36 இளமை வைத்தியம்

கண்ணாடிமுன் நின்று, பூப்போட்ட சட்டையில் தன்னழகை ரசித்துக் கொண்டிருந்தார் மணி. செண்டை நாலைந்து தடவை விரலில் தடவி, பின்கழுத்து, அக்குள் என்று எக்கச்சக்கமாய் பூசிக்கொண்டார்.

`மன்மத லீலையை’ என்று முனகிவிட்டு, “சே!” என்று தம்மைத் தாமே கடிந்துகொண்டு, “நேத்து ராத்திரி யம்மா!” என்று சற்றே நாகரிகமாக மாற்றிக்கொண்டார். இப்போது வரும் படப்பாடல்கள் காதலைவிட காமத்தையே தூண்டுகின்றன என்பது அவரது அபிப்ராயம்.

சமையலறையிலிருந்து கரண்டியுடன் வெளியே வந்தாள் பாக்கியம்.

மூச்சை இழுத்துவிட்டாள் இரண்டொரு முறை.

`என்ன, ஒரே நாத்தம்? வீட்டுக்குள்ளே எலி, கிலி செத்து வெச்சுடுச்சா?’ என்று மோப்பம் பிடித்தபடி நேராக நடந்தவள், அறைக்குள் நின்றிருந்த கணவரைக் கண்டதும், மீண்டும் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். அதிர்ச்சியும் அருவருப்பும் ஒருங்கே எழுந்தன.

அவளைக் கவனியாததுபோல, தலையிலிருந்த நாலைந்து முடிகளைச் சீவியபடி, மணி தன்பாட்டில் விசிலடித்துக் கொண்டிருந்தார்:`ஐ லவ் யூ!’

சீப்பை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டுவிட்டு, கண்ணாடியை நோக்கி ஒரு கரத்தை நீட்டியபடி பாட ஆரம்பித்தார்: `அன்பே வா! அழைக்கின்றதென்றன் மூச்சே!’

அதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாது, அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள் பாக்கியம்.

`இந்தக் கெழவருக்கு என்ன, மூளை பெரண்டு போச்சா? இங்க நான் ஒருத்தி போற நாளை எண்ணிக்கிட்டு இருக்கேன்! காதல் பாட்டா கேக்குது இவருக்கு!

`ஐ லவ் யூ!’வாமே! எங்கிட்ட ஒருவாட்டி சொல்லியிருப்பாரா அப்படி?’ என்று தன்னிரக்கத்துடன் யோசித்தவள், தோளைக் குலுக்கிக்கொண்டாள். `யாருக்கு நெனப்பு இருக்கு!’

`என் ஒடம்பிலே மூச்சு ஒட்டி இருக்கிறப்போவே இந்த ஆட்டம் போடறாரே, மனுசன்! நான் கண்ணை மூடிட்டா, பத்தாம் நாளே ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணாப் பாத்து..!’ கன்னத்தில் கை கைத்தபடி உட்கார்ந்திருந்த பாக்கியம் அவளருகே வந்து நின்ற மணியைக் கவனிக்கவில்லை.

“எப்படி நம்ப அலங்காரம்? இருபது வயசு கொறைச்சலாக் காட்டலே?” என்று பெருமையுடன் கேட்டவரை முறைத்தாள்.

அவளுடைய மன ஓட்டத்தைப்புரிந்துகொள்ளாது, “பார்! ரசிச்சுப் பார்!” போஸ் கொடுத்தார்.

“ரசிக்க வேண்டியவங்க ரசிச்சா சரி!” வெறுப்பு மேலிட, பாக்கியம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

`இந்த உத்தியும் பலிக்கவில்லையே!’ என்ற நிராசை தாங்காது, அவளையே சிறிது நேரம் பார்த்துகொண்டிருந்துவிட்டு, சட்டையைக் கழற்றிப்போட்டார்.

மூக்கின் அருகை கையல் விசிறியபடி உட்கார்ந்திருந்த மனைவியிடம், “என்னால முடிஞ்சதை எல்லாம் செஞ்சு பாத்துட்டேன். இனிமே ஒன்னை மாத்த யாராலும் முடியாது!” என்று கசந்து பேசினார்.

“அதுக்கு என்ன செய்யப்போறீங்க? என்னைத் தள்ளி வைக்கப் போறீங்களா?” அவர்மீதே பாய்ந்தாள்.

“நான் ஒண்ணும் செய்யப் போறதில்லப்பா!” என்றார் மணி, முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு.

இவள் கொஞ்சகாலம் எங்காவது தொலைந்து போனாலாவது தான் நிம்மதியாக இருக்க முடியுமே என்றெண்ணி, “நம்ப வயசுக்காரங்க ரொம்ப பேர் செத்துப்போயிட்டாங்க. இல்ல, அவங்களுக்கு கண்ணு சரியாத் தெரியறதில்ல. கண்ணு தெரிஞ்சா, காது கேக்கறது கிடையாது. சிநேகிதங்களுக்கோ மறதி! எங்கேதான் போறது!” என்று ஏதேதோ சொல்ல ஆரம்பித்தார்.

“ஐயோ, ஐயோ! எதுக்கு ஒரேயடியா மூக்கால அழறீங்க? தங்கச்சி போனதிலேருந்து ஒங்களுக்கு என்னவோதான் ஆயிடுச்சு!” என்று பாக்கியம் தலையிலடித்துக்கொண்டாள். “எனக்கா போக்கிடம் இல்ல? எனக்கு மக ஒருத்தி இருக்கா! அதை மறந்திட்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசறீங்களே!”

தன் உபாயம் பலித்ததே என்று மணிக்குக் கொள்ளை சந்தோஷம். “அடடே, ரஞ்சி! எனக்கு இது தோணல, பாரேன்! நீ போய் அவகூட இருந்துட்டு வா. ஒனக்கும் ஒரு நல்ல மாறுதலா இருக்கும்!”

பாக்கியத்தின் முகமும் மலர்ந்தது. “அங்கே என்னை ஒரு வேலை செய விடமாட்டா ரஞ்சி! மாப்பிள்ளையும், `அத்தே, அத்தே’ன்னு ராஜமரியாதை செய்வாரு! தாயில்லாப் பையன், பாவம்! என்னைக் கண்டா உசிரு!”

“இன்னும் என்ன யோசனை? இன்னிக்கே போ, பாக்கியம். இங்க என்ன, பிள்ளையா, குட்டியா? நல்லா, ஒன் உடம்பைத் தேத்திக்கிட்டு வந்து சேரு!” என்று அவளைத் துரத்தாதகுறையாகச் சொன்னார் மணி. அப்படியே, வைத்தியிடம் மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *