24 நினைத்தது ஒன்று, சொன்னது ஒன்று

தன் அருமை மகள் தன்னை விட்டு, நேற்று வந்த கணவனுடன் போய்விட்டதை பாக்கியத்தால் தாங்கவே முடியவில்லை. புலம்பிக்கொண்டே இருந்தாள்.

அதைத் தாங்க முடியாது, “நீதான் ஒரு நடை போய், அவளைப் பாத்துட்டு வாயேன்!” என்று யோசனை வழங்கினார் மணி.

`அடிக்கடி போகிறாயே!’ என்று கண்டித்தவரே இப்போது போகச் சொன்னது பாக்கியத்துக்கு உற்சாகமாக இருந்தது. தெம்பு்டன், பட்சணங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.

சுடச்சுட அவைகளை ருசி பார்க்க முடியுமே என்ற நப்பாசையுடன், மணியும் கூடமாட ஒத்தாசை செய்தார். அவ்வளவையும் தூக்கிக்கொண்டு போக வசதியாக, தானே ஒரு வாடகைக் காரும் பிடித்து வந்தார்.

ஒன்றன்பின் ஒன்றாக, தாய் அடுக்கி வைத்த எவர்சில்வர் டப்பாக்களைப் பார்த்த ரஞ்சியின் விழி பிதுங்கியது. “என்னம்மா? என்னமோ, வெளியூருக்குப் போறமாதிரி இவ்வளவு!” என்று குதூகலித்தாள்.

“மசக்கைக்காரி, ஒனக்குத்தான்! கொஞ்சம் ரவா உருண்டை, அல்வா..! அப்பாதான் கிளறினாரு, எனக்குத் தோள் வலின்னு!”

“எனக்கு ஸ்வீட்டைப் பாத்தாலே கொமட்டுதும்மா!” என்று கொஞ்சினாள் மகள்.

“அப்போ, பிறக்கப்போற பிள்ளை அதைத்தான் ஆசையா சாப்பிடும்!” என்று அனுமானித்த பாக்கியம், “ஒங்க வீட்டுக்காரர்தான் `பிடிக்காது, பிடிக்காது’ன்னு சொல்லிக்கிட்டே, தின்னு தீத்துடுவாரே! இந்த ஆம்பளைங்களே வேடிக்கை!” என்றாள், பழிப்புக் காட்டியபடி. “இப்ப ஒங்கிட்ட எப்படி இருக்காரு?” என்று விசாரித்தாள்.

கணவன் துணி மடிப்பதும், நாள் தவறாது, சுடுதண்ணிப் போத்தல் நிறைய தேத்தண்ணீர் போட்டு வைப்பதும் நினைவில் எழ, ரஞ்சிதத்தின் முகம் விகசித்துப் போயிற்று. அவள் எதுவும் சொல்லுமுன், வாசலில் வைத்தி வரும் சப்தம் கேட்டது.

“அவரே வந்துட்டாரே! நீங்களே பாருங்களேன்!” என்று துள்ளினாள் மகள்.

தாயோ, மாமியாராய் லட்சணமாய், புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்தியபடி உள்ளே விரைந்தாள்.

ரஞ்சி வெளியே விரைந்து, “அம்மா வந்திருக்காங்க!” என்ன்று அறிவித்தாள், உற்சாகமாக.

வைத்தியின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து, அதன் இடத்தில் கடுமை படர்ந்தது. `என்னை வேவு பாக்க வந்திருக்காளா கிழவி? இருக்கட்டும், இருக்கட்டும், நான் யாருங்கிறதைக் காட்டறேன்!’ என்று தனக்குள் கறுவிக்கொண்டான்.

அவனது எண்ணப்போக்கை முகத்திலிருந்தே புரிந்துகொண்ட ரஞ்சி, அவசரமாக, “இதோ பாத்தீங்களா? அம்மா ஒங்களுக்காக எவ்வளவு பலகாரம் பண்ணிட்டு வந்திருக்காங்க!” என்று நைச்சியம் பண்ணப் பார்த்தாள்.

வைத்தி மேலும் விறைத்துக்கொண்டான். “எனக்கா? எதுக்கு?” வயிற்றைத் தொட்டுக் காட்டினான். “அவங்க மகள் உண்டாயிருக்கா. அவளுக்காக அரும்..மையா பண்ணிட்டு வந்திருக்காங்க!” என்று ஏடாகூடமாகப் பேச ஆரம்பித்தான்.

ரஞ்சி தாழ்ந்த குரலில், “ஒங்களுக்கு இன்னிக்கு வேலை அதிகமா?” என்று விசாரித்தாள்.

“பின்னே? சும்மா ஒக்காந்திருக்கவா எனக்குச் சம்பளம் குடுத்து ஒக்கார வெச்சிருக்காங்க?” என்று தன்னிரக்கத்துடன் பேசிவிட்டு, “எல்லாரும் ஒன்னைமாதிரி இருக்க முடியுமா? மத்தியானம், சாயங்காலம், எப்பப் பாத்தாலும் தூக்கம். ஏதோ, நானா இருக்கத்தொட்டு..! இன்னொருத்தனா இருந்தா, எப்பவோ விவாகரத்து பண்ணி இருப்பான்!” என்று கத்த ஆரம்பித்தான்.

ரஞ்சிக்கு ஏதோ சந்தேகம் பிறந்ந்தது. “ஏதாவது போட்டுட்டு வந்துட்டீங்களா? இப்படி சம்பந்தமில்லாம..!” என்றவளைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான் வைத்தி.

“யாருடி சம்பந்தா சம்பந்தமில்லாம ஒளர்றாங்க? இல்ல, யாரு எதைப் போட்டாங்கன்னு கேக்கறேன். கொஞ்சம் விட்டு வெச்சா, குணத்தைக் காட்டிடுவியே! ஒன்னை மாதிரிப் பொம்பளைங்களை எல்லாம் அப்பப்ப நாலு தட்டு தட்டி வெச்சாத்தான்.. இருக்க வேண்டிய எடத்தில..!”

அவன் விரும்பியது போலவே, உள்ளே இருந்த பாக்கியத்துக்கு அவன் குரல் தெளிவாகக் கேட்டது.

`கொலைகாரப்பாவி! வாயும், வயிறுமா இருக்கிற பொண்ணை என்ன பேச்சுப் பேசறான்! இவளுக்கும்தான் புத்தி வேணாம்? எதுக்காக அவன் பின்னாலேயே ஓடி வந்தா?” மாப்பிள்ளையின் தலையைக் கண்டதுமே தேனிர் தயாரிக்க ஆரம்பித்தவளின் கைகள் நடுங்கின. `எல்லாம் அந்த முருங்கைக்கா செஞ்ச வேலை! இருக்கட்டும், வீட்டுக்குப் போய் அந்தக் கிழவரைக் கவனிச்சுக்கறேன்!’ என்று கறுவிக்கொண்டாள்.

அவளுடைய கோபத்தின் இலக்கு மாறியதில், சற்று அமைதி பிறந்தது. ஹாலுக்கு வந்தாள்.

“அடடே! அத்தை!” என்று ஆச்சரியம் காட்டிய வைத்தி, “நல்லா இருக்கீங்களா?” என்று அளவுக்கு மீறிய கனிவுடன் குசலம் விசாரித்தான். மனைவியின் பக்கம் திரும்பி, “ஏன் ரஞ்சி? அம்மா வந்திருக்காங்கன்னு சொல்லவே இல்லியே!” என்றான் சிநேகபூர்வமாக.

அவளோ, இறுகிய உதடுகளுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“ரஞ்சியைப் பாக்க வந்தீங்களா? அவளுக்கென்ன! ஒரு வேலை செய்ய விடறதில்ல நான்!” அன்புடன் அவள் பக்கம் திரும்பிப் புன்னகைத்தான்.

`அதான் காதுல விழுந்திச்சே!’ என்று மனதுக்குள் வைதாள் பாக்கியம். உரக்க, “அன்னிக்கு நெய்யுருண்டை ஆசையா சாப்பிட்டீங்க! இன்னிக்கு நெறை..ய!”

“ரஞ்சிதான் பாவம்! எண்ணை, நெய்யைப் பாத்தாலே அவளுக்கு குமட்டுது. நானும் அவளைக் கஷ்டப்பட்டுத்தக் கூடாதுன்னு, வர்றப்போவே சப்பாத்தி, புட்டு மாயாம், ஆப்பிள் — இப்படி எதையாவது வாங்கிட்டு வந்திடுவேன்!”

பாக்கியத்தின் வலது கை, பலகாரங்களை ஒவ்வொன்றாக, உடையாமல், கவனமாக அடுக்கி வைத்தது. மனமோ, `பாவி! மகாபாவி! நீ பிறந்தப்போவே நான் காது மட்டுமில்ல, மூக்கும் குத்திக்கிட்டு இருந்தேண்டா!’ என்று ஓலமிட்டது.

“எனக்குத் தெரியும், நீங்க சாப்பாட்டுக்குத் திண்டாடுவீங்கன்னு. அதான் அவங்கப்பாகிட்ட கறாரா சொல்லிட்டு வந்துட்டேன், `ஒரு பத்து நாளைக்கு எப்படியோ பாத்துக்குங்க, நான் ரஞ்சிக்கும், மாப்பிள்ளைக்கும் சமைச்சுப் போட்டுட்டு வரேன்’னு”.

`சே! இதுக்குத்தான் அம்மா இல்லாத பொண்ணா பாத்துக் கட்டியிருக்கணும். இல்லே, அவங்க வெளியூரிலேயாவது இருக்கணும். இந்த மாதிரியா! நெனச்சா வந்து தங்கிடறாங்க. இப்ப நாங்க படத்துக்குப் புறப்பட்டா, தானும் கெளம்பிடுவாங்களே! தியேட்டரில நான் கையைக் கட்டிட்டு ஒக்காந்திருக்கணும்!” வைத்தியின் கை உதிர்ந்துவிட்ட உருண்டையைப் பிசைந்து கொண்டிருந்தது.

“ஒங்களுக்கு விருப்பமில்லாட்டி..,” என்று பாக்கியம் இழுத்தாள். அவளுக்கு உடனே திரும்பும் எண்ணம் கிடையாதுதான். ஆனால், மரியாதையை உத்தேசித்து, அவன் உபசரிப்பான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அவள் நினைத்ததுபோலவே நடந்தது.”அது என்ன அத்தை, அப்படி ஒரு வார்த்தை சொல்லிப்புட்டீங்க! ஒங்களுக்கில்லாத உரிமையா! பத்து நாளென்ன, ஒரு மாசம் தங்குங்க. நானே ரஞ்சிகிட்ட கேட்டுட்டு இருந்தேன், எங்க ஒங்கம்மாவைக் காணும்னு! நீங்க வந்தாத்தான் வாய்க்கு ருசியா சாப்பிட முடியுது!” என்று, தன்னையுமறியாமல் வைத்தி ஒத்துக்கொள்ள, பாக்கியம் பெருமையுடன் உள்ளே போனாள்.

தனித்து விடப்பட்டதும், வைத்தி பின்னந்தலையில் அடித்துக்கொண்டான் `நாளைக்கு மொதல் வேலையா, “முடியாது என்று சொல்வது எப்படி?”ங்கிற புத்தகத்தை வாங்கியாகணும்,” என்று நிச்சயித்துக்கொண்டான்.

`அந்தப் புத்தகம் லட்சக்கணக்கில விக்குதாமே! ஒலகத்தில என்னை மாதிரி இளிச்சவாயனுங்க ரொம்ப பேரு இருக்காங்கபோல!’ என்ற அதிசயமும் உடனே ஏற்பட்டது.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *