4 கடற்கரையில் காதலர்கள்

தீபகற்ப மலேசியாவில், கோலாலம்பூரின் வடமேற்குப் பகுதியிலிருந்த போர்ட் டிக்சனின் கடற்கரைக் காற்றை அனுபவித்தபடி ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தனர் அந்த வயோதிகத் தம்பதியினர் — அதே கடற்கரையில் ரவியும், அவனுடைய காதலியும் கைகோர்த்தபடி எதிர் திசையிலிருந்து நடந்து வந்துகொண்டிருப்பதை உணராது!

“எங்கப்பா அம்மாவைப் பாக்க ரெண்டு நாள் லீவு போட்டுட்டு நான் போனேனா! அவங்க ஜாலியா எங்கேயோ கிளம்பிட்டு இருந்தாங்க. அதுவும் நல்லதாப் போச்சு!” பேசிக்கொண்டே வந்தவனது பார்வை சற்று தூரத்தில் நிலைத்தது.

திகைத்துப்போனவனாக, “அங்க…அங்க..,” என்று கையை நீட்ட, அவனுடைய தடுமாற்றத்தைப் புரிந்துகொள்ளாது, “இந்த வயசிலேயும் எவ்வளவு அந்நியோன்னியமா இருக்காங்க!” என்று பாராட்டினாள் ராதிகா.

பெரியவர் தன் கையிலிருந்த சிறு கிண்ணத்திலிருந்து வேகவைத்த சோளத்தை தன் மனைவிக்கு ஊட்டப்போக, அவள் அதைத் தடுத்து, கையில் வாங்கிக்கொண்டதை சுவாரசியமாகப் பார்த்தாள்.

“அப்பா!” ஓசையே எழவில்லை அவனுடைய தொண்டையிலிருந்து.

“நல்லதாப் போச்சு! என்னை அறிமுகப்படுத்தி வைங்க, ரவி!” கலகலத்தாள் காதலி.

“வேற வினையே வேண்டாம். அவங்க ரொம்ப பழங்காலம்! காதல், கீதல் எல்லாம் அவங்க அகராதியிலேயே கிடையாது. அப்படி இருந்தா, `கெட்ட வார்த்தைகள்’ என்கிற பகுதியிலே இருக்கும். அவங்க பக்கம் திரும்பாம நடந்து போயிடலாம், வாயேன்!” அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான் ரவி.

அந்த காதல் ஜோடியை பின்புறத்திலிருந்து பார்த்தாள் பாக்கியம். “நாம்பளும் அப்படி.. அலையோட நடக்கலாமா?”

“யாரோ இளவட்டம்! நம்ப வயசிலே அதெல்லாம் முடியுமா? ராத்திரி காலைக் கொடையும்!” என்றார் மணி, அசுவாரசியமாக.

“உக்கும்! இப்படி வயசை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கத்தான் என்னை இங்கே கூட்டிட்டு வந்தீங்களாக்கும்!” செல்லச் சிணுங்கல்.

“சரி, வா! எதுக்குக் கொறை? ராத்திரி என் காலைப் பிடிச்சுவிடத்தான் நீ இருக்கியே!” என்று கணவர் எழ, பாக்கியம் முறைக்க, “சரி. சரி. நான் ஒன் காலைப் பிடிச்சு விடுவேனாம்!” என்று சமாதானக் கொடி வீசினார்.

திரும்பிப் பார்த்த ரவி, “போச்சு! நம்பளைப் பாத்துட்டாங்க!” என்று ஓடாதகுறையாக நடந்தான்.

அந்த அரைகுறை வெளிச்சத்தில் கண் சரியாகத் தெரியாது, “ஏங்க? அந்தப் பையன்.. அசப்பிலே நம்ப ரவி மாதிரியே இல்ல?” என்று பாக்கியம் கேட்கவும், மணி சிரித்தார். “அடி மண்டு! நீ பெத்த பிள்ளையையே ஒனக்கு அடையாளம் தெரியலியா?”

குழப்பத்துடன் கையை உதறினாள் பாக்கியம். “வெக்கக்கேடு! சாகக் கிடக்கிற நாத்தனார் வீட்டுக்குப் போறதாச் சொல்லிட்டு..!”

“அவன்கூட யாரு, பாத்தியா?”

அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. “அவன் நம்பளைப் பாத்துட்டா, மானம் போயிடும். அதுக்குள்ளே ஓடிடலாம், வாங்க!” என்றாள் வற்புறுத்தலாக.

மணியோ, “ஓடற வயசா இது? அதோட, நாம்ப எதுக்கு ஓடி ஒளியணும்? நேத்துப் பிறந்த பய, அவனுக்கெல்லாம் துணை கேக்குது! நாம்ப ஒண்ணா, சந்தோஷமா இருக்கிறதிலே என்ன தப்பு?” என்றார் உறுதியான குரலில்.

கணவரைப் புதிய மரியாதையுடன் பார்த்தாள் பாக்கியம்.

“வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்,” என்று அபஸ்வரமாகப் பாடிய மணி, கன உற்சாகமாக காலை அகட்டி வைத்தார். அப்போது பார்த்து, ஒரு பெரிய அலை வர வேண்டுமா!

“ரவி!” அலறினாள் ராதிகா. “ஒங்கப்பா தண்ணியில விழுந்துட்டாரு!”

“ஐயையோ! அவருக்கு நீஞ்சத் தெரியாதே!” என்று கரிசனப்பட்ட மகன், “எனக்கும்தான தெரியாது!” என்றபடி, அசையாது நின்றான்.

“ஆகா! அருமையான மகன்தான்! போய், ஒரு கை குடுத்து தூக்கி விடுவீங்களா..!”

“ம்! ஒனகென்ன தெரியும் எங்கப்பாவோட கனம்!” என்று முணுமுணுத்தாலும், காதலியின் வார்த்தையை கல்யாணத்துக்கு முன்னரே தட்டத் துணியாது, விரைந்தான் ரவி.

தந்தையைத் தூக்கிவிட்டபோது, “இங்க எங்கப்பா வந்தீங்க ரெண்டு பேரும்?” என்று புன்னகையுடன் கேட்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

“கத்துக்கடா! லேடீஸை அப்பப்ப தாஜா பண்ணி வெச்சுக்கணும்!” என்று கண்ண்டித்தார் தந்தை.

அப்போது வந்த ஓர் அலை இருவரையுமே கீழே தள்ளியது.

பதறியபடி அவர்கள் அருகில் ஓடிவந்த பாக்கியமும் ராதிகாவும் அப்படித்தான் அறிமுகம் ஆனார்கள்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *