அவள் பேசியதையே மருமகன் காதில் வாங்கிக்கொள்ளாததைப் பார்த்து, தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உள்ளே நடந்தாள்.

“ஏங்க? மூணு டிக்கட் வாங்கி இருக்கக்கூடாது? அம்மா நம்பகூட இருக்கிறதை மறந்துட்டீங்களா?”

`நல்லா மறப்பேனே!’என்று எண்ணிய வைத்தியின் முகத்தில் வெற்றிப் புன்னகை. ஆனால், உரக்க, “அது வந்து.., ரஞ்சி, ஒரு மாதிரியான படமாம். பேசிக்கிட்டாங்க. சென்சார் கொஞ்சம் அசந்திருந்தப்போ, ஹி..ஹி.. அப்படியே விட்டுட்டாங்களாம். அதுக்கென்ன! பக்திப் படம் வராமலா போயிடும்! அப்ப எல்லாரும் போகலாம், என்ன?”

உள்ளேயிருந்து மனத்தாங்கலுடன் குரல் வந்தது: “எனக்குப் படம் பாக்கற ஆசையே இல்ல. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க!”

அரை மணி கழித்து, ஏதோ பூங்காவில் இறங்கிய கணவனைப் பார்த்து, எதுவும் புரியாதவளாக ரஞ்சி கேட்டாள்: “எத்தனை மணிக்குப் படம்?”

“படமாவது! அது சும்மா, ஒன்னைத் தனியா வெளியே கிளப்பறதுக்காக!”

“இது ஒங்களுக்கே நல்லாயிருக்கா? நம்ப வீட்டுக்கு வந்து இப்படி மாடா உழைக்கணும்னு அம்மாவுக்கு என்னங்க தலையெழுத்து? அவங்களை வெளியே கூட்டிட்டுப் போக மட்டும்..!”

“அவங்க பக்கத்தில ஒக்காந்திருந்தா, அவங்களைப்பத்தி நாம்ப பேசறது நல்லாவா இருக்கும்?”

ரஞ்சிதம் கண்களைச் சுருக்கிக்கொண்டு அவனையே பார்த்தாள்.

வைத்தி தொண்டையைக் கனைத்துக்கொண்டான், தான் எவ்வளவு கண்டிப்பானவன் என்று காட்டிக்கொள்ள. “நம்ப வீட்டில, ஒண்ணு, நான் இருக்கணும், இல்ல ஒங்கம்மா. இப்பல்லாம் எனக்கு வீட்டுக்கு வர்றதுக்கே பிடிக்கல”.

ரஞ்சிக்கும் கோபம் எழுந்தது. எப்போதோ சினிமாவில் கேட்டிருந்த வசனம் கைகொடுத்தது. “ஓகோ! பிடிக்கலியா? எங்கம்மாவைப் பிடிக்காட்டி, என்னையும் பிடிக்கலேன்னுதான் அர்த்தம்!” என்று பொரிந்தாள்.

வைத்தி அந்தப் படத்தைப் பார்த்திருக்கவில்லை. ஆகவே, பதிலுக்கு, “நீங்க ரெண்டு பேரும் ஓயாம என் மண்டையை உருட்டறது எனக்குத் தெரியும்,” என்று கத்தினான்.

தான் மட்டும் என்ன, சளைத்தவளா! ரஞ்சியும் கத்தினாள்: “ஆமா! ஒங்களைப்பத்திதான் பேசறோம். அம்மாவுக்கு அவங்க கவலை. நீங்கபாட்டில எப்பவும்போல என்னை அடிச்சுக்கிட்டும், பிடிச்சுத் தள்ளிக்கிட்டும் இருந்தா? அதான் எனக்குக் காவலா..!”

அப்போதே அவளை அடித்துத் தள்ள வேண்டும்போல இருந்தது வைத்திக்கு. கைகளிரண்டையும் இறுக மூடினான், வலிக்கும்வரை.. அங்கிருந்தால் ஏதாவது செய்து வைத்துவிடப் போகிறோமே என்று பயந்தவனாக, “போகலாம்! வழியிலே ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம்!” என்றான் சமாதானமாக.

அவளும் இறங்கி வந்தாள். “அம்மா ஏதாவது சமைச்சு வெச்சிருப்பாங்க. வீணாகிடும். அதோட, அவங்களை அவமரியாதை செய்யறமாதிரி..!”

“இவ்வளவு சீக்கிரமா எப்படிப் போறது?”

“எதையோ சொல்லி சமாளிச்சுக்குங்க. மனசில ஒண்ணை வெச்சுக்கிட்டு, வெளியில ஒண்ணு பேச ஒங்களுக்குச் சொல்லியா தரணும்?”

License

படத்துக்குப் போகலாம் Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *