37 சின்ன வீடு

தாயின் எதிர்பாராத வருகையால் அகமகிழ்ந்து போனாள் ரஞ்சிதம்.

ஆனால், வந்ததிலிருந்து எதுவும் பேசாது, தலையில் கைவைத்தபடி ஒரே இடத்தில் அமர்ந்து, வெறித்தபடி இருந்தவளைக் கண்டு கலக்கம் பிறந்தது.

“ஏம்மா ஒருமாதிரி இருக்கீங்க? அப்பாவுக்கு ஏதும்..?” என்று நாசூக்காகக் கேட்டாள்.

பாக்கியம் ஆத்திரத்துடன் தலைநிமிர்த்தினாள். “ஒங்கப்பாவுக்கு என்ன! புது மாப்பிள்ளை கணக்கா இருக்காரு! கலர் கலரா, கண்ணைக் குத்தறமாதிரி சட்டைங்க, அதில செண்டு — அதொட நாத்தம் ஆளையே தூக்கிடும். பத்தாத குறைக்கு..!”

“அப்பாவா!” நம்பமுடிஆதி கேட்டாள் மகள். “நான் சின்னப்பொண்ணா இருந்தப்போகூட அப்பா செண்டு போட்டுக்கிட்டதா நெனப்பு இல்லியே!”

“அப்பல்லாம் அவர் போடலைடீ. அப்போ என்னை மயக்கி என்ன ஆகணும்!” பொருமினாள் பாக்கியம். “அவரை விட்டா, இனிமே வேற கதி இல்லேன்னு இப்போ அவர் ஆடற ஆட்டம்! மிச்சம் இருக்கிற நாலு முடியை இவர் சீவறது இருக்கே! எப்போ அந்த முடியும் கையோட வந்துடப் போகுதோ!”

“அப்பாவுக்கு அப்படி என்னம்மா ஆயிடுச்சு?”

மேலே எதுவும் பேச இயலாது, அவளையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள் பாக்கியம். பின், தலையை அதீதமாகக் குனிந்துகொண்டு, “வேற ஒரு பொம்பளையோட.!” என்று இழுத்தாள்.

பரம சாதுவான அப்பா! அம்மாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் அப்பா! அவரைப்போய் கன்னாபின்னாவென்று..! ரஞ்சிக்கு எரிச்சல் வந்தது. ”போங்கம்மா! நான் நம்ப மாட்டேன்!” என்றாள் அழுத்தமாக.

பாக்கியம் கோபத்துடன் எழுந்தாள். “அந்த அப்பனுக்குப் பொறந்தவதானே நீ! வேற எப்படிப் பேசுவே?” என்றாள் மனத்தாங்கலுடன்.

ரஞ்சதம் மீண்டும் யோசித்தாள். `அப்பா?’

`ஊகும்!’ என்பதாகத் தலையை ஆட்டிக்கொண்டாள்.

“என் எடத்தில நீ இருந்து பாத்தா புரியும்,” என்று வீறாப்பாக ஏதோ சொல்ல ஆரம்பித்தவளுக்குக் குரல் தழுதழுத்துப் போயிற்று. “ரஞ்சி! எனக்கு சாகப் பயமில்லே. எல்லாரும் ஒரு நாள் போகத்தான் போறோம். அதுக்காக இப்படி. எனக்குக் கொஞ்சம் பலகீனமா இருக்கிறதாலே.. இளவட்டமா ஒருத்தியைப் வெச்சுக்கிட்டு, அவ நெனப்பா `ஐ லவ் யூ’ பாடறாருடீ!” புடவைத் தலைப்பு வாயை அடைக்கப் போயிற்று.

சந்தேகம் பரிபூரணமாக அகலாத நிலையில், என்ன சொல்வதென்று தெரியாது, அவளையே பார்த்துக்கொண்டு வாளாவிருந்தாள் பாக்கியம். “எவளையோ நெனச்சுக்கிட்டு கண்ணாடி முன்னால நின்னு சிங்காரிச்சுக்கிறதும், விசில் அடிக்கிறதும்! இதெல்லாம் எதில போய் முடியப்போகுதோ!”

“நீங்க கவலைப்படாதீங்கம்மா. இந்தமாதிரி சபலம் எல்லாம் அதிக நாள் நிலைக்காது. அப்பாவோட வழுக்கைத் தலையையும், அபஸ்வரமான பாட்டையும் வேற எந்தப் பொண்ணாலம்மா சகிச்சுக்க முடியும்? ஒங்க பொறுமை எல்லாருக்கும் வந்துடுமா?” தாயை உயர்த்திப் பேசினாள் மகள்.

“ஒன்னைவிட்டா வேற யாரு இருக்காங்க எனக்கு, ரஞ்சி? அதான்..!” என்று, தான் அனேகமாக, நிரந்தரமாகவே அங்கு தங்க நேரலாம் என்று மறைமுகமாக உணர்த்தினாள் பாக்கியம். பிறகு, தயக்கத்துடன், “நானா வரலேடி. ஒங்கப்பாதான் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறையா அனுப்பினாரு,” என்று விளக்கினாள்.

அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, “நெசமாவா?” என்று மட்டும் கேட்டாள் ரஞ்சி.

“அட, ஆமாங்கறேன்! நான் கண்ணு மறைவா இருந்தாத்தானே கேக்க ஆளில்லாம, கொட்டம் அடிக்க முடியும்!”

இவ்வவளவு நொந்துபோன தாயைப் பார்த்து ரஞ்சிக்குப் பரிதாபம் எழுந்தது. “அண்ணன்தான் இருக்காரேம்மா!” என்று சமாதானப்படுத்தப் பார்த்தாள்.

அதுவும் பலிக்கவில்லை. “ஒங்கண்ணனை நீதான் மெச்சிக்கணும். அந்தப் படுபாவியும் இவருக்கு உடந்தை. புதுசு புதுசா கலர் சட்டையெல்லாம் அவன்தானே சப்ளை! ஆம்பளையோட ஆம்பளை!” என்றவள், “பொண்ணாப் பொறந்துட்டோமே! என்ன செய்யறது!” என்று நிராசையில் முடித்தாள்.

அவளுடைய கையாலாகாத்தனம் மகளையும் பற்றிக்கொள்ள, அப்படியே சரிந்து உட்கார்ந்தாள் ரஞ்சிதம்.

கொடுத்துவைத்த மாமனார்

அன்று வீடுதிரும்பும்போதே உற்சாகமாக இருந்தான் வைத்தி.

“ரஞ்..சி! நான் வந்துட்டேன்!” என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தான்.

பதில் குரல் கேட்காததால், படுக்கை அறைக்குள் நுழைந்தவன், அங்கே தலைவரை போர்த்திப் படுத்திருந்த உருவத்தைக்கண்டுவிட்டு, `தூங்கிட்டா போலயிருக்கு!’ என்று படுக்கையின் விளிம்பில் உட்காரப்போனான்.

“இங்கே வந்து என்ன கலாட்டா பண்ணறீங்க?” என்று பின்னாலிருந்து மனைவியின் கண்டனக் குரல் கேட்க, பதறி எழுந்தான் வைத்தி.

“இது..?”

குரலே எழும்பாது, உதட்டை மட்டும் அசைத்தாள் ரஞ்சி. “அம்மா!”

ஓடாதகுறையாக வெளியில் வந்தான் வைத்தி. “நீதான் படுத்திருக்கிறதா நெனைச்சு..!” தலையில் அடித்துக்கொண்டான். “எங்கே வந்தாங்க?”

ரஞிக்குப் பெருமை உண்டாயிற்று. தான்கூட என்ன, இவரைமாதிரி அனாதையா!

“கேக்கறதைப்பாரு! என்னைப் பாக்கத்தான்!”

`மத்தவங்க கொஞ்சம் நிம்மதியா இருந்தா, பிடிக்காதே இவங்களுக்கு!’ என்று அரற்றிய வைத்தியின் மனக்குரல் அவளுக்குக் கேட்கவில்லை.

“அட, ஒங்கம்மாகூட என்ன, ஒன்னைமாதிரி நெனச்ச நேரத்திலே தூங்கறாங்க! ஏதும் விசேஷமா?” விஷமமாக கண்ணைச் சிமிட்டினான்.

“பேரன், பேத்தி எடுக்கிற வயசிலே அப்பாவுக்குப் புத்தி இப்படிப் போகவேணாம்!”

வைத்தியின் கண்கள் ஆர்வத்துடன் மின்னின. “எத்தனை மாசம்?” என்று அக்கறையாக விசாரித்தான்.

“ரெண்டோ, மூணோ! யாருக்குத் தெரியும்!”

“ஓ! நிச்சயமாத் தெரியாதா?”

“எல்லாம் ஒரு ஊகம்தான்!”

“ரொம்ப வருஷம் ஆயிடுச்சில்ல! மறந்திருக்கும்!”

“முந்தியெல்லாம் இப்படியா இருந்தாரு எங்கப்பா!” ரஞ்சியின் பெருமூச்சுக்குக் காரணம் அவனுக்கு விளங்கத்தானில்லை.

“இந்தக் காலத்திலே ரொம்பப்பேரு முப்பது வயசிலேயே வீரியம் கெட்டுப்போயிடறாங்களாம். வயகரா.. அப்புறம், டோங்காட் அலி (TONGKAT ALI) அப்படின்னு ஒரு வேர் இங்க விக்குது இல்ல, அந்த கண்ராவியை எல்லாம் கொள்ளைப் பணம் குடுத்து வாங்கறாங்களாம். நல்ல வேளை, ஒங்கப்பா நல்லபடியா ஒடம்பைப் பாதுகாத்து வந்திருக்காரு. எல்லாம் ஒங்கம்மாவோட அதிர்ஷ்டம்தான்!”

“துரதிர்ஷ்டம்னு சொல்லுங்க!”

“அது எப்படி?” சற்று விழித்தான். “ஓ! நாலு பேர் கேலி செய்வாங்களேன்னு பாக்கறியா? இதில என்ன தப்பு? முறையா கல்யாணம் செய்துகிட்டவங்கதானே?”

“முறை..யா, கல்யாணமா? அப்போ, ஒங்களுக்கும் அவளைத் தெரியுமா?”

“எவளை?” விழித்தான் வைத்தி.

“ரொம்பத்தான் நடிக்காதீங்க. அதான். எங்கப்பாவோட..,” முகத்தைத் திருப்பிக்கொண்டாள். “அவரோட சின்னவீடு!”

வைத்தியின் கண்ணில் ஒளி பாய்ந்தது. “பலே!” என்று மாமனாரை வாயாரப் பாராட்டினான். “ஒங்கப்பா எப்படி இவ்வளவு காலமா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணாம இருந்தாருங்கிறதுதான் அதிசயம்!”

ரஞ்சிக்கு அழுகை வந்தது. “எங்களைமாதிரி பொம்பளைங்க ஒங்களை நம்பி வந்துடறோம். நீங்க ஒங்க இஷ்டத்துக்கு..!” விம்மல் எழுந்ததில் மேலே பேசமுடியவிலை ரஞ்சியால்.

“ஏய்! நீ ஏன் அழறே? ஒங்கப்பா கொடுத்து வெச்சவர். அவரால அது முடியும். அதுக்காகத்தான் அடிக்கடி ஒங்கம்மாவை இங்க அனுப்பிடறாரு. அங்கே அவர்பாட்டிலே ஜாலியா..!” பொறாமை தாங்காது, பெருமூச்சு விட்டான்.

அப்பாவிபோல் இருந்த அப்பாவே அம்மா இவ்வளவு தூரம் கலங்கும்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கும்போது, ஏற்கெனவே தெருவில் போகும் பெண்களை எல்லாம் வெறித்து வெறித்துப் பார்க்கும் கணவரைப்பற்றியோ கேட்கவே வேண்டாம்! எங்கே மாமியார் கண்குத்திப் பாம்பாக அருகிலேயே இருந்தால், தனது லீலைகளைத் தொடர்ந்து நடத்த முடியாதோ என்கிற பயம்! வேறென்ன!

ரஞ்சிக்கு ரோசம் பிறந்தது. “அம்மா இங்கதான் இருக்கப்போறாங்க. அதுக்ககு என்ன செய்யப்போறீங்க?”

வைத்திக்கு ஆயாசமாக இருந்தது. “அதைப்பத்தி அப்புறமா யோசிக்கலாம். மொதல்ல குடிக்க ஏதானும் குடு!”

“இதோ எடுத்திட்டு வரேன்!”

தேனீர் கோப்பையுடன் தன்னைக் கடந்துபோன மனைவியைத் தடுத்து நிறுத்தினான் வைத்தி. “நான் இங்கதானே இருக்கேன்! எங்கே போறே?”

`என்னடா, அதிசயமா அம்மாவுக்குப் பரிஞ்சு பேசறாரேன்னு பாத்தா..! அவ்வளவும் சுயநலம்!’ முறைத்துவிட்டு, வேண்டாவெறுப்பாக அவனிடம் நீட்டினாள்.

சூடான பானத்தைக் குடித்ததும், வைத்தியின் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. `மசக்கையா இருந்தா, பொண்ணுதான் அம்மா வீட்டுக்குப் போகும். இங்க எல்லாமே தலைகீழா இல்ல இருக்கு!’

உரக்கக் கேட்டான்: “ஏன் ரஞ்சி? இந்தமாதிரி சமயத்திலே அம்மா பொண்ணு வீட்டுக்கு வர்றது..?”

“அந்த வீட்டிலே இருக்கணும்னு அம்மாவுக்கு என்னங்க தலையெழுத்து? வயசுக்கு ஏத்தமாதிரி அப்பா நடந்துக்கு வேணாம்?”

வைத்திக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “இதுக்கா கோவிச்சுக்கிட்டு வந்துட்டாங்க! ஒவ்வொருத்தர்.. புருஷன் வயசுக்கு ஏத்தமாதிரி நடந்துக்கறாரேன்னு குறைப்படறதைத்தான் நான் கேட்டிருக்கேன்!”

“ஒங்களுக்கு ஒண்ணும் புரியாது! சும்மா இருங்க!”

“அம்மாவும், பொண்ணும் எப்படியோ போங்க! நான் ஒரு தூக்கம் போட்டுட்டு, விடிய விடிய ஏதாவது படம் பாக்கலாம்னு ஆசையா வந்தேன். அதுக்கும் வழியில்ல,” என்று ஆயாசப்பட்டான்.

“ஒங்களுக்கென்ன இந்த வேளையில தூக்கம்? அம்மாவுக்குத்தான் ஒடம்புக்கு முடியல, பாவம்!”

“விட்டுக்குடுக்க மாட்டியே! சரி. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்!”

“இப்பத்தானே வந்தீங்க! மறுபடியும் எங்கே போறீங்க?”

தன் செய்கையால் அவள் மனம் கலங்குகிறாள் என்ற நிதரிசனமே ஒரு பலத்தைத் தர, மிடுக்காகத் திரும்பினான் வைத்தி. “அதான் சொன்னேனே! வெளியே!”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *