2 கைப்பிடித்தார் மாப்பிள்ளை

கோலாலம்பூர் செந்துல் பகுதியில், ஸ்ரீ சோனி ஜெயா என்ற பகுதிக்குப் போனால், பிரதான சாலையிலிருந்து தள்ளிக் கட்டப்பட்டிருந்த அந்த இரண்டடுக்கு வீடு தெரியும். தெருவின் இரு புறங்களிலும் `செமாராக்’ மரங்கள் தம் நீண்ட கிளைகளைப் பரப்பி நிழல் அளித்துக் கொண்டிருந்தாலும், ஒன்றோடு ஒன்று ஒட்டியதாய், இடைவெளியே இல்லாது அவ்வீடுகளைக் கட்டியிருந்தான் கண்ட்ராக்டர் — அவனுடைய லாபத்தைப் பெருக்க. ஆனால், வீடுகளுக்குள் வெளிச்சமோ, காற்றோ, ஊகும். பேசக்கூடாது.

ஒவ்வொரு தளத்திலும் நான்கு குடித்தனங்கள். அதில், கீழ்த்தளத்தில் இருந்த இரண்டு அறைகள் கொண்ட வீடு ஒன்றில் நம் புதுமணத் தம்பதிகள் வைத்தியும், ரஞ்சிதமும்.

காலை ஏழு மணிக்கு, கலைந்த தலையும், நைட்டியுமாக கணவனை வழியனுப்ப வாசலுக்கு வந்தாள் ரஞ்சிதம். எல்லாக் குடித்தனக்காரர்களும் அதே தோற்றத்தில்தான் இருந்தார்கள் — பகலிலும்கூட. அதனால் அநியாயமாக வெட்கப்பட வேண்டியிருக்கவில்லை.

“எப்ப திரும்பி வருவீங்க?” ஸ்கூட்டரில் ஆரோகணித்து, அலுவலகத்துக்குப் புறப்படத் தயாராக இருந்த கணவனைக் கேட்டாள், தலையைச் சாய்த்தபடி.

“இதென்ன கேள்வி, தினமும்? வேலைக்குப் போறவன், அதை முடிச்சுட்டுத்தான் வரமுடியும்!” மணமாகி ஓரிரு மாதங்களிலேயே தன் சுதந்திரத்தைத் தொலைத்துவிட்டோமே என்ற எரிச்சலுடன் பதிலளித்தான் வைத்தி.

ரஞ்சிதம் சிணுங்கினாள். “உக்கும்! வேலை முடிஞ்ச ஒடனே வந்துடறமாதிரிதான்! நீங்கபாட்டில ஊரைச் சுத்திட்டு, ராத்திரி லேட்டா..,” அவள் முடிப்பதற்குள் அவன் குறுக்கிட்டான், விஷமப் புன்னகையோடு: “அப்பதானே நம்ப வேலை!”

அவன் கூறியதன் உள்ளர்த்தம் என்னவென்று சாயந்திரம்வரை மண்டையை உடைத்துக்கொண்டிருந்தாள் ரஞ்சி. அர்த்தம் புரிந்ததும், `சீ!’ என்று சொல்லிக்கொண்டாள். குதூகலம் ஏற்பட்டது.

வாயிற்கதவு பலமாகத் தட்டப்படும் சப்தம் கேட்டது.

`அப்பப்பா! இந்த ஆம்பிளைங்களுக்கே எதிலேயும் அவசரம்தான்!” தன்னையும் ஒருவர் நாடுகிறாரே என்ற பெருமிதத்துடன் ஒயிலாக நடந்துபோய் திறந்தவள் லேசாக அதிர்ந்தாள். “அம்மா!”

“ஒரே ஊரில நானும் நீயும் இருக்கிறது ரொம்ப சௌகரியம். இல்ல ரஞ்சி?” என்றபடி, “இந்தா!” என்று ரம்புத்தான் பழங்கள் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் பையை அவளிடம் நீட்டினாள். இரட்டை நாடியான சரீரம் ஆனதால், மாடி ஏறாமலேயே பாக்கியத்துக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

ரஞ்சிதத்திற்குப் பேசவே நாவெழவில்லை. அம்மா வந்திருப்பது தெரியாமல், இந்த மனிதர் எப்போதும்போல் பத்து மணிக்குமேல் வீடு வந்து சேரப்போகிறாரே என்ற பதட்டம் அவளிடம் குடிகொண்டது.

சாதாரணமாகவே, எல்லாரையும் குறைத்து மதிப்பிடும் அம்மா. அதிலும், இந்த எலும்பு மனிதர் தனது அருமை மகளைத் தன்னிடமிருந்து பிரித்துவிட்டாரே என்று, கல்யாணமான முதல் வாரத்திலேயே ஆத்திரப்பட்டவள்!

அவளுடைய நல்லெண்ணத்தைச் சம்பாதிக்க, அவள் எதிர்பார்ப்புக்கு மேலாகவே இருக்கவேண்டாமோ இவர்?

“என்ன ரஞ்சி? பேச்சையே காணோம்? மாப்பிள்ளை.. ஒங்கிட்ட.. அன்பா இருக்காரில்ல? கோபதாபம் எதுவும் இல்லையே?”

தன் நினைவுகளிலேயே அமிழ்ந்திருந்த ரஞ்சி, எதுவும் புரியாது தாயின் முகத்தையே பார்த்தபடி நின்றாள்.

“என்னடி! நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ என் மூஞ்சியையே பாத்திட்டு நிக்கறே?” என்று செல்லமாக ஓர் அதட்டல் போட்டாள் பாக்கியம்.

அந்தக் கேள்வியைச் சமீபத்தில் எங்கோ கேட்டமாதிரி இருந்தது.

 

`ஏன் ரஞ்சி? நான் எப்பவும் ஒன் பக்கத்திலேயே இருக்கணும்கிறியே! என் மூஞ்சியைப் பாத்து ஒனக்கு அலுக்கலே?’ காலையில் வைத்தி கேட்டது.

அவன் என்ன செய்வான், பாவம்! திருமணத்துக்குமுன் ஒரே அறையில் சிக்கனமாகத் தங்கியிருந்த தனக்கு இப்போது செலவுகள் பெருகிவிட்டனவே என்று அவன் கவலைப்படாத நேரமே கிடையாது. இது புரியாது, மனைவி வேறு புதிது புதிதாக ஏதாவது கேட்டுவிடப்போகிறாளே என்று பயந்தே வீட்டில் இருப்பதைத் தவிர்ப்பதை அவளிடம் சொல்லவா முடியும்!

அதற்கு, `இவரு பெரிய மன்மதன்! ஒங்க மூஞ்சியைப் பாக்கணும்னா கேக்கறேன்! வீட்டிலேயே இருந்தா, போரிங்! சாயந்திரம்.. ரெண்டுபேரும்.. ஜாலியா எங்கேயாவது..,’ என்று மயக்கும் பார்வையுடன் அவனைப் பார்த்தாள் ரஞ்சி. கணவனைத் தன்பால் ஈர்க்க இவ்வளவு பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற ஆயாசம் பிறந்தது.

புதிதாக அறிமுகமாகி, காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் அடுத்து என்ன செய்வார்கள் என்று இவருக்கு ஏன் தெரியவில்லை? தமிழ்ப்படங்களே பார்த்திருக்க மாட்டாரோ?

அட, மரங்களைச் சுற்றி ஓடாவிட்டாலோ, அல்லது, இதற்கென்றே கடல் கடந்துபோய், வெள்ளைக்காரன்கள் வெறித்து வெறித்துப் பார்த்து, தலையை ஆட்டி நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு தெருக்களில் ஓடியாடாவிட்டால் போகிறது. குறைந்தபட்சம், கைகோர்த்துக் கொண்டாவது எங்கேயாவது போகலாமில்லையா? இதையெல்லாம் வாய்விட்டா சொல்வாள் ஒருத்தி?

அவளுடைய அந்தரங்கம் புரியாது, வள்ளென்று விழுந்தான் வைத்தி. `தினம் தினம் வெளியே போக, இங்கே என்ன காசு கொட்டியா கிடக்கு?’

 

அது காலையில்.

இப்போது, “அடீ! என்ன ஆயிடுச்சு ஒனக்கு?” என்று தாய் படபடக்க, சட்டெனச் சமாளித்துக்கொண்ட ரஞ்சிதம், அவசர அவசரமாகப் பதிலளித்தாள். “என்னம்மா? அவர்தானே? அதை ஏன் கேக்கறீங்க? எம்மேல ஒரே உசிரு! இன்னிக்குக் காலையில பாருங்க, `ஏதோ ஒரு புதுப்படம் வெளியாகி இருக்காமே!’ன்னு கேட்டேன் — பேச்சுவாக்கிலம்மா. கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஃபோன் பண்றாரு, `சினிமாவுக்கு ரெண்டு டிக்கட் எடுத்துட்டேன், டார்லிங். ரெடியா இருன்னு!’ நான் சொல்றதுதான் அவருக்கு வேதவாக்கு!” எவ்வளவு கோர்வையாகப் பொய் சொல்கிறோம் என்று சற்று பெருமையாகக்கூட இருந்தது அவளுக்கு.

வாய் ஓயாது பேசும் பெண் இப்போது தன்னைக் கண்டதும் மகிழாது, ஏனோதானோ என்றல்லவா இருக்கிறாள்! புருஷன்காரன் வந்ததும், பெற்றவள், தான், வேண்டாதவளாகப் போய்விட்டோமே! பாக்கியத்தின் முகம் வாடிப்போயிற்று.

“சரி. ஒன்னைப் பாக்கத்தான் வந்தேன். பாத்தாச்சு. புறப்படறேன்..,” என்று இழுத்தாள். ஆனால், இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை.

அம்மா தன்னை நம்பிவிட்ட மகிழ்ச்சி தாங்காது, “ஊகும்! நீங்களும் எங்களோட படத்துக்கு வர்றீங்க!” என்று கொஞ்சினாள் ரஞ்சி.

`படம்’ என்ற அந்த மந்திர வார்த்தை காதில் விழுந்தவுடனேயே பாக்கியம் புத்துயிர் பெற்றாள். இருந்தாலும், தன் பிகுவை விட்டுக் கொடுக்கத் தயாரில்லாது, “நான் ஒருத்தி எதுக்குடி, சின்னஞ்சிறுசுங்க மத்தியிலே கட்டெறும்பாட்டம்!” என்றாள்.

அவள் எதிர்பார்த்தபடியே, மகள் பாய்ந்து அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். “உங்களை விடமாட்டேன். வாங்…கம்மா!”

“சரி. சரி. புறப்படற வழியைப் பாரு!” என்ற தாயின் குரலில் பெருமிதம்! தான் நினைத்ததுபோலவே மாப்பிள்ளை இருக்கிறார்; மகளும் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை, எல்லாவற்றிற்கும் தன்னை எதிர்பார்த்த அதே குழந்தையாகத்தான் இன்னும் இருக்கிறாள் என்று.

ரஞ்சியைத் தொடர்ந்து அவளுடைய அறைக்குப் போனவள், உரிமையுடன், அவளுடைய மர அலமாரியில் அடுக்கி வைக்கப்படிருந்த எல்லாப் புடவைகளையும் கலைத்துத் துழாவ ஆரம்பித்தாள்.

“நீ எது உடுத்தினாலும் நல்லாத்தான் இருக்கும். இருந்தாலும், புதுசா கல்யாணமானவ! பாக்க பளிச்சுனு இருந்தாத்தானே வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர ஆம்பளைக்கு..!” என்று கண்ணைச் சிமிட்டினாள்.

ரஞ்சிதம் வெட்கினாள். கற்பனை விரிந்தது: அவள் அழகுப் பதுமையாக நிற்கிறாள். அதைப் பார்த்த கணவன் மயக்கம் போடாத குறை. அப்படியே அலக்காக அவளைத் தூக்கி…!

மிகுந்த கவனத்துடன், மணிக்கணக்காக அலங்காரம் செய்துகொண்டாள்.

“ஏண்டி கண்ணு? எத்தனை மணி ஆட்டம்னு சொன்னே?” என்று நொடிக்கொரு தடவை கேட்டபடி இருந்தாள் பாக்கியம். “ராத்திரிக்கு ஏதாவது சமைச்சு வைச்சிருக்கியா?”

அழுகையும் முணுமுணுப்புமாக, “ஒரு நாள் பட்டினி கிடந்தா, ஒண்ணும் கெட்டுப் போயிடாது!” என்றவளைப் பார்த்து, தாய் லேசான சிரிப்புடன் தலையை ஆட்டிக்கொண்டாள். `யாரைப் பட்டினி போடணுங்கிறா?’

ஒன்பது மணிக்குமேல் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. தன் சாயம் வெளுத்துவிட்டதே என்ற ஆத்திரத்துடன், சர்வாலங்கார பூஷிதையாக இருந்த ரஞ்சிதம், கட்டியிருந்த புடவை, முத்து மாலை, வளை என்று ஒவ்வொன்றாகக் கழற்றி படுக்கைமேல் எறிந்தாள். கணவன்மேல் இருக்கும் கோபத்தை வெளிக்காட்ட கைகேயி அப்படித்தானே செய்திருந்தாள்?

விளக்கை அணைத்துவிட்டு, உள்பாவாடையுடன் ஓடோடிப்போய் படுக்கையில் விழுந்தாள்.

நடந்தது எதையும் அறியாத வைத்தி, “அதுக்குள்ளேயா தூங்கிட்டே?” என்று சாவதானமாகக் கேட்டபடி, விளக்கைப் போட்டான்.

சண்டைக்குத் தயாராக எழுந்து, முழங்கால்களைக் கட்டியபடி உட்கார்ந்தாள் ரஞ்சி. “ஒங்களால எனக்கு இன்னிக்கு ஒரே அவமானம்!”

“ம்?” வைத்தியின் முட்டை விழிகள் மேலும் விரிந்தன.

குரலைத் தழைத்துக்கொண்டு, “அம்மா வந்திருக்காங்க. அவங்க வர சமயத்திலேயாவது நீங்க நேரத்தோட வீட்டுக்கு..,” என்று அவள் சொல்லிக்கொண்டேபோக, “அவங்க வரப்போறாங்கன்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?” என்றான் அலட்சியமாக. “ஒங்கம்மா கெடக்கிறாங்க! பசி வயத்தைக் கிள்ளுது. இன்னிக்கும் ரவா உப்புமா இல்லியே?” என்றபடி, சாப்பாட்டு மேசை அருகே சென்றான்.

“அம்மா.. கெடக்கட்டுமா? அப்போ அவங்க செஞ்ச சாப்பாடு மட்டும் வேணுமோ?”என்ற மனைவியின் குரல் ஆக்ரோஷமாக ஒலிக்க, ரோஷத்துடன் மீண்டும் அறைக்குள் வந்து, தலையணையை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

“சாப்பிடலே?” ரஞ்சியின் குரல் தாழ்ந்து ஒலித்தது. அவன் பதில் கூறாது வெளிநடப்பு செய்தது ஆத்திரப்படுத்த, கட்டிலை ஓங்கி ஒரு உதைவிட்டாள்.

மலிவாக இருக்கிறதே என்ற ஒரே காரணத்துக்காக வைத்தி தவணை முறையில் வாங்கியிருந்த கட்டில் அது. சரியாகப் பொருத்தப்படாமல் இருந்த அதன் நடுப்பகுதி பெரும் சப்தத்துடன் கீழே விழுந்தது.

பக்கத்து அறையில் படுத்திருந்த பாக்கியம் திடுக்கிட்டு உட்கார்ந்தாள். `என்னதான் பண்றாங்க?’ முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு.

கற்பனை செய்ய முயன்றதில் தூக்கம் அறவே கலைந்துபோக, `டி.வியாவது பார்க்கலாம்,’ என்று ஹாலுக்கு வந்தாள்.

அரைகுறை வெளிச்சத்தில் சோபாவில் வைத்தி படுத்திருப்பது தெரியாது, அதன்மேல் அமரப்போனாள்.

“எனக்குத் தெரியும், நீ என்னைத் தனியா விடமாட்டேன்னு!” என்ற மென்மையான குரலுடன் யாரோ அவள் கையைப் பிடித்திழுக்க, வீலென்று அலறினாள் அந்த மாமியார்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *