13 திரும்பத் திரும்ப

தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டன. வைத்தியின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரஞ்சிக்கு ஏமாற்றமாக இருந்தது. தான் எவ்வளவு அழகாக அலங்கரித்துக்கொண்டு, வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம்! இந்த மனிதர் இப்படி..!

அந்த சமயத்தில் ஸ்கூட்டர் ஒலி கேட்க, வாசலுக்கு விரைந்தாள்.

“யாருன்னு கேக்காமலேயே கதவைத் திறக்கறியே! திருடனா இருந்து வெச்சா?” என்ற வைத்தியின் சிடுசிடுப்பு அவளைப் பாதிக்கவில்லை. அவன் வெறுங்கையை வீசிக்கொண்டு வந்ததுதான் கண்ணை உறுத்தியது. ஒரு வேளை, வேலை மும்முரத்தில் தான் காலையில் சொன்னதை மறந்துவிட்டாரோ?

எதற்கும் இன்னும் ஒரு முறை நினைவு படுத்திவிடலாம் என்ற நப்பாசையுடன், “ஏங்க! இன்னிக்கு நான் எப்படி இருக்கேன்?” என்று கேட்டாள், ஒரு மயக்கும் பார்வையுடன்.

“ம்?” அசுவாரசியமாக அவளைப் பார்த்தவன், “காலையிலதானே பாத்தேன்! அதுக்குள்ளே ஜாடை மாறிடுமா?” என்றவன், “பவுடரைக் கொஞ்சம் குறைக்கலாம்,” என்று ஆலோசனை வழங்கினான்.

“என்னது?” ரஞ்சி உறுமினாள்.

வைத்தி சட்டெனப் பேச்சை மாற்றினான். “அடடே! மறந்துட்டேனே! ஒரு சாமான் வாங்கிட்டு வந்தேன். உள்ளே எடுத்துட்டு வர மறந்துட்டேன், பாரு!”

“நான் போய் எடுத்திட்டு வரேன்! நீங்க இருங்க!” மகிழ்ச்சி தாங்காது, வெளியே ஓடினாள்.

ஒரு பெரிய பிளாஸ்டிக் பையுடன் திரும்பி வந்தவளிடம், “அதை இங்க கொண்டா!” என்று கையை நீட்டினான் வைத்தி.

“ஊகும்!” ஒரு செல்லச் சிணுங்கலுடன் பையைத் திறந்தவளுக்கு குழப்பம் ஏற்பட்டது. எதற்கு ஒரே மாதிரியான இரண்டு சட்டைகள், அதுவும் ஆண்கள் அணிவது?

“நம்ப கல்யாணத்தன்னைக்கு, ஒங்க வீட்டில எனக்குப் புது சட்டை, வேஷ்டி எல்லாம் எடுத்தாங்க இல்ல? அதான், ஒன் சார்பில எனக்கு நானே வாங்கிட்டு வந்துட்டேன்!” ஒரேயடியாக இளித்தான் வைத்தி.

ரஞ்சியும் சிரிக்க முயன்று தோல்வியுற்றாள்.

“இப்ப விலைவாசி ரொம்ப அதிகரிச்சுப் போச்சா? வியாபாரமே கிடையாது,”என்றான் வைத்தி. “கடையெல்லாம் மூடறாங்க!”

அதற்கு மேலும் எரிச்சசலை அடக்கிக்கொள்ள முடியவில்லை ரஞ்சியால். “அதுக்கு நீங்க ஏன் இப்படி பூரிச்சுப்போறீங்க?”

“பின்னே? அம்பது வெள்ளி வித்ததெல்லாம் இப்போ இருபது! த்சொ! த்சொ! தொட்டுப்பாரேன்!”

“என் கையிலதானே பிடிச்சுக்கிட்டு இருக்கேன்! அப்புறம் என்ன தொட்டுப்பாக்கறது!” என்று வள்ளென்று விழுந்த ரஞ்சி, “ஆமா? அது என்ன, ஒரே மாதிரி ரெண்டு சட்டை வாங்கி இருக்கீங்க?” என்று கேட்டேவிட்டாள்.

“மலிவாக் கிடைக்குதேன்னுதான்! எப்பவுமே, எனக்குப் பிடிச்சா, ரெண்டு, மூணா வாங்கிடுவேன்!” என்று விளக்கியவன், “மூணு வாங்கினா, ஒண்ணு இனாம்னு போட்டிருந்தாங்க. என் துரதிர்ஷ்டம், கையில காசில்ல,” என்று வருத்தப்பட்டான்.

அவனுடைய உற்சாகம் அவளையும் தொற்றிக்கொள்ளவில்லை என்பது புரிய, “பையை நல்லாப் பாரு!” என்று புதிர் போட்டான்.

அவள் கையில் கிடைத்தது ஒரு புடவை.

“எப்படி?” அவன் குரலில் பெருமிதம். புதுப் புடவையை உடனே கட்டிக்கொண்டு தன் காலில் விழுவாள், `தீர்க்க சுமங்கலி பவ!’ என்று ஆசீர்வதித்து, தனது ஆயுளைக் கூட்டிக்கொள்ளலாம் என்று மனம் கணக்குப்போட்டது.

ஆனால், பதிலுக்கு, “கேக்கணுமா? ஒங்க செலக்ஷனில்ல!” என்றபடி, அவள் விறைப்பாக அறைக்குள் சென்றது ஏனென்று வைத்திக்குப் புரியத்தான் இல்லை.

அவன் மண்டையை உடைத்துக்கொண்டிருந்தபோதே, ரஞ்சி திரும்பி வந்தாள் — இரு கரங்களிலும் ஒரே மாதிரியான புடவைகளுடன்.

“தவறுதலா, ரெண்டு வெச்சுட்டாங்களா கடையில?” ஸ்ருதி இறங்கிப் போய் கேட்கையிலேயே, தான் எங்கோ குழறுபடி செய்துவிட்டோம் என்றவரையில் அவனுக்குப் புரிந்தது.

“இது இன்னிக்கு வாங்கினது, இன்னொண்ணு, என்னோட பிறந்தநாள் பரிசா போன மாசம் நீங்க வாங்கிக் குடுத்தது”.

“எனக்கென்னவோ, இந்தப் புடவையைக் கையில எடுத்ததுமே, இதில ஒன்னைப் பாக்கறமாதிரி இருந்திச்சு. பழைய ஃபாஷனா, மலிவு வேற!” என்று உளற ஆரம்பித்தவன், அவளுடைய ஏமாற்றத்தைக் கவனித்தான். தான் இப்போது மன்னிப்பு கேட்டால், செய்த தவற்றை ஒப்புக்கொள்வதுபோல் ஆகிவிடாதா! வீரமாக நடக்க உத்தேசித்தவனாக, “ஏதுடா! ஒருத்தன் நினை..வா, `வாங்கின இன்னிக்கே சம்பளமெல்லாம் காலி ஆகுதே!’ன்னுகூட யோசிக்காம, நமக்கு ஒரு சாமான் வாங்கிட்டு வந்திருக்கானேங்கிற நன்றிகூட சிலதுங்களுக்கு இருக்கறதில்ல, சே!” என்று பொதுப்படையாகத் திட்டினான்.

எதிர்பார்த்ததுபோல், அவள் பதிலுக்கு இரையவோ, பேசவோ செய்யாது இருந்தது அவனுக்கு ஆத்திரமூட்டியது. “ம்! அப்பவே எங்க பாட்டி சொன்னாங்க..!” என்று ஆரம்பித்தான்.

இந்த யுக்தி பலித்தது. வெடுக்கென தலைநிமிர்ந்தாள் ரஞ்சி.

அவளைக் கவனியாததுபோல, வைத்தி தனது குரலை மாற்றிப் பேசிக்கொண்டே போனான்: “வைத்திநாதா! இவங்க குடும்பத்தில தாத்தா ஒருத்தர் யானைக்கால் வந்து செத்துப்போயிட்டாராம். ஒனக்கு வேண்டாண்டா இந்தப் பொண்ணுன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டாங்க. கேக்காம போனது என் தப்பு!”

ரஞ்சி மட்டும் என்ன, சளைத்தவளா! “எங்கம்மாகூடத்தான் சொன்னாங்க, `இந்தப் பையனைப் பாத்தாலே எலும்பா இருக்காரு. டி.பியோ, வேற என்ன இழவு வியாதியோ! எதுக்கும் ரெண்டு, மூணு ஜோசியர்கிட்ட ஜாதகத்தைக் காட்டிடலாம்’ அப்படின்னு!”

`அந்தக் குண்டுக் கிழவி இனிமே இங்க வரட்டும், பேசிக்கிறேன்!’ என்று உள்ளுக்குள் கறுவியபடி, “ஏன்? காட்டி இருக்கிறதுதானே?” என்று வீறாப்பாகக் கேட்டான் வைத்தி.

“பின்னே? விடுவோமா? ஒருத்தர் சொன்னாரு, `இந்த ஜாதகப் பலன்படி, ஆறு மாசத்துக்குள்ள ஒரு சாவு வரும்’னு! பலிச்சுடுச்சே! எங்க பாட்டி..!” துக்கத்தை வரவழைத்துக்கொண்டாள். “நம்ப கல்யாணமாகி, ஒரே மாசத்தில..!”

அலட்சியமாகக் கையை வீசினான் வைத்தி. “ஒங்க பாட்டிக்கு அப்போ எண்பத்தி எட்டு வயசு! கை, கால் விளங்காம, எத்தனையோ வருஷமா படுத்த படுக்கையா, எல்லாருக்கும் பாரமா இருந்தவங்க! ஏதோ, நான் ஒங்க வீட்டுக்கு வந்த நல்ல நேரம்..!”

ரஞ்சி வெறுப்புடன் அவனை ஒரு பார்வை பார்த்தாள். “ஒங்களுக்குத் துளிக்கூட..!” முகத்தைத் திருப்பிக்கொண்டாள். “சே! எங்க பாட்டி மட்டும் ஒங்க பக்கம் பேசாம இருந்திருந்தா, இந்தக் கல்யாணமே நடந்திருக்காது, தெரியுமா?”

வைத்தி முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு முணுமுணுத்தான்: `வயசான காலத்தில வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம..!’

“என்னது?”

“இல்ல.. என்ன சொன்னாங்க ஒங்க பாட்டின்னு கேட்டேன்”.

“இந்தப் பையன் அசடுமாதிரி இருக்கிறதால யோசிக்காதீங்க. நம்ப பொண்ணைப் பாத்து அவன் முழிக்கிற முழியைப் பாத்தீங்களா? அவளே கதின்னு, தாசானுதாசனா.. அவ காலடியில கிடப்பான்னு..!”

“நான்! ஒன் காலடியில! நெனச்சிட்டிரு!” வைத்தி ஓங்கரமிட்டுச் சிரித்தான். “நான் விரும்பினா, ஒன்னைக் காலில போட்டு மிதிப்பேண்டி. ஏன்னா, நான் ஆம்பளை!”

அவனுக்கு அந்த கஷ்டமெல்லாம் வைக்காது, உள்ளே போய் கதவைத்   தாழிட்டுக்கொண்டாள் ரஞ்சி.

அடுத்து என்ன செய்வது என்று புரியாது விழித்த வைத்தியின் கண்களில் தரையில் அலங்கோலமாகக் கிடந்த புதிய துணிகள் பட்டன. `ம்! நல்லவனுக்குக் காலமில்ல!’ சுயபச்சாதாபம் எழுந்தபோதே, அவளை வசப்படுத்த என்ன வழி என்ற யோசனை வந்தது. வேகமாகப் போய், படுக்கையறைக் கதவைத் தட்டினான்.

“என்ன?” உள்ளே இருந்து வந்த குரல் அதிகாரமாகக் கேட்டது.

“தூங்கணும்”.

“அதான் சோஃபா இருக்கே! படுத்துக்கறது!”

“எனக்கென்ன தலையெழுத்தா? சட்டப்படி, அந்தக் கட்டிலிலே பாதி எடம் என்னோடது!”

சிறிது காத்திருந்து பார்த்துவிட்டு, அவள் வருகிறமாதிரி தெரியாததால், கதவை ஓர் உதை விட்டான்.

ரஞ்சியின் புண்பட்ட குரல் ஒலித்தது. “யாரும் கதவை ஒடைக்க வேணாம்!”

அவனைப் பாராமலேயே கதவைத் திறந்துவிட்டு, சுவற்றுப் பக்கமாகத் திரும்பி மனைவி படுத்துக்கொண்டது வைத்தியின் ஆண்மையை உசுப்பிவிட்டது. கட்டிலின்மேல் ஏறப்போனவன், அதையும் ஓங்கி ஓர் உதை விட்டான். பலத்த சப்தம் கேட்டது.

அந்த இருளில் இரு ரகசியக் குரல்கள் மட்டும் கேட்டன.

“பலம்..மா அடி பட்டுடுச்சா?”

“நல்லவேளை, மெத்து மெத்துனு ஒன்மேல விழுந்தேன். இல்லாட்டி, இந்த எலும்பு மனுஷனோட ஒடம்பில ரெண்டு மூணு எலும்பு ஒடைஞ்சிருக்கும்!”

“நீங்க ஒண்ணும் அப்படி இல்ல. நான் சும்மா சொன்னேன்!”

“நானும்தான். எந்த தாத்தா எப்படிப் போயிருந்தா நமக்கென்ன! நாம்ப, கொறைஞ்சது, அப்பா, அம்மாகூட ஆகலியே! மொதல்ல அதுக்கு ஒரு வழி பண்ணலாம். எப்படி நம்ப ஐடியா?”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *