12 கல்யாண நாள்

காலையில் எழுந்திருந்தபோதே ரஞ்சிதம் மிகவும் உற்சாகமாக இருந்தாள்.

அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தைப் பாராட்டாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவனைப் பார்த்து ஒரு செல்லக்கோபம் எழுந்தது.

ஒரு வருடத்திற்குமுன் அவர் யாரோ, தான் யாரோ! `கல்யாணம்’ என்று ஒரே நாளில் நடந்து முடிந்த அந்த வைபவம்தான் அவர்களிருவரையும் என்னமாகப் பிணைத்துவிட்டது!

அவன் கண்விழிப்பதாகத் தெரியவில்லை. வானொலியை அலறவிட்டாள். அந்தக் காலை நேரத்திலேயே, `மன்மத ராசா!’ என்று ஒல்லிக்குச்சி காதலனை மெச்சிக்கொண்டிருந்தாள் கதாநாயகி. ரஞ்சியின் மனநிலையைப் பிரதிபலித்தத பாடல்!

வைத்தி கண்ணை விழித்து சோம்பல் முறித்தான்.

“என்ன, இங்கேயே நின்னு என்னைப் பாத்து முழிச்சுக்கிட்டு இருக்கே?”

பக்கத்து வீட்டு டி.வி. அப்பளத்தின் சுவையை மெச்சிக்கொண்டிருந்தது. கூடவே வெங்காயம் வதங்கும் மணமும், குழந்தையின் அழுகைச் சத்தமும் பல புலன்களையும் ஒருங்கே தாக்க, அவனுடைய தூக்கம் சற்றே கலைந்தது. அடுத்த கேள்வி தானாகப் பிறந்தது. “பசியாற சுடச்சுட ஏதாவது இருக்கா?”

சுடச்சுட ஏதோ சொல்ல வாயெடுத்தவள், தன்னை அட க்கிக்கொண்டாள். `பொறுமை, பொறுமை! இன்று நல்ல நாள்!’ என்று தனக்குத்தானே உபதேசித்துக்கொண்டாள்.

“ஏங்க! இன்னிக்கு என்ன நாள் நினைவிருக்கா?” என்று தலையைச் சாய்த்து, மையலுடன் அவனைப் பார்த்தாள். வலது கை தாலிச்சங்கிலியுடன் விளையாடியது, குறிப்பாக எதையோ உணர்த்துவதுபோல்.

வைத்திக்கு தூக்கம் முழுமையாகக் கலைந்திருக்கவில்லை. இவள் என்னடா, காலை வேளையில் இப்படி வேண்டாத புதிரெல்லாம் போட்டு இருக்கிற சொற்ப மூளையையும் குழப்புகிறாளே என்ற எரிச்சலுடன், “இதையெல்லாம் யாரு ஞாபகம் வெச்சுக்கறாங்க! அதுக்காகத்தானே காலண்டர் போடறாங்க!” என்றான்.

“யோசிச்சுச் சொல்லுங்க, டார்லிங்!” மனைவி கொஞ்சினாள்.

“இரு!” சுவற்றில் மாட்டியிருந்த, நர்த்தன விநாயகர் படம் போட்டிருந்த காலண்டரின் அருகே சென்றான் வைத்தி. (பலசரக்குக்கடையில் நான்கு மாதத்திற்கான பாக்கியைத் தீர்த்ததும், கடந்த ஆண்டு இறுதியில் மனமுவந்து கடைக்காரர் கொடுத்திருந்தது அது).

தூக்கக் கலக்கத்தில் மீண்டும் குழப்பம். “நேத்து என்ன கிழமை?”

“திங்கள்!” பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள்.

“அப்போ.., இன்னிக்குச் செவ்வாய்!”

“ஆகா! அபாரக் கண்டுபிடிப்பு! இப்போ நான் அதையா கேட்டேன்?” கோபமும் அழுகையும் கலந்து அவள் குரல் வெளிப்பட, எதுவும் புரியாது விழித்தான் வைத்தி.

“இது எத்தனையாவது மாசம்?” ரஞ்சி விடாமல் கேட்டாள்.

உடனே, வைத்தியின் பார்வை ஆர்வத்துடன் அவள் வயிற்றில் பதிந்தது. “சொல்லவே இல்லியே! கள்ளி!”

“சீ! அதில்ல,” என்று அவள் மூக்கைச் சுளித்தபடி சொல்ல, அவன் மீண்டும் சுவற்றருகே சென்று, “ஜனவரி!” என்று பதிலளித்தான், சற்று பெருமையுடன்.

“இன்னிக்கு..,” சற்று நிறுத்தினாள், ஒரு சஸ்பென்சுக்காக. “ஜனவரி இருபத்தி எட்டு!”

“ஓகோ! சம்பள நாளா? நீ..ளமா பட்டியல் போட்டு வெச்சுருப்பியே!”

“எனக்கொண்ணும் வேணாம்!” ரஞ்சி பிணங்கினாள். ”கல்யாண நாளைக்கூட ஞாபகம் வெச்சுக்க முடியாதவர்கிட்டேயிருந்து!”

“கல்யாண நாளா! அட!” ஒரேடியாக ஆச்சரியப்பட்டான் வைத்தி. ஒனக்கா?”

இன்று ஒரு நாளாவது சண்டை போடாமல் இருக்கலாம் என்ற் பார்த்தால், நடக்காது போலிருக்கிறதே என்ற ஆயாசம் உண்டாயிற்று அவளுக்கு. “இல்ல. ஒங்களுக்கு மட்டும்தான்!”

அவன் சமாளித்துக்கொண்டான். “ஒனக்கு மூளையே கிடையாது, ரஞ்சி! நம்ப கல்யாணம் ஜனவரி இருபத்தெட்டில்ல!”

“இன்னிக்கு என்ன தேதி?”

`இது என்னடா தொணதொணப்பாப் போச்சு!’ என்று முணுமுணுத்தபடி, வைத்தி மீண்டும் காலண்டரின் உதவியை நாட, ரஞ்சி தலையில் அடித்துக்கொண்டாள்.

காலண்டரில் ஒரு விரல் வைத்துத் தேடியவன், “அட! இன்னிக்கும் இருபத்தெட்டுதான்! ரஞ்சி! இங்க வந்து பாரேன்!” என்று குரல் கொடுத்தான்.

அவனுடைய உற்சாகம் அவளைப் பற்றிக்கொள்ளவில்லை. “நீங்களே இன்னும் ரெண்டு தடவை நல்லாப் பாத்துக்குங்க. மறந்துடப்போகுது!” என்றாள் ஏளனமாக.

அதைக் கவனியாது, “அடேயப்பா! முழுசா ஒரு வருஷம் நான் ஒன்னைத் தாக்குப் பிடிச்சிருக்கேனா!” என்று பிரமித்தான் வைத்தி.

முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, “”யாரு, யாரை சகிச்சுக்கிட்டு வாழ்ந்திருக்கோம்கிற ஆராய்ச்சியை அப்புற் வெச்சுக்கலாம்!” என்ற மனைவி கூற, “சரி. இப்ப என்ன செய்யலாம்கிறே?” என்ற வைத்தியின் கண்கள், கட்டிலில் தன் பக்கத்தில் இருந்த காலி இடத்தை ஜாடை காட்டின. முகத்தில் விஷமப் புன்னகை.

ரஞ்சியின் கோபம் வந்த சுவடு தெரியாது மறைந்தது. “ஆபீசுக்கு நேரமாகல? புறப்படற வழியைப் பாருங்க!” என்று விரட்டினாள், வாய்கொள்ளாச் சிரிப்புடன்.

“இந்த வீட்டு ராணி சொன்னா சரி!” என்று பவ்யமாகச் சொன்னவன், ஏதோ நினைவுக்கு வந்தவனாக, “கல்யாண நாளுன்னா என்னென்ன செய்வாங்க?” என்று கேட்டான் அப்பாவித்தனமாக. கூடவே, “ஏன் கேக்கறேன்னா, எனக்கு இதுதான் மொதல் கல்யாணம்,” என்றும் சேர்த்துக்கொண்டான்.

ரஞ்சிதத்திற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. விருக்கென்று உள்ளே போனாள்.

பாத்திரங்கள் கடமுடா என்று உருட்டப்பட, அவளுடைய மனம் அதற்குமேல் இரைச்சலிட்டது. `கல்யாண நாளுன்னதும் அப்படியே என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு குதிப்பாரு, `ஆபீஸ் கெடக்கு, இன்னிக்கு பூராவும் ஒன் பக்கத்திலேயேதான் இருக்கப்போறேன்’னு சொல்வாருன்னு பாத்தா..!’

நேரம் அதிகரிக்க அதிகரிக்க, அவள் கோபம் மறைந்து, அந்த இடத்தை நம்பிக்கை ஆட்கொண்டது. `கடைக்குத்தான் போயிருப்பாரு, எனக்குப் புடவை எடுக்க!’

அந்த எதிர்பார்ப்பில், காலையில் எழுந்த ஏமாற்றம்கூட மறைந்தது.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *