8 இனிப்பும் காரமும்

இரவு வேளைகளில் தனியே வெளியே போகும் மாப்பிள்ளையின் கெட்ட பழக்கத்தை எப்படி முறியடிப்பது என்று முதல்நாள் இரவு பூராவும் பாக்கியம் யோசித்தபடி இருந்தாள்.

`ஒருத்தனோட இதயத்துக்குக் குறுக்கு வழி அவனோட வயிறு மூலமாகத்தான்!’ என்று கணவர் அடிக்கடி சொல்லும் பழமொழி சமயத்தில் நினைவு வந்தது.

மறுநாள் காலை, மகளைத் தூது அனுப்பினாள்.

“ஏங்க, ஒங்களுக்கு இனிப்பு பிடிக்குமான்னு அம்மா கேக்கறாங்க!”

வைத்திக்கு எரிச்சலாக இருந்தது.

`நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க. இப்பவே ஒருத்தரையொருத்தர் சரியா புரிஞ்சுக்கணும்,’ என்று, தம்பி வீட்டுக்குச் சென்றுவிட்ட பாட்டிக்கு இருந்த இங்கிதம் இந்த மாமியாருக்கு இல்லையே! அடிக்கடி வந்து விடுகிறாள், சமைத்துப் போடுகிறேன் என்ற சாக்கில். இதையெல்லாம் சொன்னால், சண்டைதான் வரும்.

பதிலுக்கு, “நீதான் ஸ்வீட்டா பக்கத்திலேயே இருக்கியே!” என்று வழிந்தான்.

“கேட்டா, ஒழுங்கா பதில் சொல்லுங்களேன்!”

அதற்குமேல் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. “நீ என்ன, என்னோட டீச்சரா?” என்று இரைந்தவன், ”அதான் சொல்றேனே, ஸ்வீட் பிடிக்காதுன்னு!” என்று அலறாத குறையாகக் கத்தினான், மனைவியை எதற்கோ தூண்டிவிட்டிருந்த மாமியார் காதிலும் விழட்டுமென்று.

“அடடா! ஒங்களுக்குப் பிடிக்கும்னு நினைச்சு, வெண்ணையைக் காய்ச்சி, நெய் செஞ்சு வெச்சிருக்கேன், வாசனையா!” என்றபடி பாக்கியம் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“அவருக்குப் பிடிக்காட்டி என்ன! எனக்குப் பிடிக்கும். பண்ணுங்கம்மா!”

“எனக்குப் பிடிக்காதுங்கறேனில்ல?”

“பிடிக்காட்டி சாப்பிடாதீங்க. எங்..கம்மா! எனக்குப் பிடிச்சதைத்தான் செய்வாங்க. ஏம்மா?”

“இதுக்கென்னடி தர்க்கம்? ஒரு இனிப்பு, ஒரு காரம் பண்ணினாப் போச்சு!”

“நல்லாச் சொல்லுங்க அவகிட்ட. எல்லாத்துக்கும் மல்லுக் கட்டிக்கிட்டு நிப்பா!”

ரஞ்சி அவனுக்கு அழகு காட்டியது பாக்கியத்தின் கண்களுக்குத் தப்பவில்லை.

அன்று மத்தியானம்.

“மிக்ஸ்சர்!” வைத்தியின் அருகே ஒரு தட்டை வைத்தாள் பாக்கியம். “ஒங்களுக்குக் காரம் போதுமோ, என்னவோ!”

`இவங்களுக்குத்தான் போலியா உபசாரம் செய்யத் தெரியுமோ?’ என்ற ரோஷத்துடன், “ஒங்களுக்கு ரொம்பச் சிரமம்!” என்றான் வைத்தி.

அதை நம்பிய பாக்கியத்தின் முகம் விகசித்துப்போயிற்று.

“கூடவே ஏதாவது ஸ்வீட்டும் இருந்தா நல்லா இருக்கும்!”

அவன் குரலைக் கேட்டு ஆத்திரத்துடன் வந்த ரஞ்சி, “மொதல்லே, `காரம்தான் வேணும். ஸ்வீட் பிடிக்காது’ன்னு சொல்லிட்டு..! நீங்க குடுக்காதீங்கம்மா, சொல்றேன்!”

“சும்மா இருடி,” என்று அடிக்குரலில் கண்டித்த தாயை லட்சியம் செய்யாது, வைத்தி கையிலிருந்த உருண்டையைப் பிடுங்கப்போனாள். “இது.. அம்மா எனக்காக செஞ்சது!”

கையை பின்னால் ஒளித்துக்கொண்டு, “எங்க அத்தை பண்ணினது! அதனால எனக்குத்தான்!” என்றவன் அதை ஒரு கடி கடித்துப் பார்த்துவிட்டு, “ரொம்ப நல்லா இருக்கு, அத்தை, நெய் வாசனை கமகமன்னு! இன்னும் ரெண்டு கொண்டாங்க!” என்று கேட்டுக்கொண்டான்.

“மொதல்ல வேண்டாங்கிறது! அப்புறம், என் பங்கையும் சேர்த்துச் சாப்பிடறது!” பொருமினாள் சகதர்மிணி.

“ரஞ்சி! இங்க வா, சொல்றேன்! மானத்தை வாங்காதே!” சமையலறையிலிருந்து பாக்கியம் குரல் கொடுக்க, “போங்க! எல்லாரும் ஒரே பக்கம் சேர்ந்துக்குங்க! நான் எங்கேயாவது தொலைஞ்சு போறேன்!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள் ரஞ்சிதம்.

License

இனிப்பும் காரமும் Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *