48 அவள் முடிவு

ராதிகாவின் வீட்டை அடைந்தான் ரவி, மனங்கொள்ளா பூரிப்புடன்.

வாயிற்கதவு திறந்தே இருந்தது. இருமுறை அழைத்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தவனின் கண்ணில், மேசைமேல் திறந்தே வைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காகிதம் பட்டது. பரபரப்புடன் அதனருகே சென்று, அதைக் கையால் தொடவும் பயந்தவனாய், குனிந்து படிக்க ஆரம்பித்தான்.

“அன்புள்ள ரவி,

உங்களை மணக்கும் பாக்கியம் இல்லாவிட்டாலும், நம் நட்பாவது நீடித்திருக்கிறதே என்று மகிழ்ந்தேன். ஆனால், உங்கள் அம்மாவின் அபிமானத்திற்குரிய மருமகள் என்னை ஏற்பாளா? ஆகையால்..”

அத்துடன் நின்றது கடிதம்.

“ஐயோ ராதி!” என்று கத்தியபடி, உள்ளே ஓடினான்.

குளியலறை மூடியிருக்க, பயங்கரமான சந்தேகம் முளைத்தது. காலால் அதன் கதவை ஓங்கி உதைக்கப்போனான்.

அப்போது, எதிர்பாராவிதமாக கதவு திறக்க, தலையைத் துவட்டியபடி வெளியே வரவிருந்த ராதிகாவின்மேல் விழுந்தான்.

“வாழ்த்துகள்!” என்றாள் அவள், சிரிக்காமல். அந்தக் குரலில் இருந்த ஏதோ அவள் திட்டமிட்டுத் தன்னை ஏமாற்றியதை அவனுக்கு உணர்த்த, திகைத்தான்.

“ஒனக்கு மொதல்லேயே தெரியுமா?”

“என்னைவிட்டா, வேற எந்த பைத்தியக்காரி ஒங்களைக் கட்டிப்பா! இது ஒங்கம்மாவுக்கே புரிஞ்சு போயிருக்கணும்!” மானசீகமாக, தனக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்த வருங்கால மாமனாருக்கு நன்றி செலுத்தினாள் ராதிகா.

“என்னை முட்டாளாக்கலாம்னு பாத்தீங்களே! எப்படி நம்ப நாடகம்?” புருவத்தை மேலும் கீழும் உயர்த்தி, கட்டை விரலை ஆட்டியபடி அவனைக் கேலி செய்தாள்.

போலிக்கோபத்துடன், வெளியே நடப்பதுபோல் பாவனை செய்தான் ரவி.

“ஒரு சந்தோஷமான தாம்பத்தியத்திலே நிறைய சண்டை பூசல் இருக்கணும். அதுக்குத்தான் ஒத்திகை!”

”நல்ல ஒத்திகை! ஒரு நிமிஷம் எனக்கு மூச்சே நின்னு போச்சு, தெரியுமா?”

“கவலைப்படாதீங்க. கோவிச்சுக்கிட்டுப் போக, அம்மா வீடு கிடையாது எனக்கு!” இதுவரை கலகலப்பாக இருந்தவளின் குரல் அடைத்துப்போயிற்று.

அவளை எப்படி சமாதானம் செய்வதென்று ரவிக்குப் புரியவில்லை. சமாளித்துக்கொண்டு, “அம்மா வீடுன்னதும், ரஞ்சி ஞாபகம்தான் வருது. பாவம், வைத்தி! `அம்மா இல்லாத பொண்ணாப் பாத்து கல்யாணம் செஞ்சிருக்கணும்’னு இப்ப கெடந்து அடிச்சுக்கறான்!”என்று சிரித்தான். “நாளைக்கு என் தங்கைக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வைத்தியம் வெச்சிருக்கேன்!”

பேச்சின் திசை மாற, காதலர்கள் இருவரும் தங்களைப்பற்றி மறந்து, ரஞ்சி-வைத்தியின் பிரச்னையைப்பற்றி அலச ஆரம்பித்தார்கள்.

License

பெண்களோ பெண்கள்! Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *