26 இளைத்த தொந்தி

தட்டியவுடன் வீட்டு வாசற்கதவு திறக்கப்படவில்லை.

“அம்மா உள்ளே வேலையா இருக்காங்க போலயிருக்கு!” என்றபடி, ரஞ்சி தன் கைப்பையிலிருந்த சாவியைக்கொண்டு அதைத் திறந்தாள்.

நுழைந்தவுடன், ஹாலில் சோகமே உருவாக, உட்கார்ந்து கொண்டிருந்த பாக்கியம்தான் அவர்கள் கண்ணில் பட்டாள். அவள் பக்கத்தில் துணிமணிகள் அடங்கிய பை.

`இப்போ எதுக்கு ஆயத்தமோ!’ என்று அலுத்து, புருவத்தை உயர்த்தியபடி, வைத்தி உள்ளே விரைந்தான்.

“என்னம்மா?”

மகளைப் பாராது, மனத்தாங்கலுடன் பதிலளித்தாள் பாக்கியம். “நீங்க ரெண்டு பேரும்தான் சந்தோஷமா இருக்கீங்களே! நான் ஒருத்தி எதுக்கு, குறுக்கே?”

“நீங்க என்ன, சண்டை தீர்த்து வைக்கவா இங்க வந்தீங்க?” லேசாகச் சிரித்தபடி பேசினாலும், ரஞ்சிதத்திற்கும் எரிச்சலாக இருந்தது. அவர் சொல்வதில் என்ன தப்பு, ஆனாலும் இந்த அம்மா இப்படி பாடாய் படுத்த வேண்டாம் என்று தனக்குள் அலுத்துக்கொண்டாள்.

“அவர் என்ன சொல்றாரு? நான் இருக்கிறது தொந்தரவா இருக்குதாமா?” முகத்தை முழ நீளம் வைத்துக்கொண்டு கேட்டாள் பாக்கியம்.

உள்ளேயிருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த வைத்தியின் மூளையில், `இதுதான் சமயம்!’ என்று ஒரு பொறி பறக்க, விரைந்து வெளியே வந்தான். “அத்தை! இன்னிக்கு மத்தியானம் லெபோ அம்பாங்கில, சாப்பாட்டுக்கடையில மாமாவைப் பாத்தேன். பாவம், நீங்க இல்லாம சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படறாரு. எளைச்சுத் துரும்பா ஆயிட்டாரு, போங்க” என்று அளந்தான்.

சந்தர்ப்பம் புரியாது, “அப்பாவைப் பாத்தீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லியே!” என்று குறுக்கிட்டாள் ரஞ்சி.

“படம் பாக்கற சுவாரசியத்தில மறந்துட்டேன், ரஞ்சி!” என, அவள் முறைத்தாள்.

பாக்கியத்தின் கவலை திசை திரும்பியது. “ஐயோ! எளைச்சுப் போயிட்டாரா? தொப்பையும், தொந்தியுமா அழ..கா இருப்பாரே!”

பந்து விளையாட்டுகள் பார்த்திருந்ததில், எப்போது அடிக்க வேண்டும் என்று வைத்திக்குத் தெரிந்திருந்தது. “எனக்கு மாமாவைப் பாத்தா பாவமா இருந்திச்சு. நீங்க இங்க எவ்வளவு நாள் தங்கியிருந்தாலும், எங்களுக்குச் சந்தோஷம்தான். ஆனா, மத்தவங்களையும் நினைச்சுப் பாக்கணுமில்ல?” என்று ஒரேயடியாக உருக, ரஞ்சி ஆத்திரம் தாங்காது பல்லைக் கடித்துக்கொண்டாள்.

அவளைக் கவனியாதவன்போல, “அத்தை! நாளைக்கு நானே சாவகாசமா ஒங்களைக் கொண்டு விடறேன். கவலைப்படாம, சாப்பிட்டுட்டுத் தூங்குங்க,” என்றான் கரிசனத்துடன்.

“என் ஒருத்திக்காக என்ன சமைக்கிறது! நீங்க எப்படியும் சாப்பிட்டுட்டுதான் வருவீங்கன்னு தெரியும்!” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள் பாக்கியம்.

மனைவியைப் பார்த்து முறைத்து, `பசி’ என்று வயிற்றில் ஒரு விரலால் வட்டம் போட்டான் வைத்தி.

அவனை அலட்சியம் செய்துவிட்டு, “நீங்க தண்ணி ஏதாவது கலக்கிக் குடிச்சுட்டுத் தூங்குங்கம்மா. வயத்தைக் காயப்போடாதீங்க. கெட்ட கனவா வரும்!” என்று தாயைப் பரிந்தாள் அவள்.

அவர்களது அறைக்குள் நுழைந்ததுமே அவள்மேல் பாய்ந்தான் வைத்தி. “வர்ற வழியில சாப்பிடலாம்னு அடிச்சுக்கிட்டேனே! கேட்டியா?”

“ஒரு வேளை பட்டினி கிடந்தா, ஒடம்புக்கு நல்லதுதான்!”

“ஒன் ஒடம்பே நல்லா இருக்கட்டும். நான் எதுக்காக வயத்தைக் காயப்போடணும்? கெட்ட கனவு வர்றதுக்கா?” வந்த வேகத்திலேயே வெளியே போனான்.

அறைக்குள் படுத்திருந்த பாக்கியம் கலக்கத்துடன் எழுந்து உட்கார்ந்தாள். `வீட்டில பெரியவங்க இருக்காங்களேங்கிற பயம் துளிக்கூட இல்லாம..! ஐயோ! பெண்டாட்டியே வேணாம்னு எப்போ இவளைப் பிறந்த வீட்டுக்கே திருப்பி அனுப்பிடப் போறானோ இந்த காமுகன்! அப்பனே! பத்துமலை முருகா! நீதாண்டாப்பா இவளுக்குத் துணை! ஒனக்குக் கண் அவிஞ்சு போச்சா? நீ இருக்கிற எடத்தில இப்படி ஒரு அநியாயம் நடக்குதே!” என்று இரவு பூராவும் தனக்குள் பேசிக் கொள்வதும், கடவுளை மாற்றி மாற்றி பிரார்த்திப்பதும், நிந்திப்பதுமாகப் பொழுதைக் கழித்தாள் பாக்கியம்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *