41 நாடுகளும், கணவன்மார்களும்

இரவு நெடுநேரம்வரை கிளப்பில் ஏதேதோ விளையாடி, அத்தனையிலும் தோற்றுவிட்டு, வீடு திரும்பியிருந்தான் வைத்தி.

படுக்கையறைக்குள் மனைவியா, மாமியாரா என்று நிச்சயமாகத் தெரியாத நிலையில், அங்கு நுழையும் துணிவில்லை அவனுக்கு. ஹால் சோபாவில் படுத்தவன், மறுநாள் தாமதமாகத்தான் எழுந்தான்.

சாப்பாட்டு மேசையருகே, தலையை ஒரு கையால் தாங்கிப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த ரஞ்சிதம்தான் முதலில் கண்ணில்பட்டாள்.

“நேத்து புதுசு புதுசா சாப்பிட்டது ஒத்துக்கலியா? என்று பரிவுடன் விசாரித்தவனுக்கு, அங்கு நிலவிய நிசப்தம் ஆச்சரியத்தை விளைவித்தது. “அம்மா?” குரல் வெளிவராது, பாவனையில் கேட்டான்.

வருத்தத்துடன் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் ரஞ்சி. “அவங்க ஏன் இன்னும் இங்க இருக்காங்க!”

வைத்தியின் முகத்தில் ஓர் அலாதி ஒளி. “போயிட்டாங்களா?”

அவள் கோபத்துடன் திரும்ப, சமாளிக்க நினைத்து, “இல்ல.., இப்பத்தானே வந்தாங்க, எப்பவும் இவ்வளவு சீக்கிரமா போகமாட்டாங்களேன்னு கேட்டேன்!” என்று ஒரேயடியாக உளற ஆரம்பித்தான்.

“அதுக்குத்தானே நீங்க நல்லவர்மாதிரி வேஷம் போட்டீங்க? `மாட்டேன், மாட்டேன்’னவங்களை வற்புறுத்தி, சாப்பிடக் கூட்டிட்டுப்போனீங்க?”

“இது என்னடா வம்பாப்போச்சு! நீதானே அடிக்கடி, `ஒங்களுக்கு எங்கம்மாமேல பிரியமே இல்ல’ன்னு குறைப்படுவே?” தான், நல்லது என்று நினைத்து ஏதோ செய்யப்போக, அது இப்படி எதிர் விளைவுகளைக் கொண்டுவரும் என்று சற்றும் எதிர்பார்த்திராத வைத்தி, பின்னந்தலையில் அடித்துக்கொண்டான். “வேணும். எனக்கு நல்லா வேணும்!”

ஒரு பெரிய சண்டைக்கு ஆயத்தமாக ரஞ்சி எழுந்து நின்றுகொண்டாள். “அட, ஒரு இட்லி, தோசை.., ஒரு பூரி.. இந்தமாதிரி, அவங்களுக்குப் பழக்கமானது எதையாவது வாங்கிக் குடுத்திருக்கலாமில்ல? அதிசயமா.. நீங்கதானே கைநிறைய சம்பாதிக்கிறீங்க! அந்தப் பெருமையை மாமியார்கிட்டே காட்டிக்க வேணாமா?” ஆத்திரத்துடன் குறுக்கும், நெடுக்கும் நடந்தாள். “மரக்கறி சாப்பாடு எதுக்காக கோழிக்கால் மாதிரி, மச்சம் மாதிரி இருக்கணும்? இல்ல, கேக்கறேன்! பாத்தாலே அம்மாவுக்குக் குமட்டிடுச்சு, பாவம்! ஒடம்பு சரியில்ல. வயசானவங்கவேற! புதுசு புதுசா எதையாவது பழகிக்கறது அவங்களுக்கு முடியாதுதான்!”

வைத்திக்கு அலுப்பாக இருந்தது. “சரி, சரி. நான் செஞ்சது மன்னிக்க முடியாத குத்தம்தான். அதுக்கு எப்படி பரிகாரம் தேடணும்? அதையும் நீயே சொல்லிடு, தாயே! ஒன் காலிலே விழணுமா, இல்ல ஒங்கம்மா காலிலே விழணுமா?”

சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு, இனிமேல் அவளிடமிருந்து எந்த வார்த்தையும் வராது என்று முடிவானதும், “குடிக்க ஏதாவது உண்டா, இல்லே பசியால சாகணும்கிற தண்டனையா எனக்கு?” என்று கேட்டான்.

“இன்னும் ஒண்ணுமே ஆரம்பிக்கலே. காலையிலேயே அம்மா அவசரமாப் போனது.. மனசை என்னமோ..!” முணுமுணுத்தபடி உள்ளே போனாள் ரஞ்சி.

மாமியார் தங்களுடன் இல்லை, இனிமேல் அநாவசியமான குழப்பங்கள் எழாது என்பதே புத்துணர்வை அளிக்க, வைத்தி சமாதானத்தில் இறங்கினான். “வீட்டிலே ஏதாவது அவசர வேலை இருந்திருக்கும். தானே ரெண்டு நாளில வந்துடுவாங்க, பாரேன்!” என்று வாய்தவறிச் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டான். எங்காவது பலித்து வைக்கப்போகிறதே!

“ஐயோ! புரியாம பேசாதீங்க. வீட்டில நிம்மதி இல்லேன்னுதானே இங்க வந்தாங்க!”

`ஒங்கம்மா போற எடத்திலேயெல்லாம்தான் நிம்மதியும் பறிபோயிடுமே! இது என்ன புதுசா?’ வைத்தி முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான், எங்காவது தன் மனதில் ஓடிய எண்ணம் அவளுக்குப் புரிந்துவிடப் போகிறதே என்று.

வருத்தம் மாறாமலேயே ரஞ்சி பேசினாள்: “நேத்து ராத்திரி.. அவ்வளவு செலவழிச்சு அம்மாவை வெளியே கூட்டிட்டுப்போயும், அவங்க திருப்தியா சாப்பிடலியா! ஏதோ ஆத்திரம்! `பட பட’ன்னு நாலு வார்த்தை பேசிட்டேன். இந்தமாதிரி நான் நடந்துக்கிட்டதே இல்ல!” கண்களைப் புறங்கையினால் மூடிக்கொண்டாள்.

`பலே!’ அவளைப் பாராட்டி, முதுகில் தட்டிக்கொடுக்க வேண்டும் போலிருந்தது வைத்திக்கு.

“பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி.. அம்மா எனக்கு எவ்வளவு செஞ்சிருப்பாங்க!” பழைய திரைப்பட வசனம் சமயத்தில் கைகொடுத்தது. “அந்த நன்றிகூட இல்லாம, அவங்களைப்போய் கன்னாபின்னான்னு..!”

“அதுக்கு இப்ப என்ன செய்ய முடியும், ரஞ்சி? பேசறதுக்கு முந்தி யோசிச்சிருக்கணும்!”

“சும்மா இருங்க. ஒங்களை ஒண்ணும் கேக்கல!”

வைத்திக்கு ரஹீம் எப்போதோ அளித்திருந்த போதனை நினைவு வந்தது: ஏதாவது குறையை மனைவி சொல்றப்போ, ஒடனே அதை நிவர்த்தி செய்யற வழியைச் சொல்லக்கூடாது. இந்த உண்மை தெரியாமதான் நிறைய ஆம்பளைங்க குடும்பத்திலே மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. லேடீஸ் பேசறதைச் சும்மா கேட்டுக்கணும். அதுதான் அவங்க எதிர்பாக்கறது!

வைத்தி மீண்டும் நாக்கைக் கடித்துக்கொண்டான். சுரீரென்று எரிந்தது. தான் செய்த தவற்றை எப்படி நிவர்த்தி செய்வது?

ரஞ்சி அவனை நெருங்கினாள். கோபம் மாறியிருந்தாற்போலிருந்தாள். “ஒரு மாறுதலுகாக.., கோயிலுக்குப் போகலாமா?”

வைத்தி மூளையில் இருந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியிருக்க வேண்டும். இல்லாவிட்டால், “பைத்தியக்காரத்தனம்! சாமிகிட்ட புத்தி போட்டுக்கப்போறியா?” என்று கேட்டிருப்பானா?

முகமெல்லாம் சிவக்க, “நீங்க வராட்டி போங்க! எனக்கென்ன வழி தெரியாதா? பஸ்ஸிலே போய்க்கிறேன்,” என்று கத்தினாள்.

வைத்தி சுதாரித்துக்கொண்டான். “சேச்சே! மாசமாவேற இருக்கே! ஒன்னைத் தனியா விடுவேனா! இரு. நானும் குளிச்சுட்டு வரேன். எனக்கு மட்டும் புண்ணியத்திலே பங்கு வேண்டாமா?”

தாற்காலிக இக்கட்டிலிருந்து தப்பிக்க அப்படிச் சொல்லிவிட்டானே தவிர, மனம் என்னமோ ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது.

`கல்யாணம் செய்துகொண்டதால்தானே இப்படி, தனித்தன்மையை இழந்து, எங்கே மனைவி கோபித்துக்கொண்டுவிடுவாளோ என்று ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியிருக்கிறது! அடிமைப்படுத்தப்பட்ட நாடுகள்கூட ஏதோ வழியில் சுதந்திரம் வாங்கி விடலாம். ஆனால், ஒரு கணவன் இழந்த சுதந்தரம் போனது போனதுதான்!’

பலவும் எண்ணிக் குமைந்தவன், எதிரே வந்த காரைத் தவிர்க்க பக்கவாட்டில் ஒரேயடியாக வளைக்க, அவனுடன் சேர்ந்து வாகனமும், மனைவியும் தெருவில் விழுந்தார்கள்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *