19 ஆண்களே மோசம்

வீட்டில் நடப்பதை எல்லாம் கண்டும் காணாததுபோல் இருந்த மணிக்கு அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

“என்ன பாக்கியம்? ஒன் பொண்ணு ஒரேயடியா இங்கேயே வந்துட்டாப்போல இருக்கு?”

ஒரு தேங்காயைக் கையில் பிடித்துக்கொண்டு, வெகு நேரமாக அதை ஆட்டுக்கல்லின்மேல் அடித்து உடைக்க முயன்றுகொண்டிருந்த பாக்கியம் திரும்பிப் பாராமலேயே, “கண்டவன்கிட்ட அடி திங்கணும்னு என் கொழந்தைக்கு என்னங்க தலையெழுத்து!” என்றுவிட்டு, மாப்பிள்ளைமேல் இருந்த கோபத்தை எல்லாம் திரட்டி, கைத்தேங்காய்மேல் காட்ட, அது இரண்டாக உடைந்தது.

இம்மாதிரி கடினமான காரியங்களுக்கெல்லாம் எப்போதும் தன் உதவியை எதிர்பார்ப்பவள், இன்று மொத்த ஆண்வர்க்கத்தின்மீதே ஆத்திரமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டார் மணி. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் சாதாரணமாக, அவள் கண்ணிலேயே படாது ஒதுங்கி, தானுண்டு, தன் செடிகள் உண்டு என்று போய்விடுவார்.

ஆனால், அன்று அவருக்கே ஆச்சரியம் எழ, “வைத்தி.. அடிக்கிறானா? அதுக்கெல்லாம் ஒடம்பில சக்தி வேணாம்?” என்ற கேள்வி தானாகப் பிறந்தது.

பாக்கியம் கொந்தளித்தாள். “இருக்கீங்களே, நீங்களும்! யாரோ மூணாம் மனுசனுக்குப் பரிஞ்சு பேசுங்க!” கணவர் இப்படி அநியாயமாக கட்சி மாறிவிட்டாரே என்ற வருத்தம் அவளுக்கு. கண்ணீர்கூட வந்தது.

அலட்சியமாகக் கையை வீசினார் மணி. “எல்லாம் அவனும் நம்ப குடும்பம்தான்! எப்போ அவன் வாரிசு நம்ப பொண்ணு வயத்திலே வளருதோ..!”

`எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டே இவர் அமர்த்தலாக இருக்கிறதைப் பாரேன்!’ என்று குமைந்தவளாக, “மாசமா இருக்கிற பொண்ணை கைநீட்டி அடிச்சிருக்காரு, பாருங்க!” என்று முறையிட்டாள்.

`கையை நீட்டாம, மடக்கிட்டா அடிப்பாங்க?’ என்று மனதில் எழுந்ததைச் சொன்னால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பயந்தவராக, மௌனம் சாதித்தார் மணி.

“கீழே பிடிச்சு வேறயில்ல தள்ளியிருக்காரு! ஏதாவது ஏடாகூடமா ஆகியிருந்தா?” என்று பொறுமிய பாக்கியம், “கேக்க ஆளில்லேன்னு நினைச்சுக்கிட்டாரா?” என்று உறுமினாள்.

மணியின் பொறுமை எல்லை கடந்தது. “நேரா போய் பாத்தமாதிரி சொல்லாதே, பாக்கியம்!” என்று கண்டித்தார்.

“முந்திமாதிரி நான் அடிக்கடி போய் வந்துக்கிட்டிருந்தா, இவ்வளவு தூரம் முத்தி இருக்குமா? எல்லாம் ஒங்களாலதான்!”

சமரசப் பேச்சில் இறங்கினார் மணி. “பாக்கியம்! ரஞ்சி சொல்றதை எல்லாம் அப்படியே எடுத்துக்கக் கூடாது. ஓயாம படம் பாத்துப் பாத்து, அவ இல்லாததையெல்லாம் கற்பனை பண்ணிக்குவா! இப்ப என்னதான் செய்யப்போறே?”

“சொல்லணுமா? ரஞ்சி இனிமே இங்கதான் இருக்கப்போறா. அந்த ஆளு புத்தி திருந்தி, அவ காலிலே விழுந்து மன்னிப்பு கேட்டா சரி. இல்லாட்டி..,” அவள் முடிப்பதற்குள், அந்த இடத்தைவிட்டு விலகினார் மணி.

தான் இன்னும் அங்கேயே நின்றால், வைத்தியை அடுத்து, ஆண்குலத்தில் பிறக்க நேரிட்ட துர்பாக்கியத்துக்காகத் தனக்கும் சேர்த்துப் பாட்டு விழும், அது அவசியம்தானா என்று அவரது அறிவு தக்க சமயத்தில் எச்சரித்ததே காரணம்.

License

ஆண்களே மோசம் Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *