49 கழுதையின் கால்

காலையில் எழுந்த மகள் சமையலறைப் பக்கமே வராததால், பாக்கியம் அவளைத் தேடிக்கொண்டு போனாள்.

“ரஞ்சி! மணி பத்தாகுது. இன்னும் பசியாறலியே நீ! மீஹூன் பெரட்டி வெச்சிருக்கேன், வாடி!” என்று கரிசனத்துடன் அழைத்தாள்.

சம்பந்தமில்லாது, “அம்மா! இன்னிக்கு அதைப் பிடிச்சுட்டா.., என் கதி?” என்று என்னமோ கேட்டாள் மகள்.

“என்ன சொல்றே? வர வர..!”

“மறந்துட்டீங்களா? அவர்.. இன்னிக்கு.. பொண்ணுபாக்க..!” திணறித் திணறி வந்தன வார்த்தைகள்.

”அதுக்கென்ன இப்போ? கல்யாணமேவா ஆயிடுச்சு? மொதல்லே அவருக்குப் பொண்ணைப் பிடிக்கணும்..,” நடைமுறையை விளக்க ஆரம்பித்தாள் பாக்கியம்.

“அவருக்கு எந்தப் பொண்ணையும் பிடிச்சுடும். என்னைப் பாத்தே மயங்கினவரு இல்ல!”

“இவன் குணம் தெரிஞ்சும், நீ இத்தனை நாள் தனியா விட்டிருக்கக் கூடாது!” மரியாதை தேய்ந்தது.

எப்போதும் தன் பக்கமே பேசும் தாயே தன்னிடம் குற்றம் கண்டிபிடிக்க, கண்களை ஒரு கையால் மூடியபடி, தலையைக் குனிந்துகொண்டாள் ரஞ்சிதம்.

“ஹூம்!” பாக்கியம் ஒரு பெருமூச்சு விட்டாள். “சாயந்திரமா அப்பாவை ஒன்னை அந்த வீட்டுக்குக் கொண்டுபோய் விடச்சொல்றேன். அவன் கையையோ, காலையோ பிடிச்சு..! `காரியம் ஆகணும்னா, கழுதைக் காலைக்கூடப் பிடிக்கணும்’னு சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க!”

இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மணி, மத்தியானமே தலைமறைவானார்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *