15 இதுதான் உலகம்

`காதல்’ என்றாலே கிளர்ச்சி, சிரிப்பு, நிறைவான எதிர்காலம் என்றுதான் நினைத்திருந்தான் ரவி. தன் பெற்றோரைச் சந்திக்க ராதிகாவை அழைத்துப் போனதிலிருந்து அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது.

பெற்றோரை மீறித் தான் அவளை மணக்க சித்தமாக இருக்கிறோம். அது அவளுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லையா? இல்லாவிட்டால், தொலைபேசியில் அழைத்தால்கூட, உடனே அந்த இணைப்பைக் கத்தரித்துவிடுவாளா?

வேலை முடிந்ததும், அவளுடைய வீட்டுக்கே போய் சந்திக்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தான். ராதிகாவைப் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே புத்துணர்ச்சி பிறந்தாற்போல் இருந்தது.

பெரிய காம்பவுண்டுக்குள் அமைந்திருந்தது அவ்வீடு. அந்த இடத்தின் மகிமை கூடுவதற்குமுன், அவளுடைய தாத்தா தனது ஆயுள்கால சேமிப்புப் பணத்தை எல்லாம் கொட்டி, அவ்வீட்டை வாங்கிப் போட்டிருந்தார். இப்போது அவரில்லை. ராதிகாவும், அவளுடைய அம்மா பவானியும்தான் ஒருவருக்கு ஒருவர் துணை. அவர்களுக்கு ப்ரூஸ் துணை.

ரவி கேட்டருகே நின்றுகொண்டு, அழைப்பு மணியை அழுத்தக் கையைத் தூக்கியபோது, உற்சாகமாக வாலை ஆட்டியபடி ப்ரூஸ் குரைத்தது. திரைச்சீலையை விலக்கியபடி பார்த்தது ஒரு முகம்.

“ராதிகா இல்லியே!”

புறப்படும்போது இருந்த உற்சாகம் வடிந்துபோயிற்று. அடுத்து என்ன செய்வது என்று புரியாது, விழித்தபடி நின்றான்.

அவனுடைய தடுமாட்டத்தைக் கண்ட பவானி, “வரேன்!” என்று குரல் கொடுத்தாள்.

இருவரும் எதிரும் புதிருமாக, அழகிய வேலைப்பாடமைந்த தாழ்வான மர நாற்காலிகளில் உட்கார்ந்த பின்னரும், ரவிக்குப் பேச நாவெழவில்லை.

மெள்ள, “ஆன்ட்டி! ராதிகாவை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன்..” என்று இழுத்தான் ரவி.

“ஓ!” தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள் பவானி.

“தெரியுமா?”

“ஊகும்!”

“என்ன ஆச்சுன்னு நீங்க கேக்கலியே!”

பவானி சிரிக்க முயன்றாள். முடியவில்லை. தோள்கள் கோணலாகச் சரிய உட்கார்ந்திருந்த அவளும், கூனியபடி அமர்ந்திருந்த ரவியும் ஒரே அலைவரிசையில் இருந்ததை அவர்கள் உடலாலேயே ஊகிக்க முடிந்தது.

“இப்போ எதுக்குப்பா வந்திருக்கே?”

“நீங்கதான் ராதிகாகிட்ட சொல்லணும். மத்தவங்க..,”இரு கரங்களையும் அலட்சியமாக வீசினான், `எப்படியோ தொலைகிறார்கள்!’என்பதுபோல். “பெண்ணுக்கு அம்மா நீங்க இருக்கீங்க. ரெஜிஸ்டர் ஆபீசில..”

பவானியின் கண்களில் லேசான சிரிப்பு. “இதைப்பத்தி ராதிகிட்ட சொல்லி இருந்திருப்பியே?”

வேதனையுடன் தலையசைத்தான் ரவி. “மாட்டேன்னு ஏன் சொல்லணும்? அதான் எனக்குப் புரியல. நான்தான் சட்டபூர்வமா..,” என்று ஆரம்பித்தான்.

பவானி எழுந்தாள். ஜன்னலுக்கு வெளியே தெரிந்த காட்சியை வெறித்தாள். “ஒனக்கு இந்த ஒலகம் புரியல, ரவி. நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய நிலைமை. ஆனா, மத்தவங்களைப்போல, ஆபீஸ் முடிஞ்சதும், கூட வேலை செய்யறவர் ஒருத்தர் காரில நான் வீடு வர முடியாது. இது என் அனுபவத்தில பாத்தது. ஒரு தடவை, தெரியாத்தனமா, அப்படி நடந்தப்போ, அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் வெளியே நின்னு வேடிக்கை பாத்தாங்க. `ஒனக்கு.. அப்படி என்னம்மா வேலை?’ இப்படிக் கேட்டவங்களும் உண்டு!” அவளுடைய சோகம் அந்த அறை முழுவதும் வியாபித்ததுபோல் இருந்தது.

ரவி வாளாவிருந்தான். தான் எது சொன்னாலும் சரியாக இருக்காது என்றவரை அவனுக்குத் தெரிந்தது.

“நீ மொதல் தடவை எங்க வீட்டுக்கு வந்தப்போவே, நீ மத்தவங்கமாதிரி இல்லேன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஒங்கப்பா, அம்மாவும் அப்படித்தான் இருப்பாங்கன்னு நினைச்சது என் தப்பு!” அம்மாதுவின் குரலில் விரக்தி. “ராதி ஒன் ஃப்ரெண்டா இருக்கலாம். ஆனா, மத்தவங்க அவளை என் மகளா இல்ல பாக்கறாங்க!”

பேசுவதற்கு இனி எதுவுமில்லை என்று புரிந்தவனாக, ரவி மெள்ள எழுந்து, வாயிலை நோக்கி நடந்தான், ஒரு தலையசைப்போடு விடைபெற்றுக்கொண்டு.

பவானியின் குரல்அவனைப் பின்தொடர்ந்தது. “இத்தனை வருஷத்தில ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன. ஒரு குடும்பத்தில தப்பு செஞ்சது யாரா இருந்தாலும், தண்டனை அனுபவிக்கறது என்னமோ பொண்ணுதான்!”

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *