7 காற்றுவாங்கப் போனான்

ஒருமாதிரியான படம் பார்த்ததால் எழுந்திருந்த கிளர்ச்சியுடன் உல்லாசமாக வீடு திரும்பிய வைத்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது — பாக்கியத்தின் உருவில்.

சுய பரிதாபமே ஓர் உருக்கொண்டதுபோல வாசலில் அமர்ந்திருந்த தாயைப் பார்த்து, மகள் கரிசனமாகக் கேட்டாள்: “ஏம்மா இங்க ஒக்காந்திருக்கீங்க?”

“பூட்டை ஒடைச்சு உள்ளே போனா நல்லா இருக்குமா?”

“அத்தை! நாங்க படம் பாக்கப்போனோம்,” வைத்தி தெரிவித்தான். “நீங்க வர்றதுக்கு முந்தி ஒரு ஃபோன் போட்டிருக்கலாம்!”

ரஞ்சி கணவனை முறைத்தாள். “அம்மா எவ்வளவு பெரியவங்க! அவங்களுக்கே புத்தி சொல்றீங்களா? அவங்க வந்த சமயம் பாத்து வீட்டில இல்லாதது நம்ப தப்பு!” என்று ரகசியக் குரலில் கண்டித்தவள், “நீங்க உள்ளே வாங்கம்மா. வந்து சாப்பிடுங்க!” என்று உபசாரம் செய்தாள்.

தன் வீடு என்ற அதிகாரத்துடன், “பசி கொல்லுது!” என்று வைத்தியும் அவளைத் தொடர, “கொஞ்சந்தான் இருக்கு. அம்மா சாப்பிடட்டும்!” என்றாள் அருமை மனைவி, ரகசியக்குரலில்.

“நீங்க?” என்ற தாயிடம், “நாங்க வரும்போதே சாப்பிட்டுட்டுதான் வந்தோம்,” என்று அளந்தாள் ரஞ்சி.

மகளின் பரிவால் நெகிழ்ந்துபோனாள் தாய். “அப்ப சரி. நானே எடுத்துப் போட்டுக்கறேன். போய் படுத்துக்குங்க. அலைஞ்சுட்டு வந்திருக்கீங்க!”

அறைக்குள்.

“ஏன் இப்படி எரை தின்ன பாம்பு கணக்கா நெளியறீங்க? கட்டில் ஆடற ஆட்டத்திலே தூங்கவே முடியல”.

“எரையாவது, பாம்பாவது! நீ வேற வயத்தெரிச்சலைக் கிளப்பிட்டு! பசி வயத்தைக் கொடையுது!”

“நீங்கதான் தினமும் எதுக்காவது கோபிச்சுக்கிட்டு, ராப்பட்டினி கிடப்பீங்களே! இன்னிக்கு மட்டும் என்ன, புதுசா! எதையாவது நினைச்சு, கோபத்தை வரவழைச்சுக்கிறது!” என்று அற்புதமான யோசனை ஒன்றைக் கூறினாள் தர்ம்பத்தினி.

வைத்தி ஆத்திரத்துடன் எழுந்தான்.

“எங்கே கிளம்பறீங்க?”

“ஸ்டால்லே மீ பிரட்டல்(நூடுல்ஸ்) சாப்பிட்டுட்டு வரேன்!”

ஸ்கூட்டர் சத்தம் கேட்ட பாக்கியம், மருமகன் உள்ளே இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, எட்டிப் பார்த்தாள்.

அவள் எதுவும் கேட்குமுன், “காத்துவாங்கப் போனாரும்மா. இங்க ஒரே புழுக்கமா இருக்கில்ல!” என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள் ரஞ்சி.

பாக்கியத்தின் நெளிந்த உதடுகள் அவநம்பிக்கையை வெளிப்படுத்தின. “அடிக்கடி இப்படிப் போவாராடி, கண்ணு?”

ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று புரியாது, `ஆம்,’ என்னும் முறையில் தலையை ஆட்டிய மகளைப் பார்த்துத் தாய்க்குப் பரிதாபம் எழுந்தது.

தளர்ந்த நடையுடன் அப்பால் சென்ற பாக்கியத்திற்கு தெய்வ நிந்தனை செய்வது தவிர வேறு வழி தெரியவில்லை. `இந்தக் குழந்தையை இப்படி ஒரு காமாந்தகாரனோட கட்டிப் போட்டியே, பத்துமலை முருகா! இவளை அங்கே இங்கே கூட்டிட்டுப்போய் தாஜா செய்துட்டு, இன்னொரு பக்கம் அந்தப் பாவி..!’

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *