23 காதலர் பூங்கா

திருமணம் செய்துகொண்ட இருவர் போராடிக்கொண்டிருந்தபோது, வேறு இருவர், `நாம் திருமணம் செய்துகொள்ள வழியே இல்லையா!’ என்ற ஏக்கத்துடன் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தனர்.

`எப்படியும், இன்று இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்,’ என்று உறுதி எடுத்தவனாக, ரவி ராதிகாவின் ஆபீசைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தான்.

அவள் அந்தக் காம்பவுண்டின் வெளியே வருவதைப் பார்த்ததும், வேகமாகக் காரை அவளருகே நிறுத்தினான். அவனது செய்கையைக் கண்டித்து, பின்னாலிருந்து ஹார்ன் ஒலி பல ஸ்ருதிகளில் ஒலித்தன.

அவன்மீது மோதிக்கொள்ளவிருந்து, தன் சமயோசித புத்தியால் உயிரைக் காப்பாற்றிக்கொண்ட ஒரு ஸ்கூட்டரோட்டி கை முத்திரையால் தன் பகைமையை வெளிக்காட்டியபடி விரைந்தான்.

“ஏறு, சீக்கிரம்!”

ராதிகா தயங்க, “இப்ப நீ ஏறாட்டி, நான் இறங்கி, அப்படியே ஒன்னை அலக்காத் தூக்கி..,” என்று, வீராவேசமாக ரவி ஆரம்பிக்கையில், போக்குவரத்து அதிகாரி ஒருவர் கையில் நோட்டுப் புத்தகத்துடன் அங்கு வருவதைப் பார்த்த ராதிகா, அவசரமாகக் காரில் ஏறினாள்.

“அவர் டிக்கெட் குடுத்தா, முன்னூறு வெள்ளி தண்டம் அழணும். தெரியுமில்ல?” என்று சீண்டினாள்.

“காதலிக்க ஆரம்பிச்சா, செலவைப் பாக்கக்கூடாது!” தத்துவம் பேசியவன், ஏதோ நினைப்பு வந்தவனாகச் சிரித்தான். “வைத்திக்கு இது புரிய மாட்டேங்குது, பாரேன்! ரெண்டு பேருக்கும் எப்பவும் சண்டைதா்ன்!”

“எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்?”

“புருஷனோட சண்டை போட்டுக்கிட்டு, எங்க வீட்டோட இருந்தா கொஞ்ச நாள். இப்பதான் சமாதானம் ஆகியிருக்காங்க. இது எத்தனை நாள் நிலைக்கப் போகுதோ!”

”அப்படி எதுக்கு சண்டை போடுவாங்க?”

“ரெண்டு பேரும் இன்னும் சின்னப்பிள்ளைங்களாவே இருக்காங்க. விட்டுக்குடுக்க மாட்டாங்க. சண்டை வராம இருக்குமா?” என்றவன், “எல்லாரும் நம்பளைமாதிரி இருக்க முடியுமா?” என்று நைசாக ஆரம்பித்தான்.

ராதிகாவின் முகத்தில் வேதனை படர்ந்தது. “விடுங்களேன்! அது முடிஞ்ச கதை!”

பேச்சை மாற்றும் வகையில், “ஒங்க ஆபீசையே சுத்திச் சுத்தி வந்தேனா! தலை சுத்துது. டிடிவாங்க்ஸா பார்க்கில கொஞ்சம் ஒக்காந்துட்டு போலாமா?” என்று கேட்ட ரவி, அவள் பதிலுக்குக் காத்திராமல், காரைத் திருப்பினான்.

அந்த வேளையில், காரை நிறுத்த நிறைய இடமிருந்தது. உலாவவோ, அல்லது உடற்பயிற்சி சாதனங்களைப் பயன்படுத்தவோ யாரும் வந்து சேரவில்லை. குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்துகொண்டிருப்பார்கள். இல்லை, மத்தியான பள்ளிக்கூடமாக இருக்கும்.

வண்ண வண்ணமான சதுரக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த பாதையில் நடந்துபோய், ஃபைபர் கண்ணாடியால் செய்யப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் இருவரும் அமர்ந்துகொண்டனர்.

“அம்மா நல்லா இருக்காங்களா?” என்று பேச்சை ஆரம்பித்தான் ரவி.

அவன் சற்றும் எதிர்பாராத விதமாக, ராதிகா விம்மினாள். “அம்மா.. போயிட்டாங்க!”

“எப்போ? எனக்குக்கூட சொல்லல, பாத்தியா!”

“ஆறு மாசமாச்சு. அவங்க சரியான பாதையிலதான் போய்க்கிட்டிருந்தாங்க. “லாரிக்காரன் `ஒன் வே’ன்னு பாக்காம, வந்து மோதிட்டான். அது அம்மாவோட ராசி போலயிருக்கு!”

“எது?”

“தப்பே பண்ணாம, தண்டனை அனுபவிக்கிறது!”

”இப்பகூட, நீ சரின்னு சொன்னா..,” என்று உத்வேகத்துடன் பேச ஆரம்பித்த ரவியைக் கையமர்த்தினாள் ராதிகா.

“நான் ஒரு வீட்டுக்கு மருமகளா வந்தா, எல்லாரும் என்னை முழுமனசா ஏத்துக்கணும், ரவி”. அவள் குரல் கெஞ்சியது. “சின்ன வயசிலே நான் பிறந்தநாள் கொண்டாட்டம், கல்யாணம், இப்படி எங்கேயும் போனதில்ல — யாரும் அழைக்கல!”

கழிவிரக்கத்துடன் அவளையே பார்த்தான் ரவி. இந்த இளம் வயதுக்குள் எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கிறாள்! அதனால்தான், தங்கையைப்போல் இல்லாது, அவ்வளவு முதிர்ச்சியோ!

“அப்போ எல்லாம் அம்மாகிட்ட போய் அழுவேன்”.

“என்ன சொல்வாங்க?”

“பேச்சை மாத்திடுவாங்க. `இது கேக்கக்கூடாத கேள்வி’ அப்படின்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். போனா, அம்மாகூடத்தான் போகணும், இல்லியா? மத்த பொம்பளைங்களுக்குப் பயம் — தனியா இருக்கிறவ! எங்கே, நம்ப புருஷனை..,” மேலே சொல்ல இயலாது, இழுப்பதுபோல் சைகை காட்டினாள் ராதிகா.

“அது அப்போ! காலம் மாறிடுச்சு, ராதி!” என்ற ரவிக்கு ஒரு வரண்ட புன்னகையைப் பதிலாக அளித்தாள் ராதிகா, `நீ உலகத்தைப் புரிந்துகொண்ட லட்சணம் இவ்வளவுதான்!” என்பதுபோல்.

License

காதலர் பூங்கா Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *