31 கணவரின் கரிசனம்

அந்தக் குடும்பத்தினர் — பாக்கியம் நீங்கலாக — காத்துக்கொண்டிருந்த வெள்ளிக்கிழமை ஒருவாறாக வந்தது.

மணி சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். “குளிக்கப்போறியா, பாக்கியம்?” என்று அவளை வம்புக்கு இழுத்தார்.

“பின்னே? தோளில துண்டு, மாத்துப்புடவை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கடைவீதிக்கா போவாங்க?”

“ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும் வள்ளுனு விழறே?” என்று முனகினார் மணி.

“எனக்கு வர்ற கோபத்துக்கு..!” என்று பல்லைக் கடித்தாள் பாக்கியம்.

“வயசாயிடுச்சா? முந்தி மாதிரி என்னால எதையும் தாங்க முடியல. ஒன் கொரலைக் கேட்டாலே படபடன்னு வருது!”என்று மூக்கால் அழுதார் மணி.

“ரொம்ப பயந்தமாதிரிதான்!” முணுமுணுத்தாள். “எதுக்கு இப்படி காலை வேளையில எங்கிட்ட வாய்குடுக்கறீங்க?”

முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டார் மணி. “நான் ஒண்..ணுமே தப்பா சொல்லலியே! ஒன் முகமெல்லாம் `சவசவ’ன்னு, தண்ணி கோத்தமாதிரி இருக்கே, இதில குளிக்கப்போறியான்னுதான்..!”

“என்ன அளக்கறீங்க?”

அந்த மிரட்டலுக்கும் அஞ்சாது, “இரு, இரு! கண்ணுகூட கலங்கலா..!” என்றபடி, அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவர், நெற்றியைத் தொடப்போனார்.

அவரது ஸ்பரிசத்தையே வெறுத்தவள்போல, பாக்கியம் அறைக்குள் விரைந்து, சுவற்றில் பதித்திருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள். உள்ளங்கை, புறங்கை இரண்டையும் மாற்றி மாற்றி நெற்றியிலும், கழுத்திலும் வைத்துக்கொண்டும், அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

முகத்தில் தோன்றிய வெற்றிப் புன்னகையை மறைத்தபடி, “அப்படியே படுத்துக்க, பாக்கியம். நீ ஒரு வேலையும் செய்ய வேணாம்!” என்றார் அன்புக் கணவர்.

பாக்கியத்தின் முகம் தொங்கிப்போயிற்று. “வெள்ளிக்கிழமையும், அதுவுமா..!”

“ஒனக்கும் சேர்த்து, நான் ரெண்டு முழுக்கு போட்டுடறேன்”.

“சமையல்?”

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ நிம்மதியா தூங்கும்மா. ஒன் ஒடம்புதானே முக்கியம்!” என்றுவிட்டு, அதற்குமேலும் அங்கு நின்றால், தான் உரக்கச் சிரித்தாலும் சிரித்துவிடுவோம் என்று பயந்து, மணி வேகமாக வெளியில் சென்றார்.

`ஏதோ தப்பு பண்ணிட்டு வந்திருக்காரு! மனசாட்சியோட உறுத்தல் தாங்கல. அதான், ரொம்ப நல்லவர்மாதிரி வேஷம்!’ என்ற ரீதியில், படுத்திருந்த பாக்கியத்தின் யோசனை போயிற்று.

`அப்பாடி! ரொம்ப முரண்டு பிடிக்காம படுத்துட்டா. இவ வேற சமைச்சு, ரவி வேற வாங்கிட்டு வந்துட்டா..? நல்ல வேளை!’ என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார் மணி.

License

கணவரின் கரிசனம் Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *