3 கைப்பிடித்தலும், காலைப் பிடித்துவிடுதலும்

“என்ன பாக்கியம்? பெண்ணைப் பாக்கப் போனவ, ராத்திரி அங்கேயே தங்கிட்டே? மாப்பிள்ளை பலம்..மா உபசாரம் பண்ணினாரா?”என்றபடி மனைவியை வரவேற்றார் மணி.

“அதை ஏன் கேக்கறீங்க! என் கையைப் பிடிச்சுக்கிட்டு, வி..ட மாட்டேன்னுட்டாரு!” என்று, பெருமையுடன் தலையை நிமிர்த்தியபடி, பாதி உண்மையை மட்டும் அவள் கூற, மணி பதறிப்போனார்.

“கையைப் பிடிச்சாரா? ம்! நான் ஒங்கிட்ட வந்தா மட்டும் விரட்டுவே!” என்றார் குறையுடன். சற்றே துணிந்து, அவளுடைய கழுத்து என்று தோன்றிய சதைப்பற்றான பகுதியில் விரல்களால் விளையாடப்போனார். துள்ளி நகர்ந்தாள் பாக்கியம்.

“கஷ்டம்! யாராவது பாக்கப்போறாங்க!”

மணியின் கண்களில் எதையோ புரிந்துகொண்ட பிரகாசம். “அப்போ.., யாராவது பாக்காட்டி சரிதானா?” என்று உடனே பாயிண்டைப் பிடித்தவர், “ஐடியா! அந்தக் காலத்திலேதான் நாம்ப ஹனிமூன் போக முடியலே. இப்ப போலாமா?” அந்த எண்ணத்திலேயே இளமை திரும்பிவிட்டதுபோல் இருந்தது.

“நாம்ப ரெண்டு பேருமா..?” தயங்கினாள் பாக்கியம்.

“பின்னே? தனியாவா ஹனிமூன் போவாங்க?”

“இந்த வயசிலேயா?” என்று அதிர்ந்தவள், முகத்தைத் திருப்பியபடி, “இந்தக் கெழவருக்கு..,” என்ன்று ஏதோ முணுமுணுக்க, “கெழவனா! யாரைப் பாத்துச் சொல்றே அப்படி? போயிட்டு வந்தப்புறம் பேசு!” என்று வீரம் பேசினார் மணி.

பாக்கியத்துக்கும் சபலம் ஏற்பட்டது. “செலவு..?” என்று இழுத்தாள்.

“ஆங்!” என்று கையை வீசினார் அந்த முக்கால் கிழவர். “இப்ப செலவழிக்காம, எண்பது வயசிலேயா செலவழிக்கப்போறோம்? அப்ப வெளியூர் போனா.., கண்ணு சரியாத் தெரியாம நான் ஒன் கையைப் பிடிக்க, முழங்கால் வலி, நடக்க முடியலேன்னு நீ என்னைப் பிடிக்க..!”

“ஐயே! நாலுபேர் பாக்கறமாதிரி அப்படி எல்லாம் பிடிச்சுக்கணும்னுதானே இப்ப தனியாப் போகலாம்கிறீங்க!” என்ற ஒயிலாகக் கழுத்தை ஒடித்தாள் பாக்கியம்.

இருமல், தலைவலி, அஜீரண மாத்திரைகளுடன், துணிமணிகளையும் பெட்டியில் அடுக்கினாள் பாக்கியம். நிறைக் கர்ப்பிணியாக அதன் வயிறு பருத்தது.

அவர்கள் இருவரும் ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் கிளம்பிப் போயிருந்தால், எவ்வளவோ பொய்களைச் சொல்லி, பாவம் தேடிக்கொள்ள வேண்டி இருந்திருக்காது. பெட்டிகளுடன் மகன் ரவி வந்து சேர்ந்தான், அசந்தர்ப்பமாக.

ஏமாற்றம் தாங்காது, “எங்கடா வந்தே, திடீருன்னு?” என்று மகனை வரவேற்றார் தந்தை.

பேச்சுக்குரல் கேட்டதும், “யாருங்க?” என்றபடி உள்ளேயிருந்து வந்த பாக்கியமும், ஒரேயடியாக அதிர்ந்து, “நீ எங்கேடா, இங்கே?” என்றாள் ஈனஸ்வரத்தில்.

`எங்களை எல்லாம் மறந்தே போயிட்டியாடா. நன்றிகெட்ட கழுதை!’ என்று எப்போதும் வரவேற்கும் பெற்றோர் மனம் மாறக் காரணம் எதுவாக இருக்கும் என்று விழித்த ரவியின் கண்களில் மூட்டை முடிச்சுகள் பட்டன.

அப்பாவோ தனது செடிகளை விட்டுவிட்டு எங்கேயும் அத்தனை சுலபமாகக் கிளம்பிவிட மாட்டார் என்றவரை அவனுக்குத் தெரியும்.

“எங்கேயாவது போறீங்களாம்மா?” என்று பாக்கியத்தைப் பார்த்துக் கேட்டான்.

அவளுக்குக் கூச்சம் பிடுங்கித் தின்றது. “ஏங்க! கேக்கறான் இல்ல?”

உளறலாக ஏதோ சொல்லி மழுப்பிவிட்டு, “அத்தைக்கு ஒடம்புக்கு முடியலியாம். ஆமா. அத்தைக்கு!” என்று அழுத்திச் சொன்னவர், “அதான் புறப்பட்டேன்,” என்றபடி பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டார். அது சரியாக மூடப்பட்டிருக்கவில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. புடவைகள் சிதறின. அலமலங்க விழித்தார்.

பாக்கியம் கணவருக்கு உதவியாக வந்தாள். “என்ன இருந்தாலும் நாத்தனார்! அதான், `நானும் வரேங்க’ன்னு புறப்பட்டேன். நாளைக்கு ஏதாவது எசகுபிசகா ஆனா, குத்தமா பேசமாட்டாங்க?”

ரவிக்குச் சிரிப்பு வந்தது. அடக்கியபடி, “எந்த அத்தைக்கும்மா?” என்று விசாரித்தான், அப்பாவிக் களையோடு.

“என்னடா கேக்கறே? இருக்கிறது ஈப்போ அத்தை மட்டும்தானே?”

`நான் அங்கேயிருந்துதானே வரேன்!’ என்று அவர்களது குட்டை உடைக்க ரவி என்ன, விவரம் தெரியாதவனா?

“நான் வேணுமானா, காரிலே கொண்டுவிடட்டுமா?” என்றான் அதீதப் பரிவுடன். அவர்களது பலத்த மறுப்பை ரசித்தான்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *