14 ஊர் வாய்

மிளகு குழம்பை சாதத்தில் கலந்து, ரசித்துச் சாப்பிடபடியே மணி கேட்டார்: “எங்கே, ரவியைக் கொஞ்ச நாளாக் காணும்?”

“அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்தானில்ல? அவளுக்கு நான் ஆரத்தி எடுத்து, உள்ளே கூப்பிடலேன்னு கோபம் அவனுக்கு! கெடக்கான்!”

அலட்சியமாகப் பேசினாலும், பாக்கியத்துக்கும் உள்ளூரக் கவலை. இருந்திருந்து, ஒரு ஆண்பிள்ளை. அழகன். பெரிய படிப்பு படித்து, நல்ல வேலையிலும் இருப்பவன். அவனாலாவது சமூகத்தில் மேலும் ஒரு படி உயரலாம் என்று கனவு கண்டிருந்தவளுக்கு, இப்படிச் சறுக்குகிறானே என்று வருத்தம் ஏற்பட்டது.

அன்றுதான் எவ்வளவு தர்க்கம் செய்தான்! `எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவளுக்கும்..,’என்று ஏதேதோ பிதற்றவில்லை?

`அவ நல்ல பொண்ணாவே இருக்கட்டும். ஆனா, கல்யாணத்துக்கு வர்றவங்க, `பொண்ணோட அம்மா பூவும், பொட்டுமா இருக்காங்களே! அப்பா எங்கே?’ன்னு கேக்கமாட்டாங்க?’ என்று அவள் உலக ஞானத்தைப் போதிக்க முயன்றும், அவனுடைய இளம் ரத்தம் அதை ஏற்க மறுத்தது.

`அவங்க யாரு கேக்க?’ என்று இரைந்தான்.

`ஒலகத்தை ஒதுக்கிட்டு, நாம்ப மட்டும் தனிச்சு இருந்திட முடியாதுடா!’ என்று கெஞ்சலில் இறங்கினாள் அன்று.

`உள்ளதைச் சொல்லிட்டுப்போறது! அவங்கப்பா வேற பொண்ணோட தொடர்பு வெச்சிருந்தார். அதனால..!’

`சிரிப்பாங்க!’ அவன் முடிப்பதற்கள் பாக்கியம் இடைவெட்டினாள். `அவரு ஆம்பளை! ஒண்ணில்ல, ரெண்டு பொண்ணுங்களைச் சேத்துக்கலாம். அவரோட சந்தோசம்தான் முக்கியம்னு இல்ல இருந்திருக்கணும் அவங்கம்மா? அதை விட்டுட்டு, இப்படி.. நாலு பேர் வாயில புகுந்து வர்றமாதிரி..,’ மிகச் சன்னமான குரலில் முடித்தாள்.

`அப்பா அந்த மாதிரி ஏதாவது செஞ்சிருந்தா, அப்போ புரியும் ஒங்களுக்கு, அந்தம்மா பட்ட வேதனை!’

`என்னை ஏண்டா இழுக்கறே?’ என்று அன்று பரிதாபமாகக் கேட்கத்தான் முடிந்தது மணியால்.

`சண்டையை ஆரம்பித்தவளே இன்று மகனுக்காக ஏங்குகிறாள்! அம்மாவும் மகனும் எப்படியோ போகட்டும்!’ என்று அலுத்தபடி, தனது செடிகளை திரவ உரத்தால் குளிப்பாட்ட தோட்டத்துக்கு நடந்தார் மணி.

License

ஊர் வாய் Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *