40 சொந்த வீடே சொர்க்கலோகம்

“சரியான அலைச்சல்! தலை சுத்துது!” முணுமுணுத்தபடியே பாக்கியம் வீட்டுள் நுழைந்தாள்.

அவள் பின்னாலேயே வந்த ரஞ்சிதம் கதவை ஓங்கியடித்துத் தாழிட்டாள்.

“அவர் இன்னும் உள்ளே வரலியே!”

“அவர் ஏன் வர்றார்? வெளியே போயிட்டார்!”

அதிர்ச்சியும், களைப்பும் ஒன்றுசேர, பாக்கியம் சோபாவில் விழுந்தாள். “இதென்னடி அநியாயம்! நானும் பாக்கறேன், நான் எப்ப வர்றபோதும் ராத்திரி வேளையில இப்படித்தான் நடக்குது! அப்படி எங்கதான் போவாரு?”என்றவள், தாங்கமுடியாது, “சீச்சீ!” என்று உடலைச் சிலிர்த்துக்கொண்டாள்.

“எல்லாம் ஒங்க தப்புதாம்மா!” வழக்கத்துக்கு விரோதமாக மகள் அவளைத் தாக்கவும், பாக்கியத்தின் வாய் பிளந்தது.

“எவ்வளவு ஆசையா ஒங்களைச் சாப்பிடக் கூட்டிட்டுப் போனாரு! பில் மட்டும் எவ்வளவு வந்திச்சு, தெரியுமா? அதுக்கு அழுத காசில நான் ரெண்டு நல்ல புடவை எடுத்திருப்பேன்!”

தான், `வேண்டாம், வேண்டாம்’ என்று கதறக் கதற, இழுத்துக்கொண்டு போகாத குறையாக அழைத்துப்போய்விட்டு, இப்போது பழியைத் தன்மேலேயே சுமத்துகிறார்களே!

ரஞ்சிக்கு அப்படியும் மனம் ஆறவில்லை. தொடர்ந்தாள். “ஒவ்வொரு தடவை நீங்க இங்க வர்றபோதும், எனக்கு ஒடம்பு முடியாம போய், நீங்க சமைக்கும்படியா ஆகிடுது. பரிதாபப்பட்டு, டாக்சி பிடிச்சு கூட்டிட்டுப் போனார். நீங்க என்னமோ..!”

எங்கோ பார்த்தபடி, பாக்கியம் முனகினாள்: “இப்படி.. மொதல்லே ஒரு வார்த்தை சொல்லாம வெளியே கூட்டிட்டுப் போனா, எனக்கென்னமோ பிடிக்கிறதேயில்ல!”

“இதுக்கெல்லாம்கூட ஒரு மாச நோட்டீஸா குடுப்பாங்க? யார்கூடவும் ஒத்துப்போக முடியாம, ஏன்தான் இப்படி இருப்பீங்களோ!”

மகள் சொல்வது உண்மைதான் என்றாலும், `இவள் என்ன சொல்வது?’ என்று பாக்கியம் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டாள்.

“வீட்டில.. அப்பாவோட மனஸ்தாபம்! ஏதோ, வந்த எடத்திலேயாவது அனுசரிச்சுப் போகலாமில்ல? நான்தான் ஒங்க மக. அவருக்கு என்ன தலையெழுத்து, ஒங்களைப் பொறுத்துப்போகணும்னு?” என்று தாக்கியவள், “இந்தவரைக்கும், ஆத்திரத்தை ஒங்கமேல காட்டாம, வெளியே போயிட்டாரேன்னு சந்தோஷப்பட்டுக்குங்க,” என்று முணுமுணுப்பில் முடித்தாள்.

“நான் என்ன செய்துட்டேன் அப்படி? பணத்தோட அருமை தெரியாம, வாரி இறைக்கறீங்க! கொஞ்சம் புத்தி சொன்னா..!”

ரஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்டாள். “நீங்க எப்ப வந்தாலும், இப்படித்தான் — கண்டிப்பா எங்களுக்குள்ளே ஏதாவது சண்டை நடந்தாகணும். மத்த சமயத்திலே.. சொன்னா நம்ப மாட்டீங்க, அவ்வளவு அருமையா இருப்பாரு!”

பாக்கியம் நொந்தே போனாள். “என்னால ஏன் மத்தவங்களுக்கு கஷ்டம்? நான் இப்பவே எங்க வீட்டுக்குப் போயிடறேன். அங்க என்னை, `சீ’ன்னு ஒருத்தர், ஒரு வார்த்தை, சொல்ல மாட்டாங்க!” விருக்கென்று உள்ளே போனவள், `எனக்கென்ன தலையெழுத்து, இப்படி பெரியவங்க, சின்னவங்க இல்லாம, எல்லார்கிட்டேயும் மரியாதைகெட்டத்தனமா பேசறவங்ககிட்டே எல்லாம் பேச்சு வாங்கிக் கட்டிக்கணும்னு!’ என்று பிரலாபித்துக்கொண்டே இருந்தாள்.

அப்படியே படுக்கையின்மேல் உட்கார்ந்துகொண்டவள், தன்னிரக்கத்துடன் ஒரே இடத்தை வெறித்தாள்.

சிறிது பொறுத்து, ரஞ்சியின் குரல் கேட்டது: “அம்மா! நீங்க ஒண்ணுமே சாப்பிடலியே! தயிர், ஊறுகாய் எல்லாம் இருக்கு!”

“ஒண்ணும் வேணாம், போ!”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *