47 இன்னொரு கல்யாணம்

வாசலில் நின்றிருந்தார் மணி. வழக்கமான வேட்டி, பனியனுடன் இல்லாது, முழுக்கை சட்டையும், முழுநீள கால்சட்டையும் அணிந்து, வெளியே புறப்படத் தயாராக இருந்தார். வழக்கம்போல் செடிகளிடம் கவனத்தைச் செலுத்த முடியாது, எதையோ நினைத்துக்கொள்வதும், தனக்குத்தானே சிரிப்பதுமாக இருந்தார்.

அவரைக் கவனிக்காது, ரவி காரில் ஏறப்போனான்.

உரிமையுடன், பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார், “போற வழியிலே என்னை இறக்கி விடுடா,” என்று கோரிக்கை வைத்தபடி.

உள்ளே ஏறக்கூடத் தோன்றாது, அவரை ஏற இறங்கப் பார்த்தபடி, “எங்கேப்பா போறீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஏண்டா, பொறப்படறப்போவே அபசகுனமா..!” முகத்தைச் சுளித்தார்.

“நீங்க போற எடம் தெரிஞ்ச இல்ல, நான் அங்கே கொண்டுபோய் விடமுடியும்!” என்று சிரித்தவன், “ஒங்களுக்குக்கூட சகுனத்திலே நம்பிக்கை வந்துடுச்சாப்பா?” என்று கேட்டான், சிறிது கேலியும், சிறிது ஆச்சரியமுமாக.

“சாதாரணமாக, கிடையாதுதான். இருந்தாலும், கல்யாண விஷயம் பேசப் போறப்போ..!”

“அடி சக்கை! வைத்திக்குப் போட்டியா, ரஞ்சிக்கும் இன்னொரு கல்யாணமா!” வேண்டுமென்றே உரக்கக் கத்தினான்.

முதல் நாளிரவு பன்னிரண்டு மணி தாண்டி படம் பார்த்த களைப்பில், ரஞ்சி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள்.

பாக்கியம்தான் பதறிப்போய் வெளியே ஓடி வந்தாள், “டே டேய்,” என்று அலறியவளாக. “பேசறதைப் பாரு! ஒனக்குத்தான் கல்யாணம்!”

ரவி திடுக்கிட்டான். வேகமாக அவளருகே சென்றான். “அம்மா! விளையாடாதீங்க!” என்றான் மிரட்டலாக.

இப்போது, மணி காரிலிருந்து இறங்கிக்கொண்டார். “எங்க மகனுக்குக் காலாகாலத்திலே ஒரு கல்யாணம் செஞ்சு பாக்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்காதா?” என்று, மனைவியின் சார்பில் பதிலளித்தார்.

பூரித்துப்போய், “அதானே! ஒன் வயசிலே ஒங்கப்பாவுக்கு..!” மையல் விழிகளுடன் பார்த்தாள்.

“இதானே வேணாங்கிறது! பாக்கியம்! நீ அடிக்கடி என் வயசை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கே! அப்புறம் நான்..!” விளையாட்டாக மிரட்டினார்.

“இன்னும் எளமை இருக்குன்னு காட்டிக்க ஏதாவது அசட்டுக் காரியம் செய்வீங்க! எனக்குத் தெரியாதா!” என்று தானும் சாடினாள் பாக்கியம்.

ரவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தாய், தந்தை இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

மணி ஆரம்பித்தார்: “இதோ பாரு, ரவி! இது ஒனக்கு எல்லா விதத்திலேயும் ஏத்த பொண்ணு. நல்லாப் படிச்சிருக்கு. எங்களுக்கும் பிடிச்சிருக்கு!”

“அப்பா!” அலறினான் ரவி. “நீங்களாவது என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நம்பிக்கையா இருந்தேன். இப்படி சதி செய்யறீங்களே!”

“நீங்க ஒண்ணும் இப்போ கல்யாணம் பேசப் போகவேணாம். இப்ப ராகு காலம்!”பாக்கியம் குறுக்கிட்டாள். “ஒங்களுக்கும் வீட்டிலேயே இருந்து சலிப்பா இருக்கு, பாவம்! எங்கேயாவது போயிட்டு வாங்க!”

மணி நமட்டுச் சிரிப்புடன், மகன் முதுகில் ஒரு கை வைத்துத் தள்ளினார். “காரை எடுடா. போற வழியிலே எல்லாம் சொல்றேன்!”

“எங்கேப்பா?” மீண்டும் கேட்டுவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டான்.

“அட, என் வயசுக்காரங்க யாராவது.. ஒண்ணு, ரெண்டு பேராவது உசிரோட இருக்க மாட்டாங்களா! போய் பேசிட்டு வரேன். அடுத்த வருஷம் யார் இருக்கப்போறோமோ, என்னமோ!”

“ஒங்களுக்கென்னங்க! ரவியோட சேர்த்து ஒங்களைப் பாத்தா, அவனோட அண்ணன்னுதான் ஒங்களைச்சொல்வாங்க!”என்று பாக்கியம் புகழ்ச்சியாகச் சொல்ல, ரவி அவசரமாகக் காரில் ஏறினான். “சீக்கிரம் வாங்கப்பா. எனக்கு மயக்கமே வரும்போல இருக்கு!”

கார் ஓடிக்கொண்டிருந்தது. மணி நடந்ததை விவரித்தார்.

ரவியின் பூரிப்பை ரசித்தபடி, “ஹனிமூனுக்கு எங்கே போறதா உத்தேசம்?” என்று அக்கறையோடு விசாரித்தார்.

“பங்கோர் தீவுதான்! அழகான எடம்னு, வெள்ளைக்காரன் படம் பிடிச்சு, டி.வியில போடறான். இங்கேயே பிறந்து வளர்ந்திருக்கேன், நான் இன்னும் அங்கே போனதில்ல, பாருங்க!”

தான் என்றோ சொன்னதை, வார்த்தை பிசகாமல் சொல்கிறானே, பாவிப்பயல்!

முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொள்ள மணி பாடுபட்டார்.

“எதுக்குப்பா கேக்கறீங்க?”

“இல்ல.., நானும் ஒங்கம்மாகூட எங்கேயாவது போகலாம்னு..!” மென்று விழுங்கினார். “நீங்க போற எடத்துக்கே நாங்களும் வந்துவெச்சு.. சிறிசுங்க ஒங்களுக்கு எதுக்கு எடைஞ்சல், சொல்லு!”

`இடைஞ்சல் யாருக்கு, ஒங்களுக்கா, எனக்கா?’ என்று எண்ணமிட்ட ரவியின் முகத்தில் புன்னகை அரும்பியது.

பாதி வழியில் இறங்கிக்கொண்ட மணி, “என்னைக் கேட்டா, நீங்க ஏதாவது மலைப்பிரதேசமா போகலாம். சும்மாவா மலாயான்னு பேரு, நம்ப நாட்டுக்கு! அங்கதான் குளிரும். அப்போ..!” என்று கண்ணடித்தார்.

சிரித்தபடி, ரவி காரைக் கிளப்பிக்கொண்டு போனான். ஆனால், அப்பா தன்னை ஏமாற்றிவிட்டது உறுத்திக்கொண்டே இருக்க, தானும் வேறு யாரையாவது முட்டாளாக்கினால்தான் மனம் அமைதியடையும் என்று தோன்றியது.

கைத்தொலைபேசியை எடுத்தான்.

`எவனாவது போலீஸ்காரன் பாத்துவெச்சா, முந்நூறு வெள்ளியில்ல தண்டம் அழணும்!’ என்று புத்தி இடிக்க, காரை ஒதுக்குப்புறமாக நிறுத்தினான்.

“ஹலோ, ராதி. எங்கம்மா என்னோட கல்யாணத்துக்கு — அவங்களுக்குப் பிடிச்ச பொண்ணாப் பாத்து — ஏற்பாடு செய்துட்டாங்க. என்னால ஒண்ணுமே பண்ண முடியல. சாயந்திரம் ஆறு மணிக்கு ஒங்க வீட்டுக்கு வந்து, விவரமாச் சொல்றேன்!” என்று ஒரே மூச்சில் சொன்னான். முகத்தில் வெற்றிப் புன்னகை.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *