43 அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும்

அலுவலக வேலை முடிந்ததும், மிஞ்சிய நேரத்தை எல்லாம் கிளப்பில் கழித்தான் வைத்தி.

காண்டீனில் சூடான பானங்களுடன், `குவே’ எனப்படும், வெண்ணையோ, நெய்யோ கலக்காத மலாய் கேக் வகைகள், சமோசா முதலியவை மலிவாகக் கிடைத்தன.

உடலுக்கு ஊட்டமளிக்காத, ஆனால் செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்பட்டதால் மேலும் மேலும் தின்னும் ஆசையை உண்டுபண்ணும் தண்டத்தீனிகளும் பாக்கெட்டு பாக்கெட்டுகளாகத் தொங்கிக்கொண்டிருந்தன.

சிகரெட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது சிலருக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், நல்ல காற்றை எல்லாருமே சுவாசிக்க முடிந்தது.

சாப்பாட்டில் மனம் செல்லாமல், ஒரு கோப்பை டீயை வைத்துக்கொண்டு, அதற்குள் எதையோ கண்ணாலேயே துழாவிக்கொண்டிருந்த வைத்தியின் அருகே வந்தான் ரஹீம்.

“இங்க பாரு, வைத்தி! நடந்ததை மறந்துடுன்னு சொல்லல. அதுக்காக, இன்னும் எத்தனை காலம்தான் இப்படி உனக்குப் பழக்கமே இல்லாத குழந்தைக்காக உருகிக்கிட்டே இருக்கப்போறே?” என்று கனிவுடன் கேட்டான். அவனுடைய பெரிய உடல் ஆகிருதிக்கும் குரலுக்கும் சம்பந்தமே இருக்கவில்லை.

“என் மனைவி என்னைப் பாக்கக்கூட மாட்டேங்கிறா!” என்றான் வைத்தி, அழமாட்டாக்குறையாக.

“இன்னும் அம்மா வீட்டிலேயேவா இருக்காங்க?” ரஹீம் தன் ஆச்சரியத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டது வைத்திக்குத் தெம்பளித்தது.

“இனிமே எப்பவுமே அங்கதான்!”

“அதெல்லாமில்லை. சில பேருக்கு துக்கம் மெதுவாத்தான் ஆறும்”.

“எனக்கு மட்டும்? போனது என் குழந்தை! எனக்கு மட்டும் துக்கமில்லியா?

“ஒன்னை விடு! அது அவங்க ஒடம்பில ஒரு பாகமா இருந்தது. இப்ப திடீருன்னு காணாமப் போயிடுச்சு. வெறுமையா இருக்காதா, பாவம்!”

“நான் என்ன, வேணுமின்னா பைக்கைக் கவுத்தேன்? எல்லாரும் என்னையே குத்தவாளியா பாக்கறது எனக்குத் தெரியாதா, என்ன?” ஓயாது உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்ததில், சிறுபிள்ளைத்தனம் பிரதானமாக நின்றது.

“போனதைப்பத்தியே நெனச்சுக்கிட்டிருக்காம, நிகழ்காலத்துக்கும் கொஞ்சம் வாப்பா! கேரம்ஸ் விளையாடலாம், வா!”

“நான் வரல!”

“எப்படியோ போ!” என்று எரிச்சலுடன் நகர்ந்தவன், திரும்பினான். “சொல்ல மறந்துட்டேனே! இந்த சனிக்கிழமை எங்க வீட்டில டின்னர்”.

“இப்போ, பண்டிகைகூட இல்ல!”

”பையனுக்குப் பதிமூணு வயசாகுது, இல்ல!” ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நீட்டி, வெட்டுவதுபோல் பாவனை செய்தான்.

வைத்தி தலைகுனிந்துகொண்டான்.

“ஒன்னோட மனைவியையும் கூட்டிட்டு வா. அதைச் சொல்லத்தான் வந்தேன். பேச்சு எங்கேயோ போயிடுச்சு!”

“இத்தனை நேரமா நான் என்ன சொல்லிக்கிட்டிருக்கேன், நீ என்ன பேசறே? என் மனைவிதான்..”

“அட, தெரியும்பா. நான் போடாத சண்டையா! அப்பல்லாம், `அரிசிக் கோபமும், ஆம்படையான் கோபமும் அரை நொடி!” அப்படிம்பாங்க எங்க பக்கத்து வீட்டு மாமி”.

வைத்தி யோசனையில் ஆழ்ந்தான். “அப்படியா சொல்வாங்க?”

“ஒன் மிஸஸை திரும்ப ஒங்க வீட்டுக்கு வரவழைக்க ஒனக்கும்தான் ஒரு சாக்கு வேண்டாமா?”

License

அரிசிக் கோபமும் ஆம்படையான் கோபமும் Copyright © 2015 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *