18 நண்பனின் உபதேசம்

“ரஞ்சி! கோப்பி!” படுக்கையிலிருந்து குரல் கொடுத்தபின்தான் வைத்திக்கு ஞாபகம் வந்தது, தன்னை அனாதையாக விட்டுவிட்டு, மனைவி பிறந்தகம் போய் சொகுசாக இருக்கிறாள் என்ற உண்மை.

துக்கம் தாளாது, இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்தான். தலையை மூடிக்கொண்டால் மட்டும் பசி அடங்கிவிடுமா என்ற ஞானோதயம் எழ, சிறிது பொறுத்து `ஃபூட் கோர்ட்’டை அடைந்தான்.

ஒரு பெரிய வளாகத்துள் நீண்ட வராந்தா. அதில், அலுமினியம் பூசப்பட்டு, வெள்ளியாகவே மின்னும் பிளாஸ்டிக் நாற்காலி மேசைகள். சின்னச் சின்னதாக பத்துப் பதினைந்து கடைகள். சண்டை பூசலுக்கு இடமில்லாது, ஒவ்வொன்றிலும் கிடைக்கும் சாதம், ரொட்டி சனாய், மீ வகைகள், கறி, சூப், சூடான பானங்கள், பழச்சாறு வகைகள் என்று விதவிதமாக தத்தம் கடைகளுக்குமேல் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

பலவித உணவுப் பண்டங்களின் வாசனையைப் பறைசாற்றும் புகை, வெளியே குழந்தைகளுக்காக வண்ண வண்ண சறுக்கு மரங்கள் இத்தியாதிகளுடன், பசி இல்லாதவரையும் உள்ளே ஈர்ப்பதாக இருந்தது அவ்விடம்.

வைத்தியோ, காலை வேளையிலேயே, அதுவும் விடுமுறை நாளில், இப்படிப் பணம் கொடுத்து சாப்பிட வேண்டியிருக்கிறதே என்ற விரக்தியிலிருந்தான்.

“மாமாக்! . நாலு ரொட்டி புங்குஸ் (மலாயில் bungkus என்றால் பார்சல்)!” பழக்கமான குரல் கேட்க, வைத்தி திரும்பினான். (இந்திய முஸ்லிம்களை `மாமாக்’ என்றுதான் அழைப்பார்கள், மலேசியாவில்).

“ரஹீம்!” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.

முன்பு அவனுடன் ஒரே அறையில் குடியிருந்த நண்பன். நாலைந்து வயது பெரியவனாக இருப்பான். இரு சகோதரிகள் `நாம் எப்போதும் பிரியவே கூடாது!’ என்று சிறு வயதிலேயே சத்தியம் செய்துகொண்டதில், ரஹீமுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

“அட! வைத்தியா? எங்க இப்படி?”

“இனிமே எப்பவும் இப்படித்தான்!” என்றான் வைத்தி, அழமாட்டாக் குறையாக.

வாய்விட்டுச் சிரித்தான் நண்பன். “ஒங்கூட சண்டை போட்டுக்கிட்டு, வீட்டில அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்களாக்கும்!” என்று கேட்டான் அந்த அனுபவஸ்தன். பதிலுக்குக் காத்திராமல், “மாமாக்! இங்க சாப்பிட ரெண்டு ரொட்டி!” என்று கூவினான்.

வைத்தியின் அருகே உட்கார்ந்துகொண்டான் ரஹீம். சமாசாரம் இவ்வளவு சுவாரசியமாகப் போகும்போது, வீடு திரும்ப என்ன அவசரம்! “மொதல் தடவையா அவங்களை விட்டுப் பிரிஞ்சு இருக்கியாக்கும்!” என்று நிலைமையை ஊகித்தான்.

“ம்! ஒரு நாள்கூட நான் அவளை விட்டுப் பிரிஞ்சதில்லே!” வருத்தம் தாங்காது, வைத்தி தலையைக் குனிந்துகொண்டான்.

“அதாவது.., ஒரு ராத்திரிகூட..!” விஷமமாகக் கண்ணைச் சிமிட்டினான் தோழன்.

`வீணாப்போனவன்! பேசறதைப் பாரு! ரெண்டு கட்டியும், ஆசை அடங்கலே!’ என்று மனத்துள் திட்டிக்கொண்டான் வைத்தி. `நாம்ப ஒண்ணையே சமாளிக்க முடியாம திண்டாடறோம், இவன் எப்படி ரெண்டு பெண்டாட்டியைச் சமாளிக்கிறான்!’ என்ற வியப்பும் ஒருங்கே எழ, நண்பன்மேல் மதிப்பு கூடியது.

ரொட்டி சனாயை மீன் குழம்பில் நன்றாகப் புரட்டி, வாயில் திணித்துக்கொண்ட ரஹீம், “எத்தனை நாழாச்சு அவங்க ஒன்னை விட்டுப்போய்?” என்று துக்கம் விசாரித்தான்.

கைகடிகாரத்தைப் பார்த்தபடி வைத்தி யோசித்தான். “ம்..இப்போ என்ன, மணி ஒன்பதரையா? அது ஆச்சு, ஒரு மாசம், ரெண்டு நாள், ரெண்டு மணி, நாப்பத்து மூணு..”

அதற்குமேலும் பொறுக்க முடியாது, வாயிலிருந்ததை அவசரமாக விழுங்கினான் ரஹீம். “நிறுத்துடா. நாம்ப என்ன, ராக்கெட்டா விடப்போறோம்? என்ன ஆச்சு? அதைச் சொல்லு மொதல்ல. அப்புறம் ஏதாவது வழி பண்ணலாம்!”

“நான் ஒண்ணுமே செய்யல!”

துப்பு துலக்கிவிட்ட உற்சாகத்துடன், “அதானே பாத்தேன்!” என்று தொடையைத் தட்டிக்கொண்டான் ரஹீம்.

“சீ! அதைச் சொல்லல. நீ இருக்கியே!” போலி அருவருப்புடன் தோளைக் குலுக்கினான். “நடந்ததில என் தப்பு எதுவுமே இல்லன்னு சொல்ல வந்தா..!”

வைத்தியின் மறுப்பையும், தாக்குதலையும் அலட்சியப்படுத்திவிட்டு, அவனையே உற்றுப் பார்த்தான் நண்பன். “இதோ பாரு, வைத்தி! கல்யாணம் செய்துகிட்டா மட்டும் போதாது. அதுக்குன்னு சில விதிமுறைங்க இருக்கு. அது தெரியாம..!” என்று அலுத்துக்கொண்டான்.

வைத்தியின் விழிகள் மேலும் பெரிதாகின.

“கேளு! மனைவியோட சண்டை போட்டா, ஒடனே போய் அவங்ககிட்ட பேசிடக்கூடாது,” என்று முதல் பொன்மொழியை உதிர்த்தான்.

வைத்திக்கு அவநம்பிக்கை பிறந்தது. “இதயமே வெடிச்சுடற மாதிரி இருந்தாக்கூடவா?”

“இதயம் என்ன, கண்ணாடியிலேயா பொருத்தி வெச்சிருக்கு? கேளேன், எங்க தாத்தா ஒருத்தர். பாக்கறதுக்கு ஒன்னைவிட மோசமா இருப்பார். அவர் போறப்போ தொண்ணுறு வயசு!” என்று பேசிக்கொண்டு போனவனுக்கு, சட்டென விஷயம் புரிந்தது. “நீ டி.வியில விளையாட்டுதான் பாப்பேன்னு அடம் பிடிச்சியா?”

குருவைப் பார்ப்பதுபோல், பரவசத்துடன் நண்பனைப் பார்த்தான் வைத்தி. “அது எப்படி ரஹீம், கூட இருந்த பார்த்தமாதிரி..!” என்று வாயைப் பிளந்தான்.

அலட்சியமாகக் கையை வீசிய ரஹீம், “வீட்டுக்கு வீடு வாசப்படி! ஒரு தடவை பாரு, எனக்கு வந்த கோபத்தில, ஒரு சின்ன டி.வி வாங்கி, என் படுக்கை அறையில வெச்சுக்கிட்டேன்!” என்று ஏதோ சொல்லிக்கொண்டு போன நண்பனை மகிழ்ச்சியுடன் இடைமறித்தான் வைத்தி. “இது எனக்குத் தோணாம போச்சே! கொஞ்சம் செலவானாலும், இப்படி சாப்பாட்டுக்குத் திண்டாட வேண்டாம், பாரு!”

காதில் வாங்காது தொடர்ந்தான் ரஹீம். “பெரிசில பிள்ளைங்க, மெய்ட் எல்லாரும் படம் பாப்பாங்க. ஒரே சத்தமா இருக்குமில்ல? என் மனைவியும் உள்ள வந்துடுவாங்க!”

வைத்திக்கு ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. “ஓ! ஒண்ணா ஃபுட் பால் பாப்பீங்களா?”

ரஹீம் தலையில் அடித்துக்கொண்டான். “யாருடா இவன்! அதைப் பாத்தா, சண்டை போடற மூட் இல்ல வரும்! வீடியோவில தமிழ், இல்ல ஹிந்திப் படமா போட்டுப் பாப்போம். நாலு அழகான பொண்ணுங்களைப் பாத்தா..!” கண்ணைச் சிமிட்டினான்.

வைத்தி குழம்பினான். “ஹீரோவுமில்ல இருப்பான்? அந்த தடியனைப் பாத்து, என்னோட ரஞ்சி ரசிச்சா?”

`நீ இருக்கிற லட்சணத்துக்கு, எவனைப் பாத்தாலும் ரசிக்கத்தான் தோணும்!’ என்று நினைத்துக்கொண்டான் ரஹீம். “ஏண்டா? இதெல்லாம் ஒரு கேள்வியா? ஒன் பங்குக்கு, நீயும் காதாநாயகியை `ஆகா, ஓகோ’ன்னு புகழ வேண்டியதுதான்!” என்று ஐடியா தந்தான்.

“அதுக்குமில்ல சண்டை வருது!”

இப்போது தனது நிலைமை குறித்து ரஹீமுக்குப் பெருமிதம் ஏற்பட்டது. “என் மனைவி ரொம்ப விவரம் தெரிஞ்சவங்க. எந்தப் பொண்ணை வேணுமானாலும் நான் புகழலாம் — அவ எட்டாத தூரத்தில இருக்கிறவரைக்கும். சில சமயம் பாரு, ஆபீசுக்கே ஃபோன் போட்டு, `இன்னிக்கு ஆஸ்ட்ரோவில ஹன்சிகா படம்! மறந்துடாதீங்க,’ ன்னு ஞாபகப்படுத்துவா!”

தனக்கு இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் வாய்க்கவில்லையே என்ற ஏக்கம் தொண்டையை அடைக்க, எதிரிலிருந்ததை சாப்பிடாது, ஏக்கமாக உட்கார்ந்திருந்தான் வைத்தி.

`சரியான அழுமூஞ்சி! இவனோட யார் இருக்க முடியும்!’ நண்பனுக்கு அலுப்பாக இருந்தது. “நான் சொன்னதை எல்லாம் நல்லா காதில வாங்கிக்கிட்டே, இல்லியா?” என்றபடி எழுந்தான்.

வைத்தி தலைநிமிர்ந்தான். “செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேக்கணும்கிறே!” என்றான், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு.

ரஹீம் மீண்டும் உட்கார்ந்தான். “இதோ பாரு, வைத்தி! காதல் விவகாரத்திலே தப்பு, சரி எல்லாம் பாக்கக்கூடாது. பொம்பளைங்க வழிக்கு வரணும். அதான் முக்கியம்,” என்று உபதேசித்தவன், “ம்! மன்னிப்பு கேட்டியா! அடுத்தது — ரொம்ப வருத்தமா காட்டிக்க,” என்று பாடத்தைத் தொடர்ந்தான்.

“இப்போ மட்டும்?”

துணிக்கு அளவெடுக்கும் தையல்காரர்போல் வைத்தியை மேலும் கீழும் பார்த்தான் ரஹீம். “ஊகும். இது போதாது. இன்னும் கொஞ்சம் கூன் போடலாம்,” என்று சினிமா இயக்குனராகவே மாறியவன், “ஒனக்கு இருமல் வருமில்ல?” என்று சம்பந்தமில்லாது ஏதோ விசாரிக்கப்போக, வைத்தி ஆக்ரோஷமாக, “பேசப்படாது. நாலு வருஷமா, தினமும் காலையில ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு, சுடுதண்ணி விட்டு, கொஞ்சம் உப்பையும் கலந்து குடிக்கிறேன்,” என்று தெரிவித்துவிட்டு, “எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தாங்க!” என்று பெருமையுடன் சேர்த்துக்கொண்டான்.

“அடப்பாவி! இது ஒடம்பு எளைக்கப் பண்ணற வைத்தியம்! ஒனக்கெதுக்குடா?” என்று அதிர்ந்த ரஹீம், “சரி. சரி. கொஞ்ச நாளைக்கு இந்தக் கண்ராவியை நிறுத்தி வை. அப்புறம்..,” மீண்டும் கண்களால் அளந்தான். “லேசா தாடி வளக்கலாம். என்ன, நான் சொல்றது விளங்குதா? ஒன்னைப் பாத்தா, அப்படியே அவங்களோட தாய்மை உணர்ச்சி பொங்கணும்!”

“அருவருப்புப்பட்டு ஓடிட்டா?”

“சேச்சே! ஒன்னைக் கல்யாணமே பண்ணிக்கிட்டு இருக்காங்க!”

“நீ சொல்றது பலிக்காட்டி?”

“நோ ப்ராப்ளம்! வேற யோசனை தந்துட்டுப்போறேன்!”

கனவுகள் நிறைந்த மனத்துடனும், காலி வயிற்றுடனும் வைத்தி அங்கிருந்து அகன்றான்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *